(20) இந்திய, பாகிஸ்தான் எல்லை
எப்படித்தான் "பாலைவனத்தின் சிங்கம்' என்ற அந்தப் பெயர் வந்தது என்று புரிந்துகொள்ள இயலவில்லை. ஆங்கிலேயர் தங்கள் வரலாற்று ஆவணங்களில் Lion of desert என்று எழுதி வைத்திருந்தார்கள். இந்தியாவின் பல்வேறு இடங்களில் பல்வேறு மண்சார்ந்த போராட்டங்களைச் சந்தித்து அனைத்தை யும் தங்கள் நயவஞ்சகத்தால் வெற்றி கொண்ட ஆங்கிலேயருக்கு இன்றைய பஞ்சாப், பாகிஸ்தானை ஒட்டிய பாலை வனப் பகுதி ஒரு மாபெரும் சவாலாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த மனிதருக்கு பாலைவன சிங்கம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இது சராசரி சிங்கம் அல்ல. பாலைவனப் போர்களில் பல்லாயிரம் ஒட்டகங்களை வழிநடத்திச் சென்ற தனித்துவமிக்க சிங்கம்.
பெரும் எண்ணிக்கையில் மக்களைப் பலிகொண்ட கொள்ளை அம்மை பெருந்தொற் றில், தனது இடதுகண் பார்வையை இழந்தவர் ரஞ்சித்சிங். பத்து வயதில் தந்தையாருடன் சேர்ந்து யுத்தத்தில் பங்கேற்கத் தொடங்கினார். போர்க்களம் ஒன்றில் போர் புரிந்துகொண்டிருக்கும் நிலையி லேயே இவரது தந்தை வீர மரணம் எய்தி விட்டார். அப்பொழுது வயது பன்னிரெண்டு.
இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் பெரும் கொந்தளிப்பு நிகழ்ந்து கொண்டிருந்த காலம்.
1707-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஔரங்கசீப் மரணம், வட இந்திய அரசியலில் பல்வேறு புதிய மாற்றங் களை உருவாக்கு கிறது. இவரது மரணத்திற்குப் பின், முகலாயப் பேரரசு கொஞ்சம் கொஞ்சம் வீழ்ச்சியடையத் தொடங்குகிறது. வரி திரட்டும் பணி ஆட்சி அதிகாரத்தில் மிகவும் முக்கியமான பகுதியாகும். மொகலாயர்கள் புதிய சூழலில் வரி திரட்டுவதில் திண்டாடிப் போகிறார்கள். ஆங்காங்கே கலகங்கள் வெடிக்கத் தொடங்கின. அப்பொழுது தான் அந்தப் புதிய பாலைவன அரசியல் வீரியத்துடன் செயல்படத் தொடங்கியது.
ஆப்கானிஸ்தானத்தில் அகமது ஷா அப்தாலி வம்சத்தின் இஸ்லாமிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். அவர்களது கழுகுக்கண்கள் சர்வ சதாகாலமும் சிந்து சமவெளிப் பகுதியை சுற்றி வட்டமிட்டுக்கொண்டேயிருந்தன. முதல் போரை அதிரடியாக இவர்கள் தொடங்கியபோது, ரஞ்சித்சிங்கின் வயது 17. இதன்பின்னர் தொடர்ந்து பல தாக்குதல்கள் நடந்தன.
பாலைவனப் பகுதி மட்டுமல்லாது. சீலம், செனாப், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய ஐந்து ஆறுகள் பாயும் வளம் கொழிக்கும் நிலப்பகுதியையும் சீக்கிய சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர். பன்னிரண்டு போர்க்குணமிக்க சிறுசிறு சீக்கிய சிற்றரசுகள். இவர்கள் தனித்தனியான ஆட்சியாளர்களாகச் செயல்பட்டார்கள். இதில் சுக்கர் சாகியா, கன்யாஸ், நக்காயிஸ், அகுல்வாலியாஸ், பாங்கி ஆகிய ஐந்தும் மிகவும் சக்திவாய்ந்த சிற்றரசுகள். இந்த தருணத்தில் ரஞ்சித் சிங், நுட்பமான பல முயற்சிகளை முன்னெடுக்கிறார். திருமண உறவின் வழியாக அவர் கன்யாஸ், நக்காயிஸ் அரசுகளின் ஆதரவை பெற்றுக்கொண் டார். நட்புணர்வுடன் பேசியும், சிறுசிறு, போர்களை நிகழ்த்தியும் மற்ற சிற்றரசு களையும் ஒருங்கிணைத்துக்கொள்கிறார்.
