திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் ஹார்டுவேர் பிஸினஸ் வட்டி தொழில் செய்யும் ஞானசேகரன், பாத்திரக்கடை அதிபர் சிவக்குமார், கார் ஓட்டுநர் பாலாஜி என மூவரும் ஜூலை 23 ஆம் தேதி இரவு 10 மணியளவில் தங்களது காரில் சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கர சாலையில் நாட்றாம்பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தனர்.

robbery

வாணியம்பாடி வளை யாம்பட்டு மேம்பாலத்தின் மீது செல்லும்போது பின்னால் வந்த சைலோ கார் இவர்களது காரை மடக்கியுள்ளது. அதிலிருந்து இறங்கிய ஆறு பேர் கொண்ட கும்பல், ஞானசேகரனிடம் கத்தி யைக்காட்டி பணத்தை தா என மிரட்டியுள்ளது. காரில் இருந்த மூவரும் பயந்து இரண்டு டிராவல் பேக்குகளை எடுத்து தந்துள்ளனர். அப்போது பாலாஜி கடத்தல்காரர்களின் கார் சாவியை எடுத்துக் கொண்டுள்ளார். கார் இருந் தால்தான் தப்பிக்க முடியும் என்பதால், "பணத்தை தந்துடறோம், சாவியை தா' எனக் கேட்டுள்ளனர். பணம் -சாவி கைமாறும் நேரத்தில் ஒருவன் பாலாஜி மீது கத்தியை வீசியதால் பயந்துபோன பாலாஜி சாவியை பாலத்துக்கு கீழே வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சியான கும்பல் பணமிருந்த ட்ராவல் பேக்கோடு தங்களது காரை விட்டுவிட்டு நடந்தே தப்பிவிட்டது. இவையனைத்தும் மேம்பாலத்தின் மீது இரண்டுபுறமும் வாகனங்கள் நிற்க நூற்றுக்கணக்கானவர்கள் வேடிக்கை பார்க்க நடந்துள்ளது.

சம்பவம் குறித்த தகவல் காவல்துறைக்கு சென்றதும், ஸ்பாட்டுக்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சிபிசக்கரவர்த்தி நடத்திய விசாரணையில், நாட்றாம்பள்ளியில் தொழில் செய்வதாகவும், பைனான்ஸ் வைத்திருப்பதாகவும் குடியாத்தத்தில் தனக்கு வியாபார ரீதியாக வரவேண்டிய பணத்தை வசூல் செய்துகொண்டு 25 லட்ச ரூபாயோடு வந்தபொழுது காரில் வந்தவர்கள் கத்தியைக்காட்டி மிரட்டி 25 லட்சத்தையும் பறித்துச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார் ஞானசேகரன்.

Advertisment

அவரின் பேச்சில் தடுமாற்றம் இருந்ததை உணர்ந்த அதிகாரிகள், மூவரிடமும் தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில்... "கடந்த வருடம் குடியாத்தம் பகுதியில் செயல்பட்டுவரும் கிளப் ஒன்றில் சூதாடி 45 லட்ச ரூபாய் பணத்தை இழந்துவிட்டேன். இழந்த பணத்தை மீட்கவேண்டுமென தனது நண்பரான சிவக்குமாருடன் 5 லட்ச ரூபாய் பணத்துடன் குடியாத்தம் சென்று சூதாட்டத்தில் கலந்து கொண்டேன். சூதாட்டத்தில் ஜெயித்த 22 லட்ச ரூபாயுடன் வந்தபோதுதான், மேற்கண்ட சம்பவம் நடந்தது. 22 லட்ச ரூபாயும் கொள்ளை போய்விட்டது'' என கூறியுள்ளார். ஆனால் காருக்குள் 11 லட்சம் இருந்ததை கண்டுபிடித்த போலிஸாரிடம், "என் அப்பா இறந்து, அவருக்கான காரியம் முடிந்து ஒரு வாரமாச்சி. 45 லட்சம் இழந்திருக்கேன், இப்போது 22 லட்சம்தான் சம்பாதிச்சேன். அதுலயும் 11 கொள்ளை போயிடுச்சி. மீதிப்பணத்தை எப்படியாவுது சம்பாதிக்கணும்னுதான் பொய் சொல்லிட்டேன்'' என்றுள்ளார்.

