ட்சியாளர்கள் தங்கள் சுயநல பேராசையை நிறைவேற்றிக் கொள்ளும் நடவடிக்கைக்கு ராஜதந்திரம் என்று பெயரிட்டுக் கொள்கிறார்கள். இந்த விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு ராஜதந்திரம் உண்டென்றால், தொடர்ந்து அடக்குமுறைகளை சந்தித்து, உரிமைக்காக உயிரை பணயம் வைத்துப் போராடிக்கொண்டிருக்கும் வெகுமக்களுக்கு ராஜதந்திரம் இல்லாமல் போய்விடுமா? ஆனால் இவர்களின் ராஜதந்திரம் சூழ்ச்சி சார்ந்தது அல்ல. பொது நலம் சார்ந்தது.

உலகில் தலைகீழாக மாற்றத்தைக் கொண்டு வந்தவை என்று பிரஞ்சு புரட்சி, அமெரிக்கப் புரட்சி, ரஷிய புரட்சி, சீனப்புரட்சிகளைச் சொல்லுகிறோம். அந்த புரட்சிகள் அனைத்தும் வெகுமக்கள் உருவாக்கி செயல்படுத்திய ராஜதந்திரத்தால் வெற்றி பெற்றவை என்றாலும், தலைமை தாங்கியவர்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது, ஆனாலும் வெகுமக்கள் உருவாக்கிய அணுகுமுறைகளே புரட்சியில் முதலிடத்தைப் பெறுகின்றன.

farmers

இதைப் போலவே டெல்லியில் போராடி வரும் விவசாயிகளும் சில அணுகுமுறைகளை வகுத்துக் கொண்டார்கள். ஓரிரு நாட்களில் டெல்லிக்குள் நுழைந்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அரசாங்கம் வெட்டிய 17 அடி ஆழமுள்ள பெரும் பள்ளத்தால் விவசாயிகளின் பயணத்தைத் தடுக்க முடியவில்லை. ராணுவ பொறி யியல் பயிற்சியைப் போலவே விவசாயிகளுக்கும் மண் சார்ந்த பொறியியல் பயிற்சி இருக்கிறது. உடனடியாக ஒரு மரப்பாலத்தை அமைத்தார்கள். வரிசையாக அதில் டிராக்டர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கின. கொடிய குளிரில் ஆட்சியாளர்களின் சதிகளை முறியடித்து, முன்னேறியவர்கள், முன்னர் அறிவித்த டெல்லி சலோ முழக்கத்தின் படி இவர்கள் டெல்லி சென்றிருக்க முடியும். ஆனால் செல்லவில்லை. அது விவசாயிகளின் தேர்ந்த செயல் தந்திரம்.

Advertisment

அப்படிச் சென்றிருந்தால், அவர்களில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். கைது செய்யப்பட்டு திகார் முதலான இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கலாம். கூர்மதி கொண்ட விவசாயிகள் அதை விரும்பவில்லை. இரண்டு அடி பின்னால் என்பதைப் போல, பின்னோக்கித் திரும்பினார்கள். இந்த நடவடிக்கைதான் விவசாயப் போராட்டத்திற்கு புதிய வரலாற்றின் தகுதியை வழங்கிவிட்டது. இந்த நேரத்தில்தான் நெடுஞ்சாலைகள் இவர்கள் கண்ணில் பட்டன.

ஆங்கிலேயர் கடல் ஆதிக்கத்தைக் கையிலெடுத்து, காலனியை விரிவுபடுத்தியபோது, இந்தியா, செல்வங்களை கொள்ளையடித்துச் செல்வதற்கு ஏற்ற இடமாக ஆங்கிலேயருக்குத் தெரிந்தது. வளங்கள் அனைத்தையும் ஏற்றிச் செல்வதற்குரிய பாதைகளை அமைத்தார்கள். புதிய சாலைகள் அமைக்கப்பட்டன. அவை அனைத்தும் ரயில் நிலையங்களோடு இணைக்கப் பட்டன. ரயில் பாதைகள் அனைத்தும் துறைமுகங்களுக்குப் போய்ச் சேர்ந்தன. உலகின் தலைசிறந்த துறைமுகங்கள் இந்தியாவில் கட்டப்பட்டன. இதேநேரத்தில் பட்டினியால் பலகோடி மக்கள் இந்தியாவில் செத்துக்கொண் டிருந்தார்கள். இதுதான் ஆங்கிலேயேர் இந்தியாவிற்கு வளர்த்து தந்திருந்த நாகரிகம்.