கால்சா போர்முறை குருகோவிந்து சிங்கால் வளர்த்து எடுக்கப்பட்ட, மண் சார்ந்த போர்முறை. இது அறம் சார்ந்த பண்புகளை சீக்கியர் வீரர்களிடம் உருவாக்கியிருந்தது. டெல்லியைச் சுற்றிய போராட்டக் களத்தில் தனித்துவமும், பொது ஐக்கியமும் கொண்ட பல்வேறு குழுக்களை என்னால் பார்க்க முடிந்தது. இதில் பல்வேறு பண்பாட்டையும், வேறுபட்ட கொள்கைகளையும் ஒருங்கிணைக்கும் சிறந்த யுத்தி ஒன்று என் கண்களுக்குத் தெரிந்தது.
தமிழகத்தின் விவசாய சங்கங்களின் பொதுச் செயல்பாடுகளில்கூட, தலைவர்களின் தனி அடையாளங்கள் மட்டுமே ஊடகங்களின் மூலம் தெரிகின்றன. விவசாய சங்கங்கள் ஐக்கியம் தெரிவதில்லை. போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதில், சில சங்கடங்களை இது தோற்றுவித்துவிடு கிறது. ஆனால் டெல்லி போராட்டக் களத்தில் விவசாயிகளின் ஐக்கியம் கூடுதலாகத் தெரிந்தது. இதற்கான காரணங்களைத் தேடிப் பார்க்கிறேன். ரஞ்சித்சிங், போர் முறையான ஐக்கிய ஒருங்கிணை போர்முறையோடு இதனை இணைத் துப் பார்க்க எனக்குத் தோன்றுகிறது. அந்தப் போர் குணமும், ஐக்கியமும் கொண்ட கால்சா போராட்ட முறை, இன்றைய விவசாயிகளின் போராட்டத்தில் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறேன். அதன் சாயல் கொண்ட பல கூறுகளை, இன்றைய போராட்டக் களத்தில் என்னால் பார்க்கமுடிகிறது.
ரஞ்சித் சிங் தலைமையில் நடத்த போர்முறை பற்றி, பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. குருநானக் முன் வைத்த மானுட அறத்தையும், வெற்றிக்காக தன்னுயிரை ஈகம் செய்யும் மனவலிமையையும் அவரது படைவீரர்கள் கொண்டிருந்தனர். பாலைவனப் பிரதேசங்கள், நதிப்புற நில அமைப்பின் நுட்பங்கள் ஆகியவற்றை அறிந்த போர் நிபுணத்துவம் கொண்டவர்களாகவும் இவர்கள் திகழ்ந்தனர். இவை எல்லாவற்றிலும் அவர் உருவாக்கிய ஐக்கியம்தான் இதில் முக்கியமானது.
ரஞ்சித்சிங்கை எதிர்க்க, 1798-ஆம் ஆண்டில் ஆப்கானிய ஆட்சியாளர், ஒரு படையோடு படையெடுப்பை நிகழ்த்தினர். இந்தப் படை எடுப்பை ரஞ்சித்சிங் ஆரம்பத் தில் தடுத்து நிறுத்தவில்லை, பின்வாங்கினார். லாகூர் நகரத்தை மையமாகக் கொண்ட பகுதி, அப்பொழுது பாங்கி சீக்கியர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. இவர்கள் ஆப்கானிய இஸ்லாமியர்களுக்கு ஆதவாக செயல்பட்டனர். ஆப்கானிய ராணுவத்தை லாகூர்வரை வர அனுமதித்தார் ரஞ்சித்சிங்.
