2008-ல் ஈரோட்டை மாநகராட்சியாக தரமுயர்த்தி தந்தை பெரியாரின் கனவை நிறைவேற்றினார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். அந்த மேயர் இருக்கையைக் கைப்பற்றத்தான் தி.மு.க. - அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நடக்கிறது.
ஈரோடு மாநகராட்சி மேயர் பதவி "பெண்கள் பொது' என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 60 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியில் அ.தி.மு.க. 57 வார்டுகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய 15 போக, 45 வார்டுகளில் களமிறங்கியுள்ளது.
தொடக்கத்தில் மந்தமாக இருந்த அ.தி.மு.க. வேட் பாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சால் வேகம் பெற்றிருக்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க வைட்டமின் "ப' வை தாராளமாக களத்தில் வீசுகின்றனர்.
அ.தி.மு.க. ஈரோடு முன்னாள் துணைமேயர் கே.சி.பழனிச்சாமி, மேயர் வேட்பாளராகத் தனது மனைவி நிர்மலாதேவியை அறிவித்து களப்பணியாற்றுகிறார். அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளான பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீஸ், சிவக்குமார், திருஞானம், தங்கவேல் ஆகியோர் தலா 5 கவுன்சிலர்களை வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைக்கிறார்கள்.
தி.மு.க. தரப்பில் வேட்பாளர் தேர்வுகளிலேயே பெரிய சொதப்பல் நிகழ்ந்தது. கட்சியின் தீவிர செயல்பாட்டாளர்கள் பலருக்கும் சீட் வழங்கவில்லை. மாநகரில் பெரும்பான்மையாக உள்ள முதலியார் சமூகத்தை ஈரோடு தி.மு.க. நிர்வாகம் புறக்கணித்துவிட்டது என்ற குமுறல் உ.பி.க்கள் மத்தியில் உள்ளது.
‘இப்போது ஆளுங்கட்சி நாம்தான். நமக்குத்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்கள்’ என்ற மிதப்பு தி.மு.க. தரப்பில் தொடக்கத்திலிருந்து இருந்துவந்தது. கட்சித் தலைமை கடுகடுப்பான உத்தரவைப் பிறப்பிக்க, இதன்பிறகே தீவிரமாகக் களத்திலிறங்கிய அமைச்சர் முத்துச்சாமி, தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வேகமாகச் செயல்பட வைத்தார். கூட்டணிக் கட்சிகளுக்கும் ஐந்து முதல் முப்பது "எல்' வரை உதவப்பட்டிருக்கிறது. கட்சி வேட்பாளர்களும் தாராளமாகச் செலவழித்துள்ளனர்.
மாநகர மேயர் போட்டியில் தி.மு.க. மாநகரச் செயலாளர் காசிபாளையம் சுப்பிரமணி மனைவி நாகரத்தினம், மாவட்ட நிர்வாகி திண்டல் குமாரசாமி மருமகள் கீர்த்தனா, மணிராசு மனைவி கோகிலவாணி ஆகியோர் ரேஸில் இருக்கின்றனர். மறைந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் அரங்கராசனின் மகளும் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளருமான செல்லப் பொன்னி மேயர் வேட்பாளர் ரேசில் தலைமையின் கவனத்தைப் பெற்றுள்ளார்.
தி.மு.க.வில் சீட் மறுக்கப்பட்ட 40-வது வார்டு வக்கீல் ரமேஷ்குமார் மற்றும் ராமலிங்கம், பழனியப்பா செந்தில் உள்ளிட்ட 6 பேர் சுயேட்சைகளாகக் களமிறங்கி இப்போதே வெற்றி மாலையுடன் வலம் வருகிறார்கள். சரிக்குச் சரியாக மல்லுக்கட்டும் ஈரோடு மாநகராட்சியில் வெற்றிபெறும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வெயிட்டான அதிர்ஷ்டக் காற்று வீசக்கூடும்!
-ஜீவாதங்கவேல்