"ஜகமே தந்திரம்'... தனுஷ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருப்பது கார்த்திக் சுப்புராஜ், தயாரித்திருப்பது "வொய் நாட்' சசிகாந்த். "பேட்ட' படத்திற்குப் பிறகு கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் தனுஷ் "சுருளி' என்ற மதுரை டானாக நடித்துள்ளாராம். படம் எடுத்து முடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில்... கொரோனாவால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒருகட்டத்தில் "நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியீடு' என்ற அறிவிப்பு வெளிவர, தனுஷ் ரசிகர்களும் தனுஷும்கூட கடும் ஏமாற்றம் அடைந்தனர். அந்த ஏமாற்றத்தை "கர்ணன்' கொஞ்சம் சரி செய்தது. வரும் ஜூன் 18-ஆம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் இசை விழா "ட்விட்டர் ஸ்பேசஸ்' தளத்தில் நடைபெற்றது. ஒரு படத்துக்கான விளம்பர செயல்பாடுகளில் அதன் இசை வெளியீட்டு விழா முக்கியமானது. அதிலும் பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய படங்கள் என்றால் இசை வெளியீட்டு விழா இன்னும் பிரமாண்டமாக நடக்கும். விஜய், தனது ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அரசியல் பேசி பரபரப்பை ஏற் படுத்துவார். பிற நடிகர்கள் அனைவருமே தங்களது இசை வெளி யீட்டு விழாக்களை முக்கியமாகக் கருதுபவர் கள்தான். இப்படியிருக்க, கொரோனா காரணமாக "ஜகமே தந்திரம்' படத்தின் இசை விழா, முதன் முறையாக ட்விட்டர் ஸ்பேசஸ் தளத்தில் நடந்தது.
தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக் உள்பட பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வை ஸ்டாண்ட்-அப் காமெடியன் அலெக்ஸ் தொகுத்து வழங்கினார். பதினைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்ட இதில் ரசிகர்களின் கேள்விக்கும் நடிகர் தனுஷ் பதிலளித்தார். அதில், பலரும் கேட்டிருந்த ஒரு கேள்வி "எப்போது ரசிகர்களுடன் ஃபோட்டோ ஷூட் நடத்துவீர்கள்?' என்பது. இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ், "நாம் இப்போது இருக்கும் நிலைமையில் முதலில் அனைவரும் அவரவர் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும். இப்படி எல்லா விதத்திலும் பாதுகாப்பாக இருந்து, இந்த வைரஸை முதல்ல தோற்கடிக்கலாம். அப்புறம் நிலைமையெல்லாம் சரியான பிறகு கண்டிப்பாக ஃபோட்டோ ஷூட் பண்ணலாம்'' என்று கூறினார். மேலும் "நிலைமை நன்றாக இருந்திருந்தால் நாம் அனைவரும் தியேட்டரில் கொண்டாடிப் பார்க்கும் படமாக இது இருந்திருக்கும். பார்ப்போம், விரை வில் அதற்கொரு வாய்ப்பு வரும்னு நம்புறேன்'' என்றார். அமெரிக்காவின் லாஸ்ஏஞ் சல்ஸ் நகரில் இருந்து இந்த ஆன்லைன் நிகழ்வில் கலந்துகொண்டார் தனுஷ். கொரோனா, உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது, சினிமா துறையின் செயல் முறையையும் தான்.
திரித்துச் சொன்ன வெப்சீரீஸ்... வெடித்துக்கிளம்பும் எதிர்ப்புகள்!
அமேசான் ப்ரைம் ஞபப தளத்தில் வெளியான "ஃபேமிலி மேன்-2' வெப்சீரீஸ், வெளிவரும் முன்னரே அதன் ட்ரெயிலரை பார்த்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது வெளியாகிவிட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் கொச்சைப் படுத்தும் பல காட்சிகள் இருப்பதாகக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக் களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத் தோடும் தொடரை உருவாக்கி யிருப்பதை வன்மையாக கண்டிக் கிறேன்" என்று இயக்குனர் இமயம் பாரதிராஜா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். "இந்த வெப் தொடரை புறக்கணிக்கிறேன். இந்தத் தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் பிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணைய வோ போவதில்லை'' என்று இயக்கு னர் சேரன் கூறியுள்ளார். "எம் தமிழர் வரலாற்றைத் திரித்து எடுப்பதில் என்ன இலாபமடா உங்களுக்கு? இவர்கள் திரிப்பதை எல்லாம் சரி செய்து உண்மையான வரலாற்றைப் பதிவுசெய்ய தமிழ்ப் படைப்பாளிகளும்... உலகத் தமிழர்களும் ஒன் றிணைய வேண்டும். நம் வரலாற்றை நாமே எழுதுவோம்'' என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். "தமிழ் போராளிகளின் போராட் டங்கள், சித்தாந்தங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமலும், அவர் களால் இப்பவும் எந்த நேரத்திலும் ஆபத்து என்பது போலவும் போராளிகள் பற்றிய ஒரு பொதுப் புத்தியில் எடுக்கப்பட்ட வெப் தொடர் "தி பேமிலி மேன்-2' என்று "ராட்சசன்' புகழ் இயக்குனர் ராம்குமார் கூறியுள்ளார்.
இன்னும் பலரும் இந்தத் தொடருக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில் தொடரில் மிக முக்கிய பாத்திரத்தில் நடித்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள சமந்தா, "தி ஃபேமிலி மேன்-2'’ வெப் தொடரில் நடிப்பதற் காக என்னிடம் இயக்குநர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கைத் தமிழர்கள் பற்றிய ஆவணப் படங்களைத் திரையிட்டுக் காண்பித்தனர். அதைப் பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே‘"தி பேமிலி மேன்-2'’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்துவிட்டேன். அதில் எனக்கு ராஜி என்ற பெண் போராளி வேடம். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் நடப்பது போல காட்டியிருந்தார்கள். ராஜி, மிக கவனமாகக் கையாளப்பட வேண்டிய கதாபாத்திரம். நான் அதையும் புரிந்துகொண்டு நடித்தேன். ஈழத்தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் ராஜி கதாபாத்திரத்தின் மூலம் சித்தரித்திருந்தார்கள். இலங்கைத் தமிழர்கள் லட்சக்கணக்கில் வீடு வாசல்களை இழந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளும் உள்ளன. யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல'' என்று விளக்கமளித்துள்ளார்.
-வீபீகே