ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி சுரேஷ் சுதா அழகன் அரசுப் பள்ளி தொன்மைப் பாது காப்பு மன்றத்தைச் சேர்ந்த +2 மாணவி முனீஸ்வரி, முதலாம் ராஜராஜ சோழன் இலங்கையை வெற்றி கொண்டதன் அடையாள மாக வெளியிடப்பட்ட ஈழக்காசுகளைக் கண்டெடுத்த செய்தியை நக்கீரன் இணையத்தில் "இலங்கையை வென்ற ராஜராஜசோழன். ஆதாரத்தைக் கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவி' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
அந்தச் செய்தி வெளியான நிலையில், கனிமொழி எம்.பி. மாணவி முனீஸ்வரியையும், அந்த மாணவிக்கு பயிற்சியளித்த தொன்மை பாதுகாப்பு மன்றப் பொறுப்பாளர் ஆசிரியர் ராஜகுரு மற்றும் பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டி ருந்தார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், திருப்புல்லானி காவல் நிலையத்திற்கு அழைத்து மாணவியைப் பாராட்டிப் பரிசும் வழங்கினார்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கனிமொழி எம்.பி.யை தொன்மை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜகுரு தலைமையில், தொல்லியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் முதுகலை தமிழ் மாணவி சிவரஞ்சனி, தமிழ் பிராமி, வட்டெழுத்துகளைப் படிக்கும் வட்டெழுத்து கோகிலா, தமிழ் பிராமி, கல்வெட்டு, கோயில் கட்டிடக் கலை, ஓவியம் பற்றி அறிந்த பிரவீனா, டோனிகா மற்றும் பொற்பனைக்கோட்டை அகழாய்வுப் பணிகளில் பங்கேற்ற மாணவன் மனோஜ் ஆகியோர் சந்தித்தனர்.
ஒவ்வொருவரின் திறமைகளையும் கேட்டறிந்த கனிமொழி எம்.பி., "கல்வெட்டு, கட்டிடக் கலை அறிந்தவர்கள் குறைவாகி வருவதால் நீங்கள் அனைவரும் தொடர்ந்து பயிற்சி பெற்று ஆய்வுகள் செய்ய வேண்டும். அதற்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம்'' என்று பாராட்டியவர், மாணவி முனீஸ்வரியை தேடியிருக்கிறார். "ராஜராஜசோழன் இலங்கையை வென்றதன் அடையாளமாக வெளியிடப்பட்ட ஈழக்காசு கண்டெடுத்த மாணவி முனீஸ்வரி ஏன் வரவில்லை?'' என்று கேட்டவர், "பொதுவெளியில் பெண் பிள்ளை படம் வருவது சரியில்லை என்று சிலர் மிரட்டியதால் அந்த மாணவி இன்று வரவில்லை'' என்றதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவர், "அவரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறிவிட்டு, அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கினார். இந்த நிகழ்வால் மாணவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய தொல்லியல் மாணவர்கள், " திருப்புல்லானியில் சீனப் பானை ஓடுகளை மாணவர்கள் எடுத்ததும், இப்ப ராஜராஜ சோழனின் ஈழக்காசு கண்டெடுத் ததும், நாம் அறியாத பல வரலாறு களை அறிய வைத்திருக்கிறது.
கனிமொழி எம்.பி. எங்களைப் பாராட்டிப் பரிசு வழங்கியதோடு எங்களுக்குத் தேவை யான உதவிகளைச் செய்வதாகக் கூறியது ரொம்ப மகிழ்ச்சி யாக உள்ளது" என்றனர்.