ஸ்டாலின் சொல்றாரு.. எடப்பாடி செய்றாரு… என அரசின் அறிவிப்புகள் குறித்து மீம்ஸ்கள் வெளியாகும் போது அது கட்சித் தலைமைக்கு பரவசத்தை ஏற்படுத்தும். அதே நேரத்தில், வாக்குகளாக மாற வேண்டிய நேரத்தில் பதற்றத்தை உருவாக்கி விடக்கூடாது'' என்றார் வடமாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.கவின் முக்கிய நிர்வாகி ஒருவர்.

ipack

அவர் மேலும், “10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் உள்ளதால் மக்களிடம் அதிமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது, இந்த அதிருப்தியை அந்த கட்சி மீது வெறுப்பாக மாற்றி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

ரோடு- குடிநீர்- தெருவிளக்கு- மருத்துவமனை- வேலைவாய்ப்பு- பணப் புழக்கம் எல்லாம் இந்த ஆட்சியில் சீரழிந்து கிடக்கிறது. மக்களிடம் ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு உள்ளது. அதைத்தான் தி.மு.க முன்னிலைப்படுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபின், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை விளக்க வேண்டும்.

Advertisment

ஐ-பேக் ஆலோசனைப்படி தொகுதிவாரியாக ஸ்டாலின் குறை கேட்கிறார். மக்களும் குவிந்து, குறைகளைக் கொட்டுகிறார்கள். இதன் பல்ஸ் பார்த்து ஆளுந்தரப்பு, புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. அதற்கு ஸ்டாலின்தான் காரணம் என உரிமை கொண்டாடலாம். ஆனால், பலன் என வரும்போது அது அ.தி.மு.க.வுக்கு சாதகமாகும் வாய்ப்பு உள்ளது. இதை யார் தலைமைக்குத் தெரிவிப்பது?’என்றார் அனுபவத்துடன்.

மோடி, ஜெயலலிதா, கமல்ஹாசன் போன்றவர்களின் பிரச்சார மேடைகள் ஒற்றை நபரை முன்னிறுத்தும், தி.மு.க மேடை என்பது கட்சித்தலைவருடன் மாவட்ட-ஒன்றிய-நகர நிர்வாகிகள் இணைந்ததாக இருக்கும். அந்தப் போக்கையும் ஐ-பேக் மாற்றிவிட்டது. இது லோக்கல் நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பேனர் டிசைன் உள்பட எல்லாவற்றையும் ஐ-பேக் டீமிற்காக தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆட்கள் தீர்மானிப்பது கட்சி நிர்வாகிகளைக் கடுப் பாக்குகிறது.

ipack

Advertisment

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்கிற நிகழ்ச்சியில் கழகத்தில் உள்ள 15 தலைவர்கள் 75 நாள் பிரச்சாரம் செய்வார்கள் என நவம்பர் 20 ஆம் தேதி முதன்மை செயலாளர் கே.என். நேரு அறிவித்தார். கனிமொழி, உதயநிதி, ஐ.பெரியசாமி, அந்தியூர்.செல்வராஜ், பொன்முடி, சபாபதிமோகன், திருச்சி சிவா, திண்டுக்கல் லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன், செந்தில்குமார் எம்.பி போன்றவர்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்கள்.

ஆனால், அது முழுமை பெறவில்லை. கனிமொழி, உதயநிதி மட்டும் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள், மக்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டாம் கட்ட தலைவர்கள் அ.தி.மு.க. அரசின் அவலங்களை பேசும்போது, மக்களிடம் அது நேரடியாக ரீச்சாகும். அது ஒரு கலை. அது ஐ-பேக் போன்ற நிறுவனங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் உள்ளூர் கட்சிக்காரர்கள்.

""தற்போது நடைபெறும், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்கிற நிகழ்ச்சியில் ஐ-பேக் திட்டமிடுதலால் தொண்டர்களுக்கும் தலைவருக்கும் இடைவெளி ஏற்படுகிறது. கட்சி நிர்வாகம் பற்றி தெரியாத டீமினர் மேடை வடிவமைப்பு முதல், அதன் நீளம், அகலம் விவகாரத்தில் கூட தலையிடுகிறார்கள். ஆனால், அதனை செய்து தரவேண்டியது கட்சி நிர்வாகிகள்தான். கட்சி கடந்த பிரபலங்களை ஒவ்வொரு தொகுதியிலும் நிகழ்ச்சிக்கு அழைக்க ஐ-பேக் தரப்பில் லிஸ்ட் கேட்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் அதற்கான லிஸ்ட் கொடுத்தால், சிலரை மட்டும் அழைக்கிறார்கள். அதனால், நிகழ்ச்சி முடிந்தபிறகு உள்ளூரில் சிக்கல் ஏற்படுகிறது. அவர்களாக அழைப்பவர்களில் ஒரு சிலர் வராமல் போய்விடுகிறார்கள். அவர்களுக்குப் பதில் வேறு முக்கிய நபர்களை கொண்டு அந்த நாற்காலியை நிரப்பலாம் என்றால் அழைக்கக்கூடாது என தடுத்துவிட்டார்கள். இது தேர்தல் சமயத்தில் வாக்கு சேகரிக்கும்போது எங்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஐ-பேக்குக்கு தெரியாமல் இருக்கலாம். கட்சித் தலைமைக்குத் தெரியாதா? தலைவராக உள்ள ஸ்டாலின், முடிவெட்டும் கடையில் இளைஞர் தி.மு.கவை ஆரம்பித்து, மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளருக்காக வீடுவீடாக ஓட்டு சேகரித்து கள அனுபவம் பெற்றவர். அவரிடம் எங்களால் இதை எடுத்துச் சொல்ல முடியாமல் இருக்கிறோம்'' என புலம்பினார் ஐபேக் டீமோடு பணியாற்றிய அந்த கட்சி நிர்வாகி.

அ.தி.மு.கவிலும் ஆலோசனை டீம் உள்ளது. மற்ற கட்சிகளிலும் உள்ளது. எனினும், தி.மு.க மீதுதான் கவனம் திரும்பியுள்ளது. காரணம், அதன் கட்சி அமைப்பு அப்படிப்பட்டது. ஒற்றையடிப் பாதையில் ஓடிய வண்டிக்குப் பதில், இரட்டை தண்டவாளத்தில் ஓடும் ரயில்போல இப்போது தேர்தல் பயணத்தை மாற்றியிருக்கிறது தி.மு.க. தலைமை. தண்டவாளங்கள் ஒட்டிக் கொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில் பெரும் இடைவெளியும் இருக்கக்கூடாது. சீரான இடைவெளியுடன் நேராக சென்றால்தான், பயணத்தின் இலக்கை அடைய முடியும். இல்லையென்றால், புது வியூகம் பூமராங்காக மாறிவிடும் அபாயம் உண்டு என எச்சரிக்கை குரலில் சொன்னார் முரசொலியைப் புரட்டிக்கொண்டிருந்த 70 வயது உடன்பிறப்பு.

-து. ராஜா