ஒரு உண்மையை நாம் மறந்துவிட்டோம். ஆரம்பத்தில் இந்தியாவை கைப்பற்றியது பிரிட்டிஷ் அரசு அல்ல. ரிலையன்ஸ் கம்பெனி யைப் போல, அதானியின் கம்பெனியைப் போன்ற ஒரு கம்பெனி தான், அதன் பெயர் கிழக்கிந்திய கம்பெனி. 1660 ஆண்டு டிசம்பர் மாதம் 31 நள்ளிரவில் புத்தாண்டு பிறப்பதற்கான கொண்டாட்டங்களுக்கு இடையே, இந்தக் கம்பெனிக்கான அனுமதியை மகாராணி எலிசபத் வழங்கினார். சரியாக நூறு ஆண்டுகள் இந்த கம்பெனிதான் இந்தியாவை ஆட்சி செய்தது. இதன் பின்னர்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர் களின் கைக்கு ஆட்சி மாறியது.

Advertisment

அண்மைக்கால சுதந்திர இந்தியாவிலும் மக்களின் செல்வங்களை எளிதில் எடுத்துச் செல்ல மக்கள் செலவிலேயே பெரிய பெரிய பாலங்களும், அகலமான சாலைகளும், அமைக்கப்படுகின்றன. கல்வி உரிமையும் மருத்துவ உரிமையும் பறிக்கப்பட்ட நாட்டில் பெரும் செலவில் யாருக்காக போக்குவரத்து கட்டமைப்பு வசதி? கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்பதில் சந்தேகமே இல்லை.

இதை நன்றாகவே புரிந்திருந்த விவசாயிகள். நெடுஞ்சாலைகளை மறியல் செய்வதன் மூலம் இவர்களுக்கு நெருக்கடி தர முடியும் என்று நம்பி னார்கள். மறியல் என்றால் ஒரு நாள் அடையாள மறியல் அல்ல. விவசாய விரோத சட்டங்கள் ரத்து செய்யும் வரையிலான, மறியல். கார்ப்பரேட் கம்பெனிகளின் குரல்வளையில் கை வைக்கும் மறியல்.

farmers

இந்த மறியல் மிகவும் நேர்த்தியானது. பனி மூட்டம் சூழ்ந்த சிங்கு எல்லைக்குச் சென்று நேரில் பார்த்தால் அந்த நேர்த்தியை ரசிக்கமுடியும். அவ சரம், அவசரமாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மனித வாழ்விடங்கள். இரவு பகலென்று இல்லாமல் ஆயிரக்கணக்கில் ஓடிய வாகன ஓட்டத்தை நெடுஞ் சாலை நிறுத்தி வைத்துவிட்டது, பல லட்சம் மக்கள் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்துவிட்டது. வாழ்க நெடுஞ்சாலை. இதனால் கார்ப்பரேட் கம்பெனி களுக்கு எத்தகைய இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று மனம் கணக்குப் போட்டுப் பார்க்கிறது. மோடியின் ராஜதந்திர கணக்கைவிட விவசாயிகளின் கணக்கு வெற்றிபெற்றதில் மனம் குதூகலம் அடைகிறது.

மறிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையின் பெயர் சஐ1. ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு வந்து சேரும் நெடுஞ்சாலை. இந்திய நெடுஞ்சாலைகளில் அகலமானது இது. அந்த சாலையின் அகலம் எத்தனை இருக்கும் என்று அறிந்து கொள்ள நடந்து சென்று பார்க்கிறேன். அரைக் கிலோமீட்டர் அகலம் இருக்க லாம். சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு போராட்டக்காரர்கள் தங்கள் தற்காலிக வாழ்விடங் களை அமைத்துக்கொண்டுள்ளார்கள். சிங்கு எல்லை, மற்றொன்றையும் என்னை யோசித்துப் பார்க்க வைக்கிறது. பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்களில் மிகுந்த சுயநலமும் தந்திரமும் கொண்டவர்கள் மனிதர்கள். சில நேரங்களில் சில மனிதர்களின் சுயநலம் நம்மை அருவெறுப்படைய வைத்து விடுகிறது. பேருந்தில் ஏறினால் அடுத்தவர்களுக்கு இடம் தர மறுக்கும் சுயநலம். அடுத்தவர் வயல்வரப்பை மாற்றி, நிலத்தை சிறிது சிறிதாக அபகரிக்கும் சுயநலம் என்று எத்தனை வகையான சுயநலம். இந்த சுயநலம், சிங்கு எல்லையில் இல்லை என்பது என்னை யோசிக்க வைத்தது.

சிங்கு எல்லையின் 13 கிலோமீட்டர் நீளத்தில் ஒரு பெரிய கிராமமும் ஒரு நகராட்சியும் இருக்கிறது. சிங்கு, கிராமத்தின் பெயர். குண்டலி என்பது நகரத்தின் பெயர். சிங்கு கிராமம் பத்தாயிரத்திறகு மேல் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. குண்டலி நகரம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

பத்தாயிரம் டிராக்டர்களோடு விவசாயிகள் இங்கு வந்து சேர்ந்தபோது, இந்த மக்கள் எந்தவிதமான ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. சிங்கு, குண்டலி ஆகியவற்றின் எல்லா பகுதிகளுக்கும் சென்று பார்த்தேன். வறண்ட நீர் வளமற்ற பகுதி. வறுமையும் வளர்ச்சியின்மையும் மிகமிக அதிகம். ரிக்ஷா சென்னையைப் போல இல்லை. பத்து ரூபாய் கொடுத்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் போய் இறங்கிக்கொள்ளளலாம்.

மக்களில் பல தரப்பட்டவர்களை சந்தித்து பேசிப் பார்த்தேன். அவர்களில் ஒருவர் கூட, போராட்டக்காரர்கள் பற்றி எந்த அதிருப்தியையும் வெளிப்படுத்தவில்லை. ‘எல்லோருடைய வாழ்க்கையும் விவசாயத்தை ஆதாரப்படுத்தியிருக்கிறது. "புதிய சட்டத்தால் நிலம் பறிபோனால் எல்லாம் பறிபோய் விடும்'’என்ற உணர்வு அவர்களிடம் வெளிப்படுகிறது.

காஷ்மீர் மிகவும் அழகிய நிலம். அதனினும் அழகியது நீலம் பூத்து நிற்கும் ‘தால்’ ஏரி. அதன் நீளம் ஏழரைக் கிலோமீட்டர். அகலம் மூன்றரைக் கிலோ மீட்டர். அந்த ஏரியில் மிதந்துகொண்டிருக்கும் படகு வீடுகள் சுற்றுலாவாசிகளிடம் புகழ்பெற்றவை என்றால் இன்று டிராக்டர் வீடுகள் டெல்லியை சுற்றிய விவசாயப் போராட்டத்தில் புகழ் பெற்றுவிட்டன. ஆனால் டிராக்டர் வீடுகள் காஷ்மீரின் படகு வீடுகளைப் போன்று அல்ல. இந்திய விவசாயிகளின் ஒட்டுமொத்த கோபத்தின் மொத்தவடிவமாய் எழுந்து நின்று, அனல் வீச... ஆட்சியாளர்களுக்கு புதிய எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றன.

(புரட்சிப் பயணம் தொடரும்)