சின்னத்திரை நடிகை "முல்லை' சித்ராவின் (தற்)கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, சித்ராவின் கணவர் ஹேமந்த் மீது வரிசையாக பண மோசடிப் புகார்களும் கிளம்பி, அதில் ஒரு புகாரின்பேரில் கைதும் செய்யப் பட்டிருக்கிறார். சித்ராவின் மரணத்தில் இன்னும் விலகாத மர்மங்கள் இருப்பதாக, அவரது தோழிகளும் சின்னத்திரை நடிகர்களும் சந்தேகங்களை எழுப்பியபடியே இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் வேகமாக முன்னேற வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசியல் வாதிகளுடனான தொடர்பை பலப்படுத்தி வந்த சித்ராவின் ஆசை, லட்சியமெல்லாம் சினிமா வில் பெரிய நடிகையாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான். அவர் நினைத்தது போலவே சினிமா ஹீரோயினாகவும் ‘"கால்ஸ்'’ என்ற படத்தில் நடித்து முடித்தார் சித்ரா. ஆனால் அந்தப் படம் ரிலீசாவதற்கு முன்பே சித்ராவின் வாழ்க் கையே முடிவுக்கு வந்தது.
தஞ்சா வூரைச் சேர்ந்த இளைஞர் ஜெ.சபரிஷ் சென்னை தரமணியில் உள்ள அரசு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் டி.எஃப்.டி. முடித்து விட்டு, சில படங்களில் அசோசியேட் கேமராமேனாக பணிபுரிந்த அனுபவத்துடன் டைரக்டராகும் முயற்சியில் இறங்கி, தனது முதல் படத்திலேயே "முல்லை' சித்ராவை ஹீரோயினாக்கினார். 2021 ஜன.01—ஆம் தேதி ரிலீசான சித்ராவின் "கால்ஸ்'’படத்தின் டீசரை ஒரு மில்லியன் பேர் பார்த்துள்ளனராம். இந்த மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும்...
சித்ராவை ஹீரோயினாக செலக்ட் செய்தது குறித்தும், இப்போது அவர் இல்லாதது குறித்தும் நெகிழ்ச்சியுடன் நம்மிடம் பேசினார் ‘"கால்ஸ்'’டைரக்டர் ஜெ.சபரிஷ்.
""இந்தக் கதையை ரெடி பண்ணிட்டு, இரண்டு வருடங்களில் மூன்று முன்னணி ஹீரோயின்களிடம் சொன்னேன். யாருமே நடிக்க ஒத்துக்கல. டி.வி. ஏரியாவில் இருக்கும் என்னோட ஃப்ரண்ட் மூலமா சித்ரா மேடம் சினிமாவில் நடிக்கும் முயற்சியில் இருப்பதைக் கேள்விப்பட்டு, 2019 மார்ச் மாதம் அவரிடம் கதை சொன்னேன். கதையைக் கேட்டதுமே எந்தக் கண்டிஷனும் போடாமல் நடிக்க ஒத்துக்கொண்டார். மற்ற சீனியர் ஆர்ட்டிஸ்டுகளான நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, ஸ்ரீரஞ்சனி ஆகியோரிடம் கதை சொல்லி, டேட் வாங்கியதும் ஜூலை மாசம் "கால்ஸ்' படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாச்சு.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், சென்னையில் இருக்கும் கால்சென்டரில் வேலை பார்க்கும்போது சந்திக்கும் பிரச்சினைகளையும், வேலை பார்க்கும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளையும் துளியும் ஆபாசமில்லாமல், அதே த்ரில்லிங்காவும் படமாக்கியுள்ளேன். இன்னும் சொல்லப்போனால் இளம் பெண்களின் செல்போனுக்கு வேண்டுமென்றே ராங்கால் ரூபத்தில் வரும் ராங்கான நபர்களின் இம்சையை சொல்லி யுள்ளேன். அம்மா,—அப்பா,—மகளுக்கிடையிலான சென்ட்டிமெண்ட் சீன்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் சித்ரா.
சென்னை, திருச்சி, தஞ்சை போன்ற அவுட்டோர் லொகேஷன்களுக்கு சித்ரா மேடமே தனியாக காரை ஓட்டிக்கொண்டு வருவார். ஃபேஸ் மேக்அப்பை அவரேதான் போட்டுக் கொள்வார். இரவு எத்தனை மணிக்கு ஷூட்டிங் முடிந்தாலும் தைரியமாக காரை ஓட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.
2019 டிசம்பர் மாதம் மொத்த ஷூட்டிங்கும் முடிந்தது. சித்ராவை கடைசியாக அன்றுதான் பார்ப்பேன் என கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
2020 மே. 02-ஆம் தேதி சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு, யூனிட்டில் எல்லோரும் போனில் வாழ்த்துச் சொன்னோம். கடந்த செப்டம்பர் மாதம் எடிட்டிங் செய்யாத ரஃப் டிரைலரை அவரது செல்போனுக்கு அனுப்பினேன். பார்த்துவிட்டு, படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணுங்கப்பா என வாட்ஸ்-அப் மெசேஜ் அனுப்பியிருந்தார். இறந்தபோது அவர் அணிந்திருந்த நைட்டி, ‘"கால்ஸ்'’ படத்திற்காக அவரே செலக்ட் பண்ணியது. சித்ராவுக்கு முதல் படமாகவும் கடைசிப் படமாகவும் எனது படம் அமைந்தது விதியின் கொடுமை தான்.
நானே தயாரிப்பாளர் என்பதால் பல சிரமங்களுக்கிடையே படத்தை முடித்து, சென்சாருக்கும் அப்ளை பண்ணியுள்ளேன். என்ன ஆனாலும் சரி, சித்ராவின் கடைசி ஆசைப்படி தியேட்டர்களில்தான் ‘"கால்ஸ்'’ படத்தை ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன்'' என கண்கலங்கினார் டைரக்டர் சபரிஷ்.
-ஈ.பா.பரமேஷ்வரன்