நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை, ஜெயிலர் தாஸ். (ஹெச். ராஜா சொன்ன ஜெயபிரகாஷ் அல்ல) கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் மரணமடைந்தார். இந்நிலையில் ஜவாஹிருல்லாவின் பெயரைக் கெடுப்பதற்காகவே பொய்யான கருத்துகளை கூறியுள்ளார் என்று ம.ம.க. சார்பில் ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவுக்கு எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார்கள்.
ஹெச்.ராஜாவின் பொய்யான கருத்தை, சிவகார்த்திகேயனின் அப்பாவை அவரது சிறைப்பணி வாயிலாக அறிந்த நமது நக்கீரன் ஆசிரியர் அவர்கள் வெளியிட்ட வீடியோ பதிவு, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. அதில், "நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா பெயர் தாஸ். அவர் ஒரு சிறைத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். மிகவும் நேர்மையானவர். 2015-ம் ஆண்டில் எனது மகள் திருமணத்திற்காக பத்திரிக்கை வைப்பதற்கு சிவகார்த்திகேயனின் சாலிக்கிராமம் வீட்டுக்குச் சென்றபோது, அங்கிருந்த வரவேற்பறையில், தாஸ் அண்ணனின் படத்தைப் பார்த்தபோதுதான், அவர்தான் சிவகார்த்திகேயனின் அப்பா என்பதைத் தெரிந்துகொண்டேன். "தம்பி, தாஸண்ணன் பையனா நீங்க?'' என்று சிவகார்த்திகேயனிடம் கேட்க, "ஆமாம்" என்றார் சிவகார்த்திகேயன். "உனக்காகத் தான்யா வேலைக்கெல்லாம் தாஸண்ணா என்னிடம் சொல்லியிருந்தார்'' என்றேன். "எங்கப்பாவும் உங்களைப் பற்றியெல்லாம் என்னிடம் சொல்லியிருக்காங்க'' என்றார் சிவகார்த்திகேயன்.
2000-ம் ஆண்டில், வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்ட காலகட்டத்தில் தான் சிவகார்த்திகேயனின் அப்பா எனக்கு அறிமுகமானார். ராஜ் குமாரை மீட்பதற்காக இரு மாநிலங்களின் தூதராக வீரப்பனைச் சந்தித்த என்னிடம் வீரப்பன் வைத்த கோரிக்கைகளில் ஒன்று, திருச்சி சிறையிலிருந்த 5 தமிழ்த் தீவிர வாதிகளை வீரப்பனிடம் ஒப்படைக்க வேண்டும் என் பது. அப்படி ஒப்படைத்தால், நடிகர் ராஜ்குமாரை திரும்ப ஒப்படைப்பேன் என்றார் வீரப்பன்.
இந்த கோரிக்கை குறித்து அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரிடம் தெரிவித்தேன். அவர், உள்துறைச் செயலாளர் சாந்த ஷீலா நாயர் மூலம், இதுகுறித்து திருச்சி சிறையிலுள்ள தமிழ்த் தீவிரவாதிகளுடன் என்னை பேசும்படி செய்தார். அப்போது திருச்சி ஜெயிலின் சூப்பிரன்டென்ட்டாக இருந்தவர்தான் சிவகார்த்திகேயனின் அப்பா தாஸ் அண்ணன்.
முதல்வரின் உத்தரவுப்படி, திருச்சி ஜெயிலுக்கு சென்றேன். அங்கு தாஸ் அண்ணன்தான் சந்திப்புக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். தமிழ்த் தீவிரவாதிகளைச் சந்திப்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் தாஸ் அண்ணனோடு பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய பையன் (சிவகார்த்திகேயன்) கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பதாகவும், பல குரலில் பேசுவதிலேயே ஆர்வமாக இருப்பதாகவும் கூறியவர், மகனுக்கு படிப்பு முடிந்ததும் வேலை கிடைப்பதற்கு உதவும்படி என்னிடம் கேட்டார். படிப்பு முடிந்ததும் மகனை அனுப்பிவிடுங்கள், ஏதாவது தொலைக்காட்சியில் வேலைக்கு முயலலாமென்று அவரிடம் நான் கூறியிருந்தேன்.
அந்த சம்பவத்திற்கு அடுத்து, 2001-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் ஆட்சியில் எங்கள் நக்கீரன் மீது பல வழக்குகள் போடப் பட்டன. எனவே பல மாதம் தலைமறைவாகவே திரிந்தேன். 2002 இறுதிவாக்கில், கோவை ஜெயிலுக்கு சூப்பிரன்டென்ட்டாக மாற்றப்பட்டிருந்த தாஸ் அண்ணன், டூட்டியில் இருக்கும்போதே கடுமையான மாரடைப்பால் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது. திடகாத்திரமாக இருந்தவர் மாரடைப்பால் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் ஜெயலலிதா அரசாங்கம், தாஸ் அண்ணனுக்கு டார்ச்சர் கொடுத்த விஷயம் தெரியவந்தது. 5 தமிழ்த் தீவிரவாதிகளை விடுதலை செய்வதற்காக, நானும், கலைஞரும், வீரப்பனும் சேர்ந்து திட்டம் தீட்டித்தான் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியதாக ஒரு கதையை பொய்யாக எழுதித்தரும்படி தாஸ் அண்ணனுக்கு, அப்போதைய காவல்துறை உயரதிகாரி முகமது அலி மூலமாக டார்ச்சர் தந்ததில், அதற்கு உடன்படாத நேர்மையான ஜெயிலரான தாஸ் அண்ணன், கடும் மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்திருக்கிறார்.
எனக்கெதிராக பொய்யாகப் புகாரளிக்காத நேர்மைத் தன்மையால் தாஸ் அண்ணன் மரணித்தது குறித்து தம்பி சிவகார்த்திகேயனிடமே கூறியிருக்கிறேன். பொய்யாகவே பேசித் திரியும் ஹெச். ராஜா, வழக்கம் போல் இச்சம்பவத்திலும் பொய் பேசியதால் உண்மை யைச் சொல்லும் கட்டா யம் எனக்கு வந்தது'' என்று நமது ஆசிரியர் அதில் விரிவாகக் கூறியிருக்கிறார்.
வின்னர் படத்தில் வடிவேலு மாதிரி பலரிடம் மூக்குடைபட்டும் திருந்தாத ஜென்மமாகவே ஹெச். ராஜா இருந்தால் எப்படி?
-ஆதவன்