இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதறடித்து, ஒரே தேசம் -ஒரே மொழி என்பது போல ஜவுளி துறையிலிருந்து உயிர் காக்கும் மருத்துவத்துறை வரை தனது பெரும்பான்மை எதேச்சதிகார அதிகார செயல்பாட்டை பிரயோகித்து வருகிறது மத்திய பா.ஜ.க. மோடி அரசு.
ஒவ்வொரு அறிவிப்புக்கும் அதன் எதிர் வினையாக நாடு முழுக்க பல துறை நிபுணர்கள் எதிர்ப்பையும் கண்டனக் குரல்களையும் வெளிப்படுத்துகிறார்கள். இப்போது மருத்துவர்களும் மத்திய பா.ஜ.க. அரசின் அறிவிப்புக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவை கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 1 ந் தேதி முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள்.
பிப்ரவரி 1ந் தேதி காலை ஈரோட்டில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள காலி இடத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் டாக்டர் ராஜா இதற்கு தலைமை தாங்கினார்.
இந்திய மருத்துவ சங்கத் தின் இளம் மருத்துவர்கள் பிரிவு தலைவர் அபுஹாசன், முன்னாள் மாநிலத் தலைவர் சுகுமார் உள்பட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் குறித்து இச் சங்கத்தின் தேசிய துணை தலைவர் ராஜா கூறும்போது, ""மத்திய அரசின் சென்ட்ரல் கவுன்சில் பார் இந்தியன் மெடிக்கல் என்ற இந்த அமைப் பானது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆயுர்வேத மருத்துவம் படித்த மருத்துவர்கள் கிட்டத் தட்ட 60 வகையான அலோபதி அறுவை சிகிச்சையை செய்ய லாம் என்று ஒரு அறிவிப்பு ஆணையை வெளியிட்டுள்ளது. இது மட்டுமல்ல வருகிற 2030-க்குள் இந்தியா முழுக்க ஒரே தேசம், ஒரே மருத்துவ முறையை கொண்டு வருவதற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அதிதீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. அப்படி வந்தால் அது பாதுகாப்பில்லாத மருத்துவ முறையாகும். இதையெல்லாம் வலியுறுத்தி தான் எங்களின் இந்திய மருத்துவ சங்கம் மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து 1 ந் தேதி முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் ஏற்கனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம், ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்தான் இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த போராட்டம் நாடு முழுவதும் 60 மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் 38,000 தனியார் மருத்துவர்கள் உள்ளனர். எங்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அரசு, பல் மருத்துவர்கள், செவிலியர் சங்கத் தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் ஒரே சிகிச்சை முறை என்பது நடை முறைக்கு ஒத்துவராது. இன்று மனித உடல் என்று எடுத்துக் கொன்டால் ஒவ்வொரு உறுப் பிற்கும் தனித்தனியே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலைவலி என்றால் அதற்கான வைத்தியம்தான் பார்க்க வேண்டும். மாறாக அதற்கு குடல் புழு மாத்திரை கொடுக்க கூடாது. விஞ்ஞான ரீதியாக மருத்துவம் உலகம் முழுக்க வளர்ந்து வரு கிறது. அதன் நவீனத்தை மக்கள் நலன் சார்ந்த அரசாக இருந்தால் உணர்ந்து கொண்டு இதில் திறமை வாய்ந்த மருத்துவ ஆய் வாளர்களை கொண்டு இந்தியா வில் மருத்துவ சேவையை அரசு உயர்த்த வேண்டும்.
திறமைமிக்க இந்திய மருத்துவர்கள் பல்வேறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா காலக் கட்டத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 740 அலோபதி மருத்துவர்கள் வைரஸ் தாக்கத்தால் இறந்துள்ள னர். அவர்களின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும மதித்த, மத்திய அரசு இந்த தவறான முறையை ரத்து செய்ய வேண்டும். ஈரோட்டில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் ஷிப்ட் முறையில் நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தத் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்'' என்றார்.
ஒவ்வொரு வகை மருத்து வத்திற்கும் அதனதன் சிறப்பியல்புகள் உண்டு. அவற்றைத் தனிப் பட்ட முறையில் மேம்படுத்த வேண்டும் என்பதையும், ஒன்றை யொன்று போட்டுக் குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் நோயாளிக்கு ஆபத்தை உண்டாக்கும் என்றும் சுகாதார அமைப்புகள் எச்சரிக்கின்றன.
எதையும் கண்டுகொள்ளா மல், எல்லாவற்றையும் ஒரே புள்ளியில் கொண்டு வருவது என்பது இந்திய பண்பாட்டை சிதைப்பது போல... நெசவாளி, விவசாயி, தொழிலாளி, மருத்துவர் என எல்லா தரப்பினரையும் விடாமல் போராட வைக்கிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடு.