சென்னையின் இரு முன்னாள் மேயர்கள் மோதும் தொகுதி என்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது, சைதாப்பேட்டை. தி.மு.க.வில் சிட்டிங் எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியனும், அ.தி.மு.க.வில் முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமியும் மோதுகின்றனர்.
வெள்ளப் பாதிப்புகள், வறட்சிக் காலங்கள், கொரோனா நெருக்கடிகள் என மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவித்தபோது மக்களோடு மக்களாக நின்றவர்; மேயராகவும் எம்.எல்.ஏ.வாகவும் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருப்பவர் என்கிற பெயர் மா.சுப்பிர மணியனுக்கு தொகுதிவாசிகளிடம் இருப்பதை பார்க்க முடிகிறது.
தினமும் 10 மணிநேரம் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரிக்கும் மா.சு.விடம் அவரது வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது, ’’""தொகுதியில் 2 லட் சத்து 79 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 2 லட்சம் பேரிடம் எனது ஃபோன் நெம்பர் இருக்கிறது. மேயராக இருந்த போதும், எம்.எல்.ஏ.வாக இருக்கிறபோதும் என் நெம்பர் மாறவில்லை. அதனால், எந்த நேரத்திலும் என்னைத் தொடர்புகொண்டு தங்களின் பிரச்சினைகளை மக்கள் தெரிவிக்கிறார்கள். அதனை உடனுக்குடன் தீர்த்து வைத்துள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக மக்களுக்காக பயன்படுத்தியுள்ளேன்.
87,50,000 மதிப்பீட்டில் சைதை அரசு மருத்துவமனையை சீரமைத்துள்ளேன். 1 கோடியே 61 லட்சத்திற்கு பள்ளிகளில் வளர்ச்சிப் பணிகள், 70,50,000 மதிப்பீட்டில் இளைஞர்களுக்கு விளையாட்டுத் திடல் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள், மனிதக் கழிவை மனிதனே அகற்றும் இழிவைத் துடைத்திட 40,50,000 மதிப்பீட்டில் தூர்வாரும் வாகனங்கள், 90 லட்சம் மதிப்பீட்டில் 4 இடங்களில் அங்கன்வாடி கட்டிடங்கள், 70 லட்சம் மதிப்பீட்டில் 6 இடங்களில் நியாயவிலைக் கடைகள், 2 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் 3 இடங்களில் சமுதாயநலக் கூடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற சேவைகளை செய்திருக்கிறேன்.
தொகுதியில் பட்டதாரி இளைஞர்களுக்கு இலவச கணினிப் பயிற்சியுடன் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறோம். ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு தொகுதியை பசுமை சைதையாக மாற்றியிருக்கிறோம். இத்தகைய மக்கள் பணிகளும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் மக்கள் நலன்களுக்கான அறிவிப்புகளும், தலைவர் ஸ்டாலினின் 7 உறுதிமொழிகளும் என்னை மீண்டும் வெற்றிபெற வைக்கும்'' என்கிறார் மிக உறுதியாக.
"கடந்த 5 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இல்லாத சைதை துரைசாமிக்கு எம்.எல்.ஏ. சீட்டா?' என்கிற முணுமுணுப்பு அ.தி.மு.க.வினரிடம் ஆரம்பத்தில் இருந்தது. அந்த அதிருப்தியாளர்களை தற்போது தன் வசப்படுத்திக்கொண்டார் சைதை துரைசாமி. மேயராக இருந்தபோது மக்களுக்கு செய்த நன்மைகளைச் சொல்லி ஓட்டு சேகரிக்கும் சைதை துரைசாமியிடம் அவரது வெற்றி குறித்து கேட்டபோது,’’""மக்களின் தொண்டனாக இருந்து பல சேவைகளைச் செய்திருக்கிறேன். அந்த சேவைகள்தான் எனக்கான மக்கள் சாசனம்; அங்கீகாரம் எல்லாமே.
மேயராக இருந்தபோது, குறைந்த விலையில் மூலிகை உணவகம், அம்மா உணவகம், மாநகராட்சிப் பள்ளிகளின் தரம் உயர்த்தல், கூவம்நதி சீரமைப்பு, பசுமைப் பூங்காக்கள், வீடுதோறும் 20 லிட்டர் அம்மா குடிநீர், தொகுதியில் பெருகிய கொசுக்களை ஒழித்தல், மக்களுக்கு இலவச கொசு வலை, முக்கிய தெருக்களிலும் குறுகிய தெருக்களிலும் சாலை வசதிகள் என 419 திட்டங்களை அறிவித்து அதில் 392 திட்டங்களை 5 ஆண்டுகளில் முடித்திருக்கிறோம். ஓட்டுக் கேட்கும்போது, இதையெல்லாம் என்னிடம் சொல்லி என்னையே வியக்க வைக்கிறார்கள் சைதை மக்கள். அந்தளவுக்கு நான் செய்துள்ள சேவைகள் மக்களின் நினைவுகளில் இருக்கிறது.
எந்தவொரு அரசும் செய்யாத மக்களின் நலன்களுக்கான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது எங்களின் எடப்பாடி அரசுதான். இலவச வாசிங்மெஷின், எலெக்ட்ரிக் ஸ்டவ், வருடத்துக்கு 6 சிலிண்டர்கள், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் போன்ற அறிவிப்புகள் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்துக்கான நிதி, பொங்கல் பரிசு ஆகியவைகளை அறி வித்ததைப் போலவே அதனை கொடுத்த தும் எடப்பாடி அரசுதான் என்பதால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதை யும் நிச்சயம் கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை தொகுதி மக்களிடம் இருப்பதை நான் பார்க்கிறேன். ஆக... எம்.எல்.ஏ.வாக வும் மேயராகவும் இருந்த காலத்தில் நான் செய்த சேவைகள், மனித நேய அறக் கட்டளை மூலம் செய்துவரும் இலவச மக்கள் பணிகள், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அறிவிப்புகள், எம்.ஜி.ஆர்.-ஜெய லலிதாவின் இரட்டை இலை சின்னம் ஆகிய நான்கும் என்னை வெற்றி பெற வைக்கும்'' என்கிறார் மிக நம்பிக்கையாக.
தொகுதியில் கணிசமாக இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடத் தில் உதயசூரியனுக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதேபோல ஏழை குடிசை வாசிகளிடம் இரட்டை இலை சின்னம் இன்னமும் உயிர்ப்புடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது. மேலும் நடுத்தர வர்க்கத்தினரிடம் மா.சு.வும் சைதை துரை சாமியும் சம பலத்துடன் இருக்கிறார்கள்.
கடும் போட்டியில் மா.சு. முந்துவதை நக்கீரன் சர்வே சுட்டிக்காட்டியிருந்தது. அதன்பிறகு, அ.தி.மு.க. தரப்பில் வேகம் தெரிகிறது. மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் மா.சு. தாக்குப்பிடித்து ஓடக்கூடியவர். தேர்தல் களமும் அப்படித்தான்.