(26) கொள்கையாளர்களின் சேவை
காஷ்மீர் தொடங்கி இந்தியாவின் எல்லா மொழி பேசும் மக்களும் அங்கு வந்து பங்கேற்பதை நான் பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பகுதியினர் இளைஞர்கள். அதில் தமிழ் நாட்டிலிருந்து வந்து சேர்ந்திருந்தார் மாணவர் மைக்கேல். போராட்டத்தில் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு அனுபவம் என்றால், மைக்கேலுக்கு நேர்ந்த அனுபவம் வித்தியாசமானது. அது யாருமே சந்திக்காத, அபாயங்களைக் கொண்டிருந்தது.
மைக்கேல், பாபு இருவரும் கல்லூரி மாணவர்கள். பாளையங்கோடை புனித சேவியர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் பயின்றவர்கள். மைக்கேல், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்திற்கு அருகில் அமைந்த அமுதுண்ணாக்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர். பாபு தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலுக்கு அருகில் அமைந்த பருவக்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.
பாளையங்கோட்டையில் இளங்கலை முடித்தவர்கள் பட்ட மேற்படிப்புக்காக சென்னை வந்து, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பில் சேருகிறார்கள். இருவருமே பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர்கள். சென்னை வந்த பின்னர், ஜல்லிக்கட்டு மாணவர் போராட்டம் என்று புதிய திசை வழியில் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் (ஹண்ள்ச்) தங்களை இணைத்துக் கொள்கின்றனர்.
மைக்கேல், பாபு இருவரையும் நான் சிங்கு எல்லையில் சந்தித்தேன். அவர்கள் குளிரைப் பற்றித்தான் அதிகம் என்னிடம் பேசினார்கள். டெல்லிப் பயணம் இருவருக்கும் புதியது. ஒரு பகல், இரு இரவுகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் பற்றிக் குறிப்பிடும்போது, குளிர் ஊசியால் குத்துவதைப் போல குத்தியது என்றார்கள். இருவருமே தமிழகத்தின் வெப்பமண்டலப் பகுதியில் பிறந்தவர் கள். எத்தகைய வெக்கையையும் தாங்கிக்கொள்ள கூடியவர்கள்.
ஆனால் குளிருக்கு எந்தவிதத்திலும் பழக்கப்படாதவை அவர்களது உடல்கள். கைவிரல் களை ஆடைக்குள் மறைத்துக்கொண்டு, உதடுகள் குளிரால் நடுங்க, அவர்கள் என்னிடம் பேசிக்கொண் டிருந்தார்கள். அவர்கள் தங்கள் குழுவோடு வேறொரு இடத்திற்கு செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் என்னைப் பிரிந்துவிட்டார்கள்.
போராட்டக் களத்தில் வேறு இடத்தில் வேறொரு பணியில் இருந்தபோது, ஒரு தகவல். மைக்கேல் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டார் என்று. நான் மிகவும் பதறிப்போனேன். இந்த நேரத்தில்தான் இதுகுறித்த மேலும் அறிந்துகொள்ள நான் முயற்சி செய்தேன். வேறு எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. ஆபத்திலிருந்து தப்பிவிட்டார் என்ற செய்தி சில நாட்களுக்குப் பின்னர் கிடைத்தது.
பாபுவை ஒரு நாள் சந்தித்தேன். அப்பொழுது சில மாதங்கள் கழிந்திருந்தது. பின்னர் மிகுந்த ஆர்வத்தோடு அவரிடம் மைக்கேல் குறித்த விபரங்களைக் கேட்டேன். போராட்டக்களத்தில் மறைந்துகிடந்த, ஆனால் மற்றவர்களுக்கு தெரியப் படுத்தவேண்டிய மற்றொரு போராட்டப் பண்பு ஒன்றை இதன்மூலம் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. இதன்பின்னர் நடந்ததை பாபு கீழ்க்கண்ட வாறு விவரிக்கத் தொடங்கினார்.
டிராக்டர்கள் வரிசையாக பல வண்ணங்களில் நின்றுகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு டிராக்டரி லும் போர்க்களத்திற்குச் செல்லும் உற்சாகத்துடன் மக்கள் அமர்ந்திருக்கிறார்கள். விவசாயிகளின் பாடல்களை பாடுவதற்காகவும், முழக்கங்களைத் தீவிரமாக எழுப்புவதற்காகாவும் ஒலிபெருக்கி, சவுண்ட் பாக்ஸ் ஆகியவை ஒவ்வொரு டிராக்டரிலும் கட்டப்பட்டிருந்தன.
அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நாங்கள் ஒரு ஊர்வலம் நடத்தும் தயாரிப்பில் இருக்கிறோம். டிராக்டர் கூட்டங்களுக்கு இடையே ஊர்வலம் நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்ட பதாகைகள் எங்கள் கையில் இருக்கின்றன. தினேஷ் எங்கள் இருவரையும் எங்கள் குழு நடத்தும் அந்த ஊர்வலத்தின் கடைசியில் பாதுகாப்புக்காக நிற்கச் சொல்கிறார் என்று உரையாடலைத் தொடர்கிறார்.
எங்கள் குழு வீரியம் கொண்டு, தமிழில் முழங்குகிறது. வந்தவர்களில் யாருக்குமே இந்தியில் முழக்கம் எழுப்பத் தெரியாது. மற்றவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் ஜ்ங் ஹழ்ங் ச்ழ்ர்ம் ற்ஹம்ண்ப் ய்ஹக்ன் ள்ன்ல்ல்ர்ழ்ற்ண்ய்ஞ் ச்ஹழ்ம்ங்ழ் என்னும் முழக்கங்களையும் எழுப்பிக்கொண்டிருக்கிறோம்.
