தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு கொரோனா பரவலால் ஜல்லிக் கட்டு நடக்குமா என்கிற கேள்வி, போட்டிகளை நடத்தும் விழாக் குழுவினரிடமும் மாடுபிடி வீரர்களிடமும் எழுந்திருந்தது.
இது குறித்து அரசின் கவனத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் கொண்டு சென்ற நிலையில், "ஜனவரி 14-ல் அவனியாபுரம், 15-ல் பாலமேடு, 16-ல் அலங்காநல்லூரில் போட்டிகள் நடக்கும்' என தேதிகளைக் குறிப்பிட்டு தற்போது அரசாணை பிறப்பித்திருக்கிறார் முதல்வர். தேர்தல் காலமென்பதால் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீரும் இணைந்து துவக்கி வைக்கவிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கவனித்துவருகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
தமிழர்களின் வாழ்வியலிலிருந்து ஜல்லிக்கட்டினை ஒழித்துக்கட்ட தேசிய அளவில் சதி நடந்த போது, கடந்த 2017-ல் தங்களின் வீரமிக்க புரட்சி மூலம் ஜல்லிக் கட்டினை மீட்டெடுத்தனர் தமிழக இளைஞர்கள். தற்போது கொரோனா காலத்தில் அரசின் நிபந்தனைகளுடனான அனு மதிப்படி போட்டிகளை நடத்து வது எந்தளவுக்கு நடைமுறை சாத்தியம் என்ற கேள்வியும் இளைஞர்களிடம் உள்ளது.
ஜல்லிக்கட்டிற்காக பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கும் ஜல்லிக்கட்டு ராஜேஷிடம் இதுகுறித்து நாம் பேசியபோது... ""கொரோனா பரவலை சுட்டிக்காட்டி உலகப் புகழ் பெற்ற தமிழர்களின் விழாக்கள் பலவற்றையும் இந்த அரசு தடை செய்திருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளித்திருப்பதை பெரு மையாகத்தான் பார்க்கிறோம். ஆனால், ஜல்லிக்கட்டினை நடத்த கொடுக்கப் பட்டுள்ள விதிமுறை கள் நடை முறைக்கு ஒவ்வாதவை; தெளிவில்லாதவை.
போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளை 2 நபர் கள் மட்டுமே அழைத்து வர வேண்டும் என் கிறது நிபந்தனை. ஜல்லிக்கட்டு காளையை 2 நபர்களால் வாடி வாசலுக்கு அழைத்துவர முடியாது. குறைந்தது 5 நபர்களாவது வேண்டும். அப்போதுதான் காளையை கட்டுப்படுத்த முடியும். அதேபோல, "ஜல்லிக்கட்டில் மாடுகளை அடக்க 300 வீரர்களுக்கு மட்டுமே அனுமதி' என் பது மற்றொரு நிபந்தனை. பொதுவாக, ஜல்லிக்கட்டுப் போட்டியில் குறைந்தது 1000 வீரர்கள் கலந்து கொள்ளும் சூழலில், அதனைச் சுருக்கி மொத்தமே 300 பேர்தான் என்பதும், ஒரு "பேட்ச்'சுக்கு 50 பேர்தான் களத்தில் இருக்கவேண்டும் என்பதும் ஏற்புடையதல்ல. வெறும் 50 பேர்தான் என்பது, காளைகள் எளிதில் களத்தை விட்டு கடந்து போய்விடுவதுடன் ஜல்லிக்கட்டினை சுவாரஸ்யமற்ற தாக்கிவிடும்.
போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற அரசின் நிபந்தனை சரிதான். ஆனால், அந்த கொரோனா டெஸ்ட்டின் முடிவுகள் எத்தனை நாட்களுக்குச் செல்லும்? மாடுபிடி வீரர்கள் வெவ்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்ளவிருப்பதால் எல்லா இடங்களுக்கும் தனித்தனி டெஸ்ட் எடுக்கணுமா? என்கிற விபரங்கள் எதுவும் இல்லை. ஒரு டெஸ்ட்டுக்கு குறைந்த பட்சம் 3,500 ரூபாய் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. அப்படியிருக்கும்போது, 10 போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரு மாடுபிடி வீரர் 35,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்குமா? அதேபோல, ஜல்லிக்கட்டு என்றாலே லட்சக் கணக்கான மக்கள் திரண்டு நிற்பார்கள். அப்படியிருக்கும்போது, போட்டியை கண்டுகளிக்க 50 பார்வையாளர்களுக்குத்தான் அனுமதி என்கிறார்கள். மேலும், சமூக இடைவெளியையும் கடைப் பிடிக்க வேண்டுமாம். விளையாட் டில் எப்படி இடைவெளியை கடைப்பிடிப்பது?
அரசு சார்பில் நடக்கும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளையே இந்த நிபந் தனைகளுடன் நடத்த முடியுமா என்று தெரியவில்லை. அப்படி யிருக்கையில், பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழா கமிட்டிகள் மூலம் நடத்தப்படும் போட்டிகளை நடத்த முடியுமா? என்பதும் கேள்விக்குறிதான். நடை முறை சாத்தியமில்லாத இப்படிப் பட்ட நிபந்தனைகளால் ஜல்லிக் கட்டு விழா கமிட்டிகளும், போட்டி களில் கலந்துகொள்ளும் வீரர் களும் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
இப்படி பல்வேறு கேள்விகளுக்கு விடையில்லாத நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நிபந்தனைகளைப் பார்க்கும் போது, தேர்தலை நினைத்து வெறும் சடங்கிற்காக அனுமதி அளித்திருக்கிறது தமிழக அரசு. இல்லையென்றால் கொரோனா வை காரணம் காட்டி தமிழர்களின் பல்வேறு விழாக்களுக்கு தடை விதித்தது போல ஜல்லிக் கட்டு போட்டிகளுக்கும் தடை விதித்திருப்பார்கள். தேர்தல் வருவதால், ஜல்லிக்கட்டை அனுமதிப்பது போல அனுமதித்து விட்டு அதனை நீர்த்துப்போக வைப்பதற்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளையும் விதித்துள்ள னர்'' என்கிறார் சீற்றத்துடன்.
""விழா கமிட்டிகளுக்கும், வீரர்களுக்குமுள்ள சந்தேகங்களையும் நடைமுறை சாத்தியமில்லாத நிபந்தனைகளையும் முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஆனால், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சதி செய்துவரும் கும்பல்களின் அழுத்தம் காரணமாகவே இப்படிப் பட்ட நிபந்தனைகள் போடப் பட்டிருப்பதால் 9-ந் தேதிவரை அதில் அக்கறை காட்டவில்லை முதல்வர் எடப்பாடி''’என்கிறார்கள் நம்மிடம் பேசிய மாவட்ட கலெக்டர்கள்.
-இரா.இளையசெல்வன்