மீபத்தில் மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்பட்ட கடலூரில், மாநகரச் செயலாளர் பதவியை ஐந்து பேருக்கும் துணைப் பொறுப்பாளர்கள் பதவியை 50 பேருக்கும் பங்கிட்டுக் கொடுத்து எதிர்க்கட்சியினரை வாய்பிளக்க வைத்துள்ளது அ.தி.மு.க.

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளராக அருண்மொழித்தேவன், தெற்கு மாவட்ட செயலாளராக சொரத்தூர் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் சம்பத், கிழக்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன் ஆகிய நான்கு பேர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து கட்சியினரை நிர்வகித்து வருகின்றனர். தற்போதைய உட்கட்சி தேர்தலில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றமில்லாமல் மீண்டும் அவர்களே தொடர்கிறார்கள்.

sampath

Advertisment

மாவட்ட செயலாளர்களில் அருண்மொழித்தேவன், அமைச்சர் சம்பத் இருவருக்கும் எப்போதும் ஒத்துப்போகாத அளவுக்கு முரண்பாடுகள் உண்டு. அருண்மொழித்தேவன் ஆதரவாளர் தெற்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. பாண்டியன். இவர் மாவட்டச் செய லாளர் ஆனபிறகு பழைய அளவுக்கு நெருக்கத்தைக் காட்டாமல் அருண் மொழியுடன் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் தொடர்பில் உள்ளதாகக் கூறுகின்றனர். வடக்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தனி ஒருவன் என்ற ரீதியில் அரசியல் செய்துவருகிறார். ஆனால் முன்னாள் அமைச்சர் சம்பத்துடன் தொடர்பில் உள்ளார். முன்னாள் அமைச்சர் சம்பத்தின் கிழக்கு மாவட்டத்தில் உள்ளது கடலூர் மாநகரம். இங்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் சம்பத். மீண்டும் எப்படியும் இங்கு நின்று வெற்றி பெறவேண்டும் என்று தீவிரமாக உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உள்கட்சித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் கட்சிப் பொறுப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இதில் கடலூர் மாநகரச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் வீரமணியிடம் மாநகரச் செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தனர். மாவட்டச் செயலாளர் சம்பத், தேர்தல் அதிகாரி வீரமணி ஆகியோர் மனு கொடுத்த அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாநகரத்தைப் பிரிக்காமல் ஒரே செயலாளர் பதவியைத் தரவேண்டும். அப்போதுதான் கட்சிப் பணியை சரியாக செய்யமுடியும். அப்படி கொடுத்தால் அந்த பதவி எனக்குத் தேவை. பதவியைக் கூறுபோட்டால் அந்தப் பதவி வேண்டாம் என்று மாவட்டச் செயலாளர் சம்பத்தின் ஆதர வாளரான எம்.ஜி.ஆர். இளைஞரணியைச் சேர்ந்த சேவல்குமார் தெரிவித்துவிட்டு போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். இவரைத் தவிர, கெமிக்கல் மாதவன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், தொழில்நுட்ப பிரிவு வெங்கட்ராமன், நகரத் துணைச் செயலாளர் கந்தன், அ.தி.மு.க.விலிருந்து தினகரன் கட்சிக்கு சென்றுதிரும்பிய வினோத்குமார் இப்படி பலரும் இந்தப் பதவிக்கு முட்டிமோதினார்கள்.

ss

Advertisment

இதில் பெரும்பாலானவர்கள் அமைச்சர் சம்பத்திற்கு நெருக்கமானவர்கள். விசுவாசிகள். ஆதரவாளர்கள் யாரையும் பகைத்துக்கொள்ள விரும்பாத சம்பத் அதிரடியாக ஒரு முடிவெடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோருடன் கலந்து பேசி தேர்தல் அதிகாரி வீரமணி மூலம் செயல்படுத்தி அதிரடி காட்டியுள்ளார். அதன்படி மாநகராட்சி 45 வார்டுகளைக் கொண்டது. அதில் 9 வார்டுகளுக்கு ஒரு மாநகராட்சி செயலாளர் பதவி என்று முடிவுசெய்து எம்.ஜி.ஆர். இளைஞரணி பதவியிலிருந்த கெமிக்கல் மாதவனுக்கு திருப்பாப்பாதிரிப்புலியூர் பகுதி மாநகரச் செயலாளர், நகரத் துணைச் செயலாளராக இருந்த கந்தனுக்கு முதுநகர்பகுதி மாநகரச் செயலாளர், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மனைவி கவுன்சிலர் உமாமகேஸ்வரிக்கு புதுக்குப்பம் பகுதி மாநகரச் செயலாளர், தொழில்நுட்ப பிரிவு வெங்கட்ராமனுக்கு மஞ்சக்குப்பம் பகுதி மாநகரச் செயலாளர், வினோத்குமாருக்கு துறைமுகம் பகுதி மாநகரச் செயலாளர் இப்படி ஐந்து பேருக்கும் மாநகராட்சி செயலாளர் பதவியைக் கூறுபோட்டுக் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு மாநகராட்சி செயலாளருடன் 10 துணை பொறுப்பாளர்கள் என கடலூர் மாநகரத்தில் அ.தி.மு.க.வில் 50 பொறுப்பாளர்கள் நிறைந்து வழிகிறார்கள். இதுகுறித்து அ.தி.மு.க.வினரிடம் நாம் கேட்டபோது, "இப்படி பதவியை பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்தன்மூலம் கட்சி பலப்படும். அவரவர் பகுதியிலுள்ள கட்சியினரை எளிதில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுப்பதோடு அப்பகுதி மக்களுக்கும் உதவி செய்யமுடியும் கடலூர் மாநகரத்தில் அ.தி.மு.க. வலிமைபெறும்'' என்கிறார்கள்.

இந்த மாநகரச் செயலாளர் போட்டியில் மாநில மீனவரணி இணைச் செயலாளராக உள்ள கே .என். தங்கமணி துறைமுகம் பகுதி மாநகரச் செயலாளர் பதவிகேட்டு சம்பத்திடம் வலியுறுத்தியுள்ளார். அவரோ, "நீங்கள் மாநில பொறுப்பில் இருக்கிறீர்கள். அப்படியிருக்கும்போது மாநகரச் செயலாளர் பொறுப்பு கேட்பது முறையா?''’என்று அவரை மடக்கிவிட்டார்.

அ.தி.மு.க.வில் பதவிபெற்ற மாநகர பகுதிச் செயலாளர்கள் ஐவரும் மாவட்டச் செயலாளர் சம்பத்துக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். இப்படி பதவிகளை பங்கு போட்டுக் கொடுத்தது மூலம் கட்சி வளருமா? கோஷ்டி வளருமா? என்பது இனி வரும் காலங்களில்தான் தெரியவரும் என்கிறார்கள் கடலூர் மாநகர அரசியல் முன்னோடிகள்.