இந்த மொழியின் ஓசையைக் கேட்டு ஒரு வட்டம் எங்களைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கத் தொடங்கியது என்றார் பாபு. நான் பாபுவுடன் நடத்திய உரையாடலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கினேன். என் எண்ணம் டெல்லி போராட்டக்களத்திற்கு செல்கிறது.
டெல்லி போராட்டக் களத்தில் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்தது. இந்திய ஊடகங்கள் இது நாடு தழுவிய போராட்டம் இல்லை. பஞ்சாப், அரியானா விவசாயிகள் மட்டும் நடத்தும் போராட்டம். இந்திய அளவில் இதற்கு ஆதரவு இல்லை என்று எழுதிவந்தன. பலர் என்னிடம் நேரடியாகவே கேட்டார்கள், ஏன் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில விவசாயி கள் எங்களை ஆதரிக்கவில்லை என்று. இந்த பின்னணியில் பாபு கூறியவற்றை யோசிக்கத் தொடங்கினேன்.
மேலும் பாபு தொடர்ந்தார். சுற்றி நின்ற கூட்டம், இவர்கள் கையிலிருந்த கொடியை வாங்கிக் கொண்டு எங்களைப் போலவே தமிழில் முழக்கம் எழுப்ப முயற்சி செய்தார் கள். நமது மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் அவர்களுக்கு ஒரு இசையைப் போல தோன்றியிருக்க வேண்டும் அவர்கள் நடனமாடத் தொடங்கி விட்டார்கள். டிராக் டரில் வந்தவர்கள் இந்த வித்தியாசமான சூழலைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த நேரத்தில்தான், அது நிகழ்ந்தது.
மைக்கேலின் அலறல் சத்தம் கேட்கிறது என்கிறார் பாபு . அவரை நான் தாங்கிப் பிடிக் கிறேன். அப்பொழுது பச்சை நிறம் கொண்டு ஒரு டிராக்டரின் முன் சக்கரம் மைக்கேலின் காலில் ஏறி இறங்கிவிடுகிறது. அடுத்து டிராக்டரின் பெரிய சக்கரம். அது ஏறி இறங்கினால் என்ன நடக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று. ஒரே அலறல். கூச்சல். டிராக்டர்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி அப்படியே நின்று விடுகின்றன. இந்த சூழலை பாபு என்னிடம் விளக்கும்போது அவரிடம் கலக்கம் தெரிகிறது.
இதற்கு மேல் பாபு சொன்னார். "இதே விபத்து வேறு எங்காவது நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இப்பொழுது யோசித்துப் பார்க்கிறேன். போராட்டக்களம் என் தோழனைக் காப்பாற்றிவிட்டது. அந்தக் கொடிய சித்ரவதைலிருந்து காப்பாற்றிய அந்த போராட்டக்காரர்களுக்கு கை கூப்பி நன்றி செலுத்தவேண்டும் என்று எனக்கு இப்பொழுது தோன்றுகிறது'' என்றார் பாபு.
"அப்படியே மைக்கேலை நாலு பேர் தூக்கினார்கள். வலி தாங்காமல் அலறத் தொடங்கினான். ஒருவர் எதிர்பார்த்து தயாராக வைத்திருந்தததைப் போல வலிபோக்கும் ஸ்பிரே ஒன்றை வெளியே எடுத்தார். தற்காலிக நிவாரணமாக சிகிச்சையை தந்தவர் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள போராட்டக்களத்தின் 24 மணி நேர மருத்துவமனைக்குச் சென்றார்கள்.
அங்கு நடந்த சிகிச்சையில் மைக்கே-ன் வலியை நிறுத்த முடியவில்லை. எனக்கு அச்சம் வந்துவிட்டது. வேறு இடத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்றாலோ போராட்டக்களம் முழுவதும் டிராக்டர்களால் நிரம்பி நிற்கிறது. என்ன செய்ய முடியும் என்று பயந்து போனேன் என்ற பாபு, மேலும் கூறிய விபரங்கள் போராட்டக் காரர்களின் கட்டுப்பாடு, பொறுப்புணர்வு ஆகியவை பற்றியது.
ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி தொண்டர்களுக்கு ஒயர்லஸ் மூலம் தகவல் தரப்படுகிறது. மந்திர சக்தியை போலவே அத்தகைய நெருக்கடி மிக்க கூட்டத்தில் வழி கிடைக்கிறது. அரைமணி நேரத்தில் மருத்துவமனை யில் சேர்த்து பெரிய ஆபத்து எதுவுமில்லை என்ற தகவலையும் சொல்லிவிட்டார்கள்'' என்றார் பாபு. கொள்கையாளர்களின் சேவை எவ்வாறானது என்பதற்கு இதை உதாரணமாக கூறலாம். இப்பொழுது இதைச் சொல்லிமுடித்த பாபுவிடம் ஒரு புத்தொளியைப் பார்க்கிறேன்.
இந்தப் புத்தொளியைப் பெற்ற இளைஞர்கள், புதிய அரசியல் செயல்வடிவம் ஒன்றை உருவாக்க இங்கு முயற்சிக்கிறார்கள். இதில் இவர்களின் சித்தாந்தம் என்னை மிகவும் யோசிக்க வைக்கிறது
(புரட்சிப் பயணம் தொடரும்)