2017-ல் மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பெரிய அளவில் இனப்படுகொலை நடைபெற்றது. இதில் சுமார் 30 ஆயிரம் ரோஹிங்கியாக்கள் கொல்லப் பட்டனர், 7 லட்சம் ரோஹிங்கியாக்கள் வங்கதேசம், இந்தியா, தாய்லாந்து என பிற நாடுகளுக்கு தப்பிச்சென்று அகதிகளாக உள்ளனர், உடனடியாக இந்த இனப்படுகொலையை தடுக்கவேண்டுமென சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது ஆப்பிரிக்க நாடான காம்பியா.

m

நெதர்லாந்து நாட்டிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 17 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தபோது, மியான்மர் தேசத்தின் அதிபரைவிட சூப்பர் பவரில் ஆட்சி செய்த ஆங்சான் சூகி நேரில் ஆஜராகி, ""அரசு அலுவலகங்கள் மீது போராளிகள் தாக்குதல் நடத்தியதால் இராணுவம் பதிலடி தந்தது, இராணுவம் யாரையும் கொல்லவில்லை, பாலியல் வல்லுறவில் ஈடுபடவில்லை. ரோஹிங்கியாக்கள் அவர்களாகவே நாட்டைவிட்டுச் சென்றனர், இனப்படுகொலை குற்றச்சாட்டு பொய்யானது'' என தங்கள் நாட்டு இராணுவத்தை பெருமைப்படுத்தினார்.

mm

Advertisment

உலக நாடுகள் அப்போதே அவரை எச்சரித்தன. சர்வதேச நீதிமன்றம், மக்களின் அரசாக இருங்கள், இனப்படுகொலையைத் தடுங்கள் என உத்தரவிட்டது. தன் நாட்டு இராணுவத்துக்கு சாதகமாக அன்று பேசிய ஆங் சான் சூகி, இன்று அதே இராணுவத்தின் கைதியாக, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இப்படி இராணுவம் தனக்கு எதிராகத் திரும்பும் என சூகியே நினைத்திருக்கமாட்டார், பர்மியர்களும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி இராணுவ ஆட்சியின்கீழ் வந்தது நாடு. 60 நாட்களைக் கடந்து இராணுவப் பிடியில் உள்ள மியான்மரில் என்ன நடக்கிறது?

85 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பெரும் வெற்றிபெற்ற சூகியின் கட்சி, தேர்தலில் மோசடி செய்துவிட்டது என நெருக்கடி நிலையை அறிவித்த இராணுவத் தலைமை, நாட்டின் அதிபர் உட்பட அனைவரையும் வீட்டுச்சிறையில் வைத்தது. சூகி ஆட்சியில் இருந்தபோது 6 லட்சம் டாலர்களை சட்டவிரோதமாகப் பெற்றார், தங்கக் கட்டி களைப் பெற்றார், வாக்கிடாக்கிகள் வாங்கியதில் ஊழல் என அவர்மீது அடுக்கடுக்காக ஊழல் வழக்குகளை பதிவுசெய்து விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது இராணுவம்.

Advertisment

"சூகி எங்கள் அன்னை. அவரை விடுதலை செய்யுங்கள், அவரை ஆட்சி செய்யவிடுங்கள்' என, மியான்மர் நாடு முழுவதும் மக்கள் போராட் டங்களை நடத்திவருகின்றனர். நாட்டில் பிரபல மானதும், பெரியதுமான ரங்கூன் பல்கலைக்கழகம் முதல் நாடு முழுவதுமுள்ள பள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவ அமைப்புகள் போராட்டத் தில் குதித்துள்ளன. போராட்டத்தை முன்னின்று நடத்தும் மாணவ அமைப்புகளின் தலைவர்களின் வீடுகளோடு, அந்த பகுதியில் வசிப்பவர்களின் வீடு களை இரவில் தீவைத்து எரிக்கிறது இராணுவம். இதனால் வீடுகளை, பொருளாதாரத்தை இழந்து காடுகளில் தஞ்சமடைந்து வாழ்கின்றனர் மக்கள்.

பர்மாவில் வாழும் பெரும்பான்மையின மான பர்மியர்கள், கடந்த காலங்களில் சிறு பான்மையினங்களான கரேன், கச்சின், ஆரக்கான், ரோஹிங்கியாக்கள் மீது இராணுவத்தோடு சேர்ந்து தாக்குதல் நடத்திவந்தனர். இப்போது நாடு மீண்டும் இராணுவ ஆட்சிக்குள் சென்ற தைத் தொடர்ந்து போராடும் பர்மியர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது இராணுவம். இத னால் பர்மியர்கள் மற்ற சிறுபான்மையின மக்க ளோடு இணைந்து இராணுவத்துக்கு எதிராக போராட்டத்தைத் துவங்கியுள்ளார்கள், இதனை இராணுவமே எதிர்பார்க்கவில்லை. டாட்மடா (மியான்மர் இராணுவத்தின் பெயர்) தேசத்தின் தந்தை, ""நாங்கள் நாட்டை, நம் மக்களைப் பாது காக்கவே அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி யுள்ளோம்'' என நாட்டை ஆட்சிசெய்யும் இராணுவ தலைமை ஜெனரல் மின் ஆங் ஹெலாயிங் பேசியதை மக்கள் விரும்பவில்லை.

