இந்தியா முழுக்க தற்போது கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமெடுத்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பில் பிரேசிலையும், அமெரிக்காவையும் பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்து 15 ஆயிரமாக உயர்ந் திருப்பது கவலைதரக்கூடியதாகும். கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 31 லட்சத்தைத் தாண்டி மகாராஷ்டிரா, இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கே, கடந்த 5ம் தேதி முதலாக, தினசரி இரவு நேர ஊரடங்கும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது. இதேபோல், குஜராத்திலும், டெல்லியிலும், பஞ்சாப்பிலும்கூட இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு நகரத்தில் 144 தடையுத்தரவை காவல் துறை ஆணையர் பிறப்பித்துள்ளார். சட்டிஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் மாவட் டத்தில் ஏப்ரல் 9 முதல் 19 வரை 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,821-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில், மற்ற மாநிலங்களைப்போல சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலா மென்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், சென்னை மாநகராட்சி கமிஷனர் இதுகுறித்து தனது அறிவிப்பில், ""சென்னையில் தேர்தலுக்கு பின்னர், கொரோனா ஊரடங்கில் பல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். அந்த கசப்பான அனுபவத்தை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறியிருந்தார். எனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேர்தலுக்குப்பின் தமிழ்நாட்டிலும் கொரோனா லாக் டவுன் கொண்டுவரப்படும் என்ற அச்சம் பரவியது. பணிநிமித்தமாக சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் பலரும் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்குச்செல்ல முன்கூட்டியே டிக்கெட் புக் செய்திருந்தார்கள். சென்னை கமிஷனரின் அறிவிப்பால், தேர்தலுக்குப்பின் சென்னையில் தீவிரமான கொரோனா லாக்டவுன் வரக்கூடும் என்ற அச்சம் எழுந்ததால், அதற்குமுன் சென்னைக்குத் திரும்பும் எண்ணத்தில், பலரும் சொந்த ஊரில் வாக்களித்த கையோடு அவசரஅவசரமாக அடித்துப் பிடித்து சென்னைக்குத் திரும்பியுள்ளனர். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்திய போதிலும், அதிகக் கட்டணம் கொடுத்து திரும்பியிருக்கிறார்கள். மக்களின் பதட்டத்தைக் குறைக்க தமிழக சுகா தாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ் ணன், ""லாக் டவுன் அமல்படுத்தப்படும் என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், கொரோனா தடுப்பூசி போடு வதற்கான விழிப்புணர்வு இனி தீவிரப் படுத்தப்படும்'' என்றும் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், மத்திய அரசும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார். இதுதொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆன்லைன் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், முக்கிய அதிகாரிகள் பங்கெடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாய மாக்குவது, வங்கிகள், அரசு அலுவலகங்களின் செயல்பாட்டு விதிமுறை, பூங்காக்கள், விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தும் முறை, வர்த்தக நிறுவனங்கள், கடைகளைத் திறப்பதில் கட்டுப்பாடுகள், தமிழகம் முழுவதுக்குமான பேருந்து சேவைகளை இயக்குவதில் செய்யவேண்டிய கட்டுப்பாடுகள், தளர்வுகள், கூட்டங்கள், விழாக்கள் நடத்துவதில் பின்பற்றவேண்டிய கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது, மீறுவோருக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆலோசித்ததாகத் தெரிகிறது. அதேபோல, முழு ஊரடங்கு விதிக்கப்படாது என்றும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும் முடிவுகளை ஓரிரு நாட்களில் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டில் பெருத்த பாதிப்பை மக்கள் எதிர் கொண்டுள்ளதால் இம்முறை, இரண்டாவது அலையை அதிக வருமான இழப்பில்லாமல் எதிர்கொள்ளும் வகையில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமென்று தெரிகிறது.
- தெ.சு.கவுதமன்