rr

ஞானசேகரன் சூதாட்டக் கிளப்பிலிருந்து பணத்துடன் வந்ததை நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து வழிமறித்து பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் தமிழ்நாடு பதிவெண் கொண்டது, ஆனால் நம்பர் பிளேட் மீது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வெள்ளை பேப்பர் ஒட்டியுள்ளனர். காரின் கண்ணாடியில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, கொள்ளை கும்பலில் ஒருவன் காவல்துறை சீருடையில் இருந்துள்ளான். மேலும் காருக்குள் மனித உரிமை ஆர்வலர், ப்ரஸ் அடையாள அட்டை, பேன் கார்டு, ஆதார் கார்டு இருந்துள்ளது. கார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருடையது எனத் தெரியவந்துள்ளது. அந்த கொள்ளை கும்பலை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை, கொள்ளையர்களை பிடித்து தனியிடத்தில் வைத்து விசாரித்து வருகிறது.

Advertisment

இதுபற்றி எஸ்.பி. சிபிசக்கர வர்த்தியிடம் கேட்டபோது, "விசா ரணை நடக்கிறது, குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம், அவர்கள் பிடிபட்ட பின்பே முழு விவரம் வெளியே வரும்'' என்றார்.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மோரசப்பள்ளி என்கிற கிராமத்தில்தான் இந்த சூதாட்ட க்ளப் நடப்பதையும் அங்குதான் விளையாடி னேன் என்றும் ஞானசேகரன் வாக்குமூலம் தந்துள்ளார். இதுபற்றி வேலூர் எஸ்.பி செந்தில்குமாருக்கு தகவல் கூறியுள்ளனர். இதுதொடர்பாக நடந்த விசாரணையில், குடியாத்தத்தை சேர்ந்த கபடிவீரர் இளையராஜா, அவரது உறவினர் ஆறுமுகம் இருவரும் சேர்ந்து தென்னந்தோப்பில் சூதாட்ட க்ளப் நடத்திவருவதை உறுதி செய்தனர். பல ஆண்டாக நடந்துவரும் இந்த சூதாட்ட க்ளப் பற்றி தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்.பி., ஏட்டு செல்வராஜ் ஆகியோரை ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் எஸ்.பி.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர் போன்ற ஆந்திரா -தமிழக -கர்நாடக எல்லையோர பகுதிகளில் உள்ள தென்னந்தோப்பு, மாந்தோப்பு பகுதிகளில் பலஆண்டாக சீட்டாட்டம் என்கிற சூதாட்டம் நடந்து வருகிறது.

திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா சித்தூர், குப்பம், கே.ஜீ.எப், பெங்களுரூ, ஓசூர் பகுதிகளில் இருந்து பல பெரிய பணக்கார தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து சூதாட்டத்தில் லட்சங்களை வைத்து விளையாடுகிறார்கள்.

தினசரி கோடிகளில் பணம் புரளும் இடம். அவ்வளவு சீக்கிரம் இந்த தோப்புக்குள் வெளியாட்கள் யாரும் செல்ல முடியாது. க்ளப் நடத்துபவர்களின் ஆட்கள் அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்புக்கு இருப்பார்கள். காரில் வருபவர்களை அவர்கள்தான் அழைத்துச்சென்று உள்ளேவிடுவார்கள். வேலை செய்பவர்களே சுமார் 30 பேர் அங்குள்ளனர். விளையாடுபவர்களுக்கு தேவையான சரக்கு, சாப்பாடு வாங்கிவந்து தருவார்கள். அவர்களின் தினசரி பேட்டாவே தலைக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு குறையாது.

வெள்ளி, சனிக்கிழமைகளில் இரவெல்லாம் ஆட்டம் நடக்கும். சீட்டாட்டம் க்ளப் குறித்து இந்த பகுதியிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால் மாதா மாதம் அந்தந்த பகுதி காவல்நிலையத்துக்கு மாமூல் சரியாக செல்வதால் இதனை கண்டுகொள்ளாமல் பாதுகாப்பு வழங்கு கிறார்கள். அதோடு அரசியல் கட்சி பிரபலங்களும் இதில் பார்ட்னர்களாக உள்ளார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்த வர்கள்.

திருப்பத்தூர் மாவட்ட போலீஸார் தகவல் தந்தவுடன் க்ளப் நடத்திய இளையராஜாவை மடக்கியுள்ளனர் குடியாத்தம் போலீஸார். அங்கு நடந்த அதிகாரபூர்வமற்ற ரெய்டில் தினசரி செலவு எழுதும் நோட் கிடைத்துள்ளது. அதில் தினசரி வருமானம், செலவு, யார், யாருக்கு மாத கப்பம் போகிறது என்பதை எழுதி வைத்துள்ளார் களாம்.