அந்த காலங்களில் ரஞ்சித்சிங்கின் இராணுவத்தில் 25 ஆயிரம் கால்சா வீரர்கள் இருந்தனர். ராணி சதாகவுர் ராணுவம் 25 ஆயிரம் வீரர்களைக் கொண்டிருந்தது. இந்த இரண்டு படைகளும் மொத்தம் 50 ஆயிரம் ஒழுக்க நெறிகொண்ட கால்சா வீரர்களைக் கொண்டிருந்தது. ராணி சதா கவுர், ரஞ்சித்சிங் பட்டத்தரசியின் தாய் ஆவார். தனது மருமகனுக்காக அவர் களம் இறங்கினார். இரண்டு படைகளும் இணைந்து நடத்திய போரில் ஆப்கானியர்களும் விரட்டி அடிக்கப்பட்டார்கள், லாகூரும் கைப்பற்றப்பட்டது. இதன்பின்னர் மகாராஜ் ரஞ்சித்சிங் சகாப்தம் தொடங்கியது.
1801-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் நாள் இந்து நாள்காட்டியின்படி அமைந்த புதிய ஆண்டின் முதல்நாள். அவரது 21 வது வயதில், இவருக்கு மகாராஜ் பட்டம் சூட்டப் பட்டது. இது இந்து மதத்தின் மீது இவர் கொண்டிருந்த மனஐக்கியத்தைக் காட்டுகிறது. பட்டம் சூட்டிக்கொண்ட நாள், குருநானக்கின் நேரடியான சீடர் சஞ்சீப்சிங் பேடி, நெற்றியில் திலகமிட்டு "பஞ்சாபின் மகாராஜ்' என்று இவருக்குப் பெயரிட்டார். மகாராஜ் ரஞ்சித்சிங் ஆட்சி காலம், 59 ஆண்டுகள். 19-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியாவின் வடமேற்குப் பகுதி முழுவதும் இவரது ஆட்சியில் இருந்தது.
மகாராஜ் ரஞ்சித் சிங்கின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத் தங்கள், நவீனமயமாக்கல், முதலான உள்கட்டமைப்பு பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் மூலம் பொரு ளாதாரம் நாட்டில் நன்கு வளர்ச்சி பெற்றது. ராணுவம் மதச்சார்பு கொண்ட தாக அமையக்கூடாது என்பதில் இவர் உறுதியோடு இருந்தார். இவரது இராணுவத்தில் சீக்கியர்கள், இந்துக்கள், இசுலாமியர்கள் முன்னணிப் பொறுப்பு களில் இருந்தார்கள். ஐரோப்பியர்கள் சிலருக்கும் பொறுப்பு அளிக்கப் பட்டிருந்தது.
மகாராஜ் ரஞ்சித்சிங் காலத்தின் பாலைவன அரசியல் இன்று வேறு வடிவம் எடுத்துள்ளது. பஞ்சாப் -பாகிஸ் தான் எல்லையை ஒட்டிய பகுதியில், கண்ணாமூச்சு விளையாட்டு ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. இது ஏன் நடக்கிறது என்று யாராலும் புரிந்து கொள்ள இயலவில்லை. இடையிடையே எல்லையில் சில மோதல்கள் உருவாக, அது இரண்டு தேசங்களிலும் தேசிய வெறியாக மாற்றப்பட்டு வருகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் நட்பு கொள்ள முடியாத பகைமை நாடுகளாக தலைமுறை தலைமுறையாக, இப்படியே இருந்துவிடுமோ என்ற அச்சம் அடிக்கடி வந்துகொண்டேயிருக்கிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்களும் நிகழ்ந்திருக்கின் றன என்பதும் உண்மைதான். நட்புறவு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின் றன. ஆனால் பகைமையும் பதட்டமும் மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சமாதானமும் நட்புறவும் வலுப்பெற மறுக்கிறது. இது ஏன் என்ற கேள்வி அடிக்கடி எனக்குள் எழுந்துகொண்டே யிருக்கிறது.
இரண்டு நாடுகளின் எல்லைப்புற மக்கள், இதுகுறித்து என்ன நினைக் கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் நீண்டகாலமாக என்னிடம் இருந்தது. கபட அரசியல் எதுவும் இல்லாத அந்தப் பாலைவன மக்களிடம் இதுகுறித்துக் கேட்டு, அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக டெல்லி விவசாயிகளின் போராட்டத் திற்கு நான் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
(புரட்சிப் பயணம் தொடரும்)