மைச்சரவை சகாக்களுடன் தமிழக முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 7-ந் தேதி பொறுப்பேற்பு என்பதால் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பதவி யேற்பு வைபவங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது ராஜ்பவன். இதற்காக அரசின் பொதுத்துறை அதிகாரிகளும் ராஜ்பவன் அதிகாரிகளும் இணைந்து பம்பரமாகச் சுழன்றனர்.

g

இதற்கிடையே, தலைமைச் செயலகத்தி லிருந்த அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப் பட்டன. அமைச்சர்களின் பெயர்ப் பலகைகள் மற்றும் அறைகளிலிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட படங்கள் அகற்றப்பட்டு, அறைகள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. புதிய வடிவம் பெற தயாரானது தலைமைச் செயலகம்!

முதல்வர் பொறுப்பேற்றதும் சில முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல் கோப்புகளில் கையெழுத்திட ஸ்டாலின் திட்டமிட்ட நிலையில், 5 லட்சம் கோடி கடனுடன் அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி சென்றிருப்பதால், அரசின் தற்போதைய நிதி வலிமை குறித்து ராஜீவ்ரஞ்சனுடனும் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணனுடனும் விவாதித்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

இதற்கிடையே கடந்த இதழில் நாம் சுட்டிக்காட்டியது போல, தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம். அவரைத் தொடர்ந்து அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலரும் தங்களின் பதவியிலிருந்து விலகியுள்ளனர். இதனையடுத்து அந்த பதவிகளுக்கான தகுதியானவர்களை நியமிக்கும் ஆலோசனை சித்தரஞ்சன் சாலையில் நடந்து முடிந்திருக்கிறது.

இதுகுறித்து தி.மு.க. தரப்பில் விசாரித்த போது, "முதல்வர் ஸ்டாலின் தினமும் ஆலோசிக்க வேண்டிய சில முக்கிய பதவிகளுக்குரிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அதனால் அந்தப் பதவிகளில் நியமிக்கப்பட வேண்டியவர்கள் முழு தகுதிகள் பெற்றவராக இருக்கவேண்டும். தகுதிகள் விசயத்தில் சமரசமும் சிபாரிசும் கூடாது என ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். தூய்மையான நிர்வாகத்தைத் தருவதில் அதிக கவனம் அவருக்கு இருப்பதால் முக்கிய பதவிகளுக்கான நியமனங்களில் கூடுதல் கவனமாக பல்வேறு விசயங்களை ஆராய்ந்துள்ளார். முதல்கட்டமாக அரசு நிர்வாகத்தின் முக்கிய பதவிகள் குறித்த விவாதங்கள் அதிகநேரம் சித்தரஞ்சன் சாலையில் நடந்துள்ளது'' என்கிறார்கள் தி.மு.க.வின் சீனியர்கள் தரப்பில்.

முக்கிய பதவிகளைக் கைப்பற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரகசிய மூவ்களில் இறங்கியிருக்கும் நிலையில், அது குறித்து உள்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறை சார்ந்த முக்கிய பதவிகள் குறித்துதான் முதல் கட்டமாக விவாதித்துள்ளார் ஸ்டாலின். குறிப்பாக, தலைமைச் செயலாளர், முதல்வரின் (ஸ்டாலின்) செயலாளர்கள், உள்துறை செயலாளர், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி., அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர், அரசு ப்ளீடர் ஆகிய முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் மட்டுமே ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன், "இன்னும் 5 மாதம் மட்டுமே தனக்கு சர்வீஸ் இருப்பதால் இந்த பதவியிலேயே நீடிக்க ஒரு வாய்ப்புத் தாருங்கள்' என ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதனை ஸ்டாலின் ஆமோதித்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள அரசு நிர்வாகத்தின் உயர் பதவிகளில் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) மட்டும் மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டு, கொரோனா நெருக்கடி காலமென்பதால் துறைகள் ரீதியான அதிகாரிகளின் மாற்றத்தை 3 மாதங்களுக்குத் தள்ளிவைக்கலாமா என்கிற யோசனையும் ஸ்டாலினுக்கு இருப்பதாகத் தெரிகிறது. கொரோனா கட்டுப்பாடு மட்டுமே அடுத்த மூன்று மாதங்களுக்கு முன்னுரிமை என்பதால் காவல்துறை உயரதிகாரிகள் மாற்றம் தொடர்பாகவும் பின்னர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறாராம் ஸ்டாலின். அதேசமயம், தமிழக உளவுத்துறை தற்போது ஐ.ஜி. கட்டுப்பாட்டில் இருப்பதால் அதனை ஏ.டி.ஜி.பி. கட்டுப்பாட்டில் கொண்டுவரலாமா என்கிற ஆலோசனையும் நடந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலே சில வசூல்மன்னர்கள் சுறுசுறுப்பாக வலம் வருவார்கள். அப்படித்தான் தற்போதும் சிலர் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, "சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையின் நிர்வாக பொறுப்பிலிருக்கும் தமிழ்க் கடவுளின் குழந்தைப் பருவ பெயரைக்கொண்ட ஒருவர், முதல்வரின் செயலாளராக முன்னாள் சுகாதாரத்துறை உயரதிகாரியைக் கொண்டு வந்துவிடுவேன். அதன்பிறகு அவர் மூலம் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்' எனச் சொல்லியே அதிகாரிகளிடம் வசூல் கோதாவில் இறங்கியிருக்கிறார். இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. "இப்படிப்பட்டவைகள் ரகசியமாக நடந்துவருவதால் அதிகாரிகள் நியமனத்தில் ஸ்டாலின் கவனமாக இருக்கவேண்டும்' என்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

கோட்டைக்குள்ளும் கோட்டைக்கு வெளியேயும் நடக்கும் மூவ்களைப் பற்றிய ரிப்போர்ட் மு.க.ஸ்டாலின் பார்வைக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறதாம்.

-இரா.இளையசெல்வன்