கெரோனா முதலாவது அலையின் அனுபவத்தைவைத்து சுதாரித்துக்கொள்ளாத இந்திய ஒன்றிய அரசின் மெத்தனப்போக் கால், இதுவரை 3.5 லட்சம் பேருக்குமேல் கொரோனாவால் உயிரிழப்பைச் சந்தித்துள்ளனர். இவ்வளவு அபாயகரமான சூழலில் அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி என்று கூறிவந்த ஒன்றிய அரசே, தனது அரசுக்கு ஒரு விலை, மாநிலங்களுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்று நிர்ணயம் செய்து, தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தடுப்பூசி வியாபாரத்தில் இறங்கியது பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இதனைக் கண்டித்து பல மாநிலங்களும் நெருக்கடி கொடுக்க, ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றமும் கடுமையான டோஸ் விட்டது.
தடுப்பூசி இறக்குமதி குறித்து முன்னுக்குப்பின் முரணாகப் பேசிவந்த ஒன்றிய அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றம் தானாகவே வழக்குப்பதிவு செய்து, நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் அமர்வு, விசாரணை நடத்தத்தொடங் கியது. இந்த அமர்வானது, ஒன்றிய அரசின் தடுப்பூசிக்கொள்கையை தேதிவாரியான பிரமாணப் பத்திரமாக இரண்டே வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டுமென்று கடிந்துகொண்டது.
மேலும், தனது உத்தரவில், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி தேவையைப் போலவே 18-44 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி தேவை இருக்கிறது. இவர்களுக்கும் இலவசமாக தடுப் பூசி அளிக்காத ஒன்றிய அரசின் செயல் தவறானது. இவர்களிடம் பணம் வசூலிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடு, பகுத்தறி வற்றது. மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு முரணாக, தடுப்பூசியை இலவசமாக அளிக்காததால், சில மாநில மக்கள் மட்டும் விலைக்கு தடுப்பூசி போடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒன்றிய அரசு தனது தடுப்பூசிக் கொள்கையை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று கண்டித்தது.
இது ஒருபக்கமென்றால் ஜூன் 7-ம் தேதி, இந்திய மருத்துவ சங்கம், பிரதமர் மோடிக்கு தனது கண்டனக் கடிதம் ஒன்றை எழுதியது, ஒன்றிய அரசுக்கு இன்னொரு பக்கம் இடியாக இறங்கியது. அந்த கடிதத்தில், அலோபதி மருத்துவத்தை குறை கூறிப் பேசிவரும், மோடியின் கார்ப்பரேட் நண்பரான பாபா ராம்தேவின் பெயரைக் குறிப்பிடாமல், அவரது செயல்பாடுகளைக் கண்டித்திருந்தது. "சிலர்' நவீன மருத்துவம் குறித்தும், கொரோனா தடுப்பூசி குறித்தும் சந்தேகத்தைக் கிளப்பி தவறாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறாத தங்களது மருந்துகளை அற்புதமானவை என்றும், கொரோனாவைக் குணப்படுத்தும் மந்திர சக்தி கொண்டவை என்றும் கூறி மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்றும் எழுதியிருந்தது. கொரோனா சிகிச்சைக்கு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தயாரிக்கும் கொரோனில் மருந்தையும் சேர்த்தது குறித்துதான் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்டவர் களுக்கு, தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
அடுத்து, அக்கடிதத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும், இந்தியாவின் பல பகுதிகளில், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வேதனையளிப்பதாகவும், இப்படி தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மீது 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 18-ம் தேதியை தேசிய எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றமும், இந்திய மருத்துவ சங்கமும் கிட்டத்தட்ட ஒன்றுபோல ஒன்றிய அரசை குற்றம்சாட்டியுள்ள நிலையில், இப்பிரச்சனை குறித்து, ஜூன் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவரது உரையில், கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள மருத்துவக் கட்டமைப்பை விரைந்து உருவாக்கியிருப்பது குறித்து குறிப்பிட்டவர், தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வழங்குமாறு பல மாநிலங்கள் கோரிக்கை வைத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக இறங்கிவந்தார்.
அதன்படி, வரும் ஜூன் 21-ம் தேதி முதல், ஒன்றிய அரசே மாநிலங்களுக்கு இலவசத் தடுப்பூசி வழங்கும் என்றவர், உற்பத்தியாளர் களிடமிருந்து 75% தடுப்பூசியை ஒன்றிய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என்றும், மிச்சமுள்ள 25% உற்பத்தியை தனியார் மருத்துவமனைகள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதற்கு தடுப்பூசியின் விலையுடன், சேவைக்கட்டணமாக ரூ.150 மட்டும் கூடுதலாக வசூலிக்கலாம் என்றும் அறிவித்தார். பாபா ராம்தேவை நேரடியாகச் சொல்லமுடியாமல், தடுப்பூசி குறித்த வதந்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், வரும் நவம்பர் வரை ரேசனில் இலவசமாகப் பொருட்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
-ஆதவன்