தாய்லாந்து -மியான்மர் எல்லையில் வசிக்கும் கரேன் இன போராளிகள் தொடர்ச்சி யாக இராணுவத்தின்மீது தாக்குதல் நடத்திவரு கிறார்கள். தங்களுக்கு எதிராகப் போராடும் பர்மி யர்கள் உட்பட அனைத்துப் பிரிவு மக்களையும் சுட்டுக்கொல்லும் இராணுவத்தின் அத்துமீறல் களை சர்வதேசங்களின் பார்வைகளுக்கும் கொண்டுசெல்கின்றன வலிமையான கரேன் இன அமைப்புகள். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை மியான்மர் ராணுவம் கைது செய்து சிறையில் அடைப்பதும், துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதும் தொடர் நிகழ்வாக மாறியுள்ளது. போராட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மறுக்கும் இராணுவத்தினர் மீது தேச விரோத குற்றச்சாட்டு கள் சுமத்தி கைது செய்யும் படலமும் நடக்கிறது.

கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி மியான்மரின் காம்பாட் நகரில், "இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் செய்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தைக் கலையுங்கள்' என காவல் துறை அதிகாரி தா பெங் க்கு உத்தரவிடுகிறார் அவரது உயரதிகாரி. பலமுறை உத்தரவிட்டும் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த மறுத்துள்ளார். இதனால் அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது இராணுவம். இதனால் தனது வேலையை ராஜினாமா செய்த அவர், மார்ச் 1-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் 3 நாட்கள் ராணுவத்தினரின் கண்களில் படாமல் பயணம் செய்து இந்தியாவின் மிசோரம் மாநிலத் துக்குள் வந்து இந்தியாவில் அடைக்கலமாகியுள் ளார். "தாம் மட்டுமின்றி தமது சகாக்கள் 6 பேரும் பொதுமக்களை சுட்டுக்கொல்லும் உத்தரவுக்கு அடிபணியவில்லை, அவர்கள் விசாரணை வளையத்தில் உள்ளனர்' என கூறியுள்ளார் தா பெங்.

இராணுவத்துக்கு எதிராக மக்களோடு புத்த பிக்குகளும் களத்தில் இறங்கியுள்ளனர். போராடும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி மக்கள் கொல்லப்படுவதைத் தொடர்ந்து 1947 திரும்பி விட்டது எனப் பெரும்பான்மை மக்களான பர்மியர் கள் உட்பட மக்கள் கள்ளத்தனமாகப் படகுகளில் நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அவர்களை மியான்மர் கப்பல்படை பிடித்துவந்து முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்யத் துவங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி நிலவரப்படி இராணுவத்துக்கு எதிராக போராடிய இளைஞர்கள் இளைஞிகள், புத்த பிக்குகள், ஆண்கள் பெண்கள் என 564 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த 2-ஆம் தேதி மட்டும் 100 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டதில் 47 குழந்தைகளும் அடக்கம். இதுவரை 2751 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்கிறது மியான்மருக்கு வெளியே இயங்கும் ஒரு அமைப்பு.

mss

உண்மை நிலவரம் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும், காரணம் தகவல்களைத் தெரிந்துகொள்ளும் அளவுக்கு உள்நாட்டிலேயே இன்டர்நெட், ஈமெயில், சமூகவலைத்தளம் இயங்கவில்லை. பத்திரிகைகளும் வெளிவரவில்லை. டிவி சேனல்களும் முடக்கப் பட்டதால் நாட்டுக்குள் என்ன நடக்கிறதெனத் தெரியவில்லை, நாட்டின் நிலவரம் குறித்து வெளிநாட்டு பத்திரிகை களுக்கு தெரிவிக்கும் மியான்மர் ஊடகவியலாளர் களையும் கைது செய்து, தேச விரோதிகள் என குற்றம்சாட்டி விசாரணை நடத்தப்படுகிறது.

mmமியான்மரில் பிரபல மான ஊடகவியலாளரான தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தின் பொது விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து சிறையில் அடைத்துள்ளது. இதனை உலக பத்திரிகை யாளர் அமைப்பு கண்டித்து, உடனே விடுதலை செய்யவேண்டுமென வேண்டு கோள் விடுத்துள்ளது. அதேநேரத்தில் இராணு வத்தின் சார்பில் யூ டியூப் சேனல்கள் தொடங்கப்பட்டு நாடு அமைதிப் பூங்காவாக இருப்பதாக வீடியோக்களை பரப்ப அவற்றை முடக்கியுள்ளது யூ டியூப் நிர்வாகம்.

மியான்மர் பொருளாதாரக் கழகம், மியான்மர் பொருளாதார பொதுமக்கள் கழக அமைப்புகளின் சார்பில் மியான்மர் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் சுற்றுலாவை வளப்படுத்த 1 பில்லியன் டாலர் கடன் கேட்டிருந்தது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக இராணுவம் நாட்டை ஆட்சி செய்வது சரியல்ல, நிதி வழங்கினால் அதனை இராணுவமே பயன்படுத்தும் அதனால் தரக்கூடாது என அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார் அதிபர் பிடென்.

ஐ.நா. சபை உட்பட பல நாடுகள், மியான்மர் இராணுவ தலைமைக்கு எதிராக உள்ளன. "மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும்' என எச்சரித்துள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா மியான்மர் இராணுவ ஆட்சிக்கு ஆதரவளிக்கின்றன என்கிற கண்டனக் குரல்கள் சர்வதேச அளவில் எதிரொலிக்கின்றன. வல்லரசு நாடுகள் பொருளாதாரரீதியாக மியான்மரை வேட்டையாட வட்டமிடுகின்றன. மியான்மர் மக்களின் வாழ்க்கை இருளிலேயே இருக்குமா? பிரகாசிக்குமா? என்பதே சர்வதேச மக்களின் கேள்வியாக உள்ளது.