தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களின் முதல் உரையை அவையில் பதிவு செய்தார்கள். தி.மு.க. உறுப்பினர் பரந்தாமன், தனது எழும்பூர் தொகுதிக்காக பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் கூறியதோடு, தொகுதியின் பெயரையே மாற்றவேண்டும் என கோரிக்கை வைத்தார். எதற்காக பெயர் மாற்றம் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு:
முதன்முதலாக சபைக்குச் சென்ற போது எந்த மாதிரியான உணர்வில் இருந்தீர்கள்?
அதை விவரிப்பது என்பதைக் காட்டிலும், அப்போது வழிந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டேன் என்பதே இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதிலாக இருக்கும். அப்போது மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தேன். எதற்காக நாம் உழைத்தோமோ, அதை அங்கீகரித்து தலைவர் நமக்கு வாய்ப்பு கொடுத்து சட்டப்பேரவைக்கு அழைத்துச் செல்வது என்பது மிகவும் சந்தோஷமான ஒரு நிகழ்வு. அதையும் தாண்டி, இனி நிறைய உழைக்க வேண்டும், அதற்காக என்னை தயார் செய்ய வேண்டும் என்ற பொறுப்பு தற்போது கூடுதலாக வந்துள்ளது.
சட்டமன்றத்தில் நீங்கள் பேசியபோது "எழும்பூர் என்ற பெயரை எழுமூர் என மாற்ற வேண்டும்' என்று பேசியிருக்கிறீர்கள். என்ன காரணம்?
எழும்பூர் என்பதை ஆங்கிலத்தில் எக்மோர் என்று சொல்கிறோம். எக்மோர் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்து அறிஞர் பெருமக்களிடம் பேசும்போது, அதற்கான குறிப்புகளைக் கொடுத்தனர். 11-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டில் "எழுமூர்' என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது. 1297-ல் பொறிக்கப்பட்ட நெல்லூர் சோழர் கல்வெட்டில் "எழுமூர் துடர் முனிநாடு' என்ற கிராமம் புழல் கோட்டத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயநகர காலத்தில் ஸ்ரீரங்கநாத யாதவராயா கல்வெட்டில் திருவொற்றியூர் இருந்த மடத்திற்கு, எழுமூர் -துடர்முனி நாட்டின், இன்றைய சேத்துப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர்கள் மானியம் கட்டியதாக செய்தி உள்ளது. இவை மூன்றுமே இன்றைய எழும்பூரையே குறிக்கின்றன.
எக்மோர் என்பது தமிழ்ச்சொல் அல்ல. எழும்பூர் என்பதும் தமிழ் இலக்கணத்தின்படி வைக்கப்பட்ட பெயர் அல்ல. எனவே 900 ஆண்டுகளுக்கு முந்தைய பெருமை தொடர, "எழுமூர்' எனத் திருத்தம் செய்து, ஆங்கிலத்திலும் ஊழஐமஙஞஞத எனக் குறிப்பிட வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
வழக்கறிஞர்களுக்கு வீடு கிடைப்பதில்லை. நானே உதாரணம் என குறிப்பிட்டீர்கள்... அது பற்றி கூற இயலுமா?
வழக்கறிஞர்களுக்குப் பெண் கொடுக்க யோசிப்பார்கள், அதை நானே என்னுடைய சொந்த வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். அதைப்போல வீடு கிடைப்பதில் பிரச்சினை இருப்பதை தற்போது நானே நேரில் பார்த் துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக பொறுப் பேற்ற பின், தொகுதியிலேயே தங்கவேண்டும் என்று முடிவெடுத்த நான், அதற்காக வீடு பார்த்தேன். பல வீடுகள் இறுதி செய்யப்பட்டு, கடைசியில் தள்ளிப்போனது. அவர்கள் யாரும் நான் வழக்கறிஞர், அரசியல்வாதி என்று தனிப்பட்ட காரணங்களைக் கூறாமல் வேறு ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிராகரிப்பார்கள். தற்போது நான் இருக்கும் ஃபிளாட் ஓனர் வக்கீல்தான். அவருக்கு அந்த தொழில் மீது புரிதல் இருந்ததால் வீடு கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
"ஒரு சில வழக்கறிஞர்கள் வீட்டை காலி செய்யாமல், சட்டம் தெரியும் என மிரட்டு வார்கள்' என்று வீட்டு உரிமையாளர்கள் சொல்கிறார்களே...
அந்த சிக்கல் இருக்கிறது. நடைமுறையில் அது இல்லை என்று சொல்ல முடியாது. இந்த சிக்கல் வக்கீல் மற்றும் போலீஸ், அரசியல்வாதி களுக்கும் உள்ளது. என்னைப் பொறுத்தவரை இதனை ஒரு ஆயுதமாக எடுக்கக்கூடாது. அதனை ஆயுதமாக கையில் எடுப்பது யாராக இருந் தாலும் தவறுதான். இது போன்ற இமேஜை களைவதற்கு எல்லோருக்கும் கடமை உள்ளது. வங்கியில் கடன் தரமாட்டார்கள், எனக்குத் தந்தார்கள். கார் வாங்க தந்த கடனை முதலில் அடைத்தேன்... அடுத்து ஒரு கடன் தந்தார்கள். எனவே நாம் நடந்துகொள்ளும் முறை என்பது மிக முக்கியமான ஒன்று. நம் செயல்பாடு சரியாக இருந்தால் யாரும் நம்மை வேண்டா வெறுப்பாக பார்க்கமாட்டார்கள்.
கொடநாடு கொள்ளை, கொலை சம்பவத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தன்னை சிக்க வைக்க வேண்டுமென்றே மேலதிக விசாரணை என்ற பெயரில் சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்களே...
அந்த சம்பவம் நடந்தபோது யார் கையில் இருந்தது அரசாங்கம், யார் கையில் இருந்தது போலீஸ். உங்க கட்சித் தலைவி வீட்டில் கொள்ளை நடந்திருக்கிறது... வெட்கமாக இல்லை உங்களுக்கு. கொள்ளையடிச்சவங்களை கண்டுபிடிச்சி உள்ள போட துப்பில்லாம பழனிச்சாமி வியாக்யானம் பேசுறாரு.
தி.மு.க. வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்களே...
நிரூபிக்க முடியுமா அவரால்? கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அதிகம் நாம் உள்ளே போகக்கூடாது. கொள்ளையடித்ததற்காக தண்டனை ஒரு முதலமைச்சருக்கு வாங்கிக் கொடுக்கிற வல்லமை படைத்த சட்டத்துறை தி.மு.க.வில் உள்ள சட்டத்துறை மட்டும்தான். சுதந்திர இந்தியாவில் ஒரு முதலமைச்சர் காரில் தேசியக் கொடி கழட்டப்பட்டு நேரடியாக சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்த ஒரு அமைப்பு தி.மு.க.வின் சட்டத்துறை. ஒருவேளை அந்த அச்சமும், பயமும் பழனிசாமிக்கு இருக்கலாம்.
படங்கள்: விவேக்