திருச்சியில் தி.மு.க மாநில மாநாட்டு தேதியை மு.க. ஸ்டாலின் அறிவித்த நிலையில், மதுரையில் தி.மு.க கூட்டணிக்கான முன்னெடுப்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, இது கொள்கைக் கூட்டணி என நிரூபித்திருக்கிறார்கள் தோழர்கள்.
பிப்ரவரி 18ல் மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டு மேடையில், தி.மு.க, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க. மற்றும் திராவிடர் கழகத் தலைவர்கள் கரம் உயர்த்தியது கூட்டணியின் பலத்தை உயர்த்தியுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவையில் இதே போல அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்தி, வெற்றிப் பாதைக்கு வித்திட்டது.
ஆளுந்தரப்பில் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், கம்யூனிஸ்ட்டு மாநாட்டின் அரசியல் தீர்மானம் அதிக கவனம் பெற்றுள்ளது. ""இதனை வெறுமனே ஒரு சட்டமன்ற தேர்தலாக மட்டும் பார்க்க முடியாது மத்திய பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாக செயல்படும் இந்த அரசை மொத்தமாக அப்புறப்படுத்தி தமிழகத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக இத்தேர்தலை அமைத்துக் கொள்வதோடு, மத்தியில் ஆளும் மக்கள் விரோத பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் எப்போதும் இடம் இல்லை என்பதாக தமிழக தேர்தல் முடிவின் மூலம் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கு சரிவு பாதையை ஏற்படுத்துவதாகவும் அமைய வேண்டும்'' என மாநாட்டில் அரசியல் தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டை தொடங்கி வைத்த சி.பி.ஐ.யின் பொதுச் செயலாளர் டி.ராஜா ""மத்திய பா.ஜ.க. மோடி அரசு இந்தியாவின் மதச் சார்பு கொள்கையை, அரசியல் அமைப்பு சட்டத்தை, பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றை முகமாக கொண்டுவர துடிக்கிறது, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதிக்கு, கூட்டாட்சி தத்துவத்திற்கு சாவுமணி அடிக்கிறது. மாநில உரிமைகளை பறிக்கிறது. பெரு முதலாளிகளுக்கு சாதகமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைப்பாவையாக செயல்படுகிறது. லாபமீட்டும் பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்கிறது, தலித் மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் சாசன உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மூழ்கடிக்கிறது. இவற்றை பற்றி கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு தேசவிரோத பட்டம் சூட்டுகிறது.
திராவிட இயக்கத்தால் வளர்க்கப்பட்ட சமூக நீதியின் பிறப்பிடமான இந்த மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு திராவிட இயக்க கொள்கைகளுக்கு எதிராக மாநில உரிமைகளை மத்திய பா.ஜ.க. அரசிடம் அடகுவைத்து பி.ஜே.பி.யின் பினாமியாக ஒரு அடிமை அரசாக உள்ளது. இது உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நோக்கத்தை தாண்டி கொள்கை அடிப்படையில் இணைந்த மக்கள் நலன் சார்ந்த தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதின் மூலம் பா.ஜ.க.வின் பினாமி அரசும் அகற்றப்படும் இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கும் அதன் இந்துத்துவா கொள்கைக்கும் தமிழகம் அடித்த சாவுமணியாக உறுதி செய்யப்படும்'' என்றார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ""நாம் அனைவரும் ஒரே கொள்கையுடன், பாசத்தால் இங்கு இணைந்துள்ளோம். திராவிட இயக்கம் இல்லையெனில் நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஏற்றுக் கொன்டிருப்பேன் என தலைவர் கலைஞர் கூறினார். தி.மு.க.வும், கம்யூனிஸ்ட் இயக்கமும் அரசியல் ரீதியாக மட்டுமல்ல கொள்கை, சித்தாந்த அடிப்படையில் நாம் நெருக்கமானவர்கள். வருகிற சட்டமன்ற தேர்தல் லட்சியத்திற்கான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். ஒ.பி,எஸ்., இ.பி.எஸ் கரங்களை மோடி உயர்த்தி பிடித்து ஊழலுக்கு உதவி செய்துள்ளார். மோடியின் ஒரு கரம் காவி, மறு கரம் கார்ப்பரேட், அதோடு ஊழலும் கரம் கோர்த்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண்மை, மின்சாரம், தமிழ் வளர்ச்சி, ஆகியவற்றில் மாநில உரிமைகள் தாரைவார்க்கப்பட்டுள்ளது. இந்த அடிமை அ.தி.மு.க.வை வைத்து தமிழகத்தில் காலூன்றலாம் என திட்டம் போட்டுள்ள பா.ஜ.க.வை தமிழகம் துடைத்தெறியும் தேர்தலாக இது அமையும்'' என்றார்.
மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ., மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் திருமா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன். கொ.ம. தே.க. ஈஸ்வரன், முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், ம.ம.க. ஜவாஹிருல்லா, என கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஒற்றுமை யை வெளிப்படுத்தினார்கள். கம்யூ னிஸ்ட் மூத்த தலைவர்கள் நல்ல கண்ணு, தா.பா., சி.மகேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். தமிழகம் முழுக்க இருந்து பல்லாயிரக்கணக்கில் செந்தொண் டர்கள் குவிந்திருந்தனர்.
குறுகிய காலத்தில் தோழர் களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அரசியல் எழுச்சி மாநாடு தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் ஒற்றுமையையும், தேர்தலில் வெற்றிக் கான நம்பிக்கை விதையையும் விதைத்துள்ளது. அதோடு தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகளுக் கான உரிய பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துள்ளது.