Skip to main content

இளம் பெண்கள் தொடர் கொலை! தமிழ்நாடு பழிநாடு!

Published on 11/03/2018 | Edited on 12/03/2018
பள்ளிச் சிறுமிகளையும், கல்லூரிப் பெண்களையும், வேலைக்குச் செல்லும் பெண்களையும் "ஒருதலைக் காதல்' என்ற பெயரில் கொலை செய்யும் போக்கு தமிழ்நாட்டை அச்சத்தின் பிடியில் சிக்க வைத்திருக்கிறது. பட்டப்பகலில் சென்னை -நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலேயே ஸ்வாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார். அதில்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

காதல் பல முறை வரும் - டாக்டர் ஷாலினி 

Published on 22/03/2018 | Edited on 22/03/2018

கடந்த ஆண்டிலும் இந்த ஆண்டிலும் தமிழகத்தில் மட்டுமே காதலின் பெயரில் பல கொலைகள். தான் காதல் செய்த பெண்ணை, அவள் வீட்டிற்குச் சென்று எரித்துக் கொல்கிறான் ஒரு இளைஞன். காதலித்த பெண் தன்னை தவிர்த்ததால் அவளது கல்லூரி வாசலில் வைத்து கத்தியால் குத்திக் கொல்கிறான் ஒரு இளைஞன். காதலை ஒத்துக் கொள்ளாவிட்டால் இன்றும் ஆசிட் அடிக்கிறார்கள். காதல் தான் உலகின் மிகப் பொதுவானதும் மிக சிக்கலானதுமாக மனித குலம் தோன்றியதிலிருந்தே இருக்கிறது. கொலை, காதலின் வெளிப்பாடா, அதன் பெயர் காதல்தானா? ஒரு பெண் ஒருவரைக் காதல் செய்தால், பிறகு என்ன நேர்ந்தாலும் அவரை மட்டுமே காதல் செய்ய வேண்டுமென்பதுதான் ஒழுக்கமா? மகளின் காதலில் பெற்றோரின் கௌரவம் இருக்கிறதா?  சிக்கலான பல கேள்விகள் மனதில் எழ, சந்தித்தோம் மனநல நிபுணர் மருத்துவர் ஷாலினியை...        

 

dr,shalini



காதலித்துத் திருமணம் செய்பவர்கள் ஒரு பக்கம், பெண் காதலித்து திருமணம் செய்வதை ஏற்றுகொள்ள முடியாத பெற்றோர்கள் ஒரு பக்கம், இன்னுமொரு பக்கம் காதலியை காதலனே கொலை செய்வது. இதையெல்லாம் எவ்வாறு எடுத்துக்கொள்வது ?

இது எல்லாவற்றையும் எதிர்தரப்பிலிருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு பெண்ணும் ஆணும் காதலித்து திருமணம் செய்து, அன்னியோன்யமாக இருந்துவிட்டு, அதற்கு பிறகு கணவன், 'என்னை விட்டுச் சென்றுவிடு, இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என்று சொல்வதற்கு ஒரு ஆணுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோன்று தான் ஒரு பெண்ணுக்கும் உள்ளது. சட்ட ரீதியாக ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால், பாலியல் ஏமாற்றங்களால் ஒரு ஆண் பெண்ணை எளிதாக விரட்டிவிடுகிறார். இதை ஒரு பெண் செய்தால் மட்டும் அவர்களது ஆதிக்க மனநிலை, 'நான் உனக்கு எவ்வளவோ செய்திருக்கேனே' என்றெல்லாம் பேச வைக்கிறது. அவர்களால் அதை ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதாவது, நான் உனக்கு செலவு செய்ததால் நீ எனக்கு உடைமையாகிவிட்டாய் என்று ஒரு எண்ணம் வருகிறது. அந்த எண்ணத்தைதான் திருத்திக்கொள்ள வேண்டும். இதுவே திருமணத்திற்கு பின் வயது முதிர்ந்து தன் குழந்தையைப்  படிக்க வைத்து ஆளாக்கிய பின்னர் பிரிகிறேன் என்று சொல்லக்கூடிய பெண்களும் இருக்கிறார்கள். அப்போது ஆண், அந்தப் பெண்ணை கொல்வதோ எதுவும் செய்வதோ கிடையாது. நாம் இத்தனை வருடம் ஏதோ தவறு செய்திருக்கிறோம் என்று யோசிப்பார்கள். இது அவர்களின் முதிர்ச்சி. 

திருமணம் என்பது வேறு... ஆனால் காதல் என்பது நம்பிக்கையின் அடிப்படையில் தானே இருக்கிறது?

திருமணம் என்பதில் கூட பிரிந்து கொள்ளலாம் என்கிற ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது பல சென்டிமென்ட்கள் இந்த திருமணத்தில் இருந்தால் கூட, திருமணமாகிய பின்னர் சரியாக வரவில்லை என்றால் பிரிந்துகொள்ளலாம் என்கிற ஒன்று இருக்கும்போது காதலில் என்ன இருக்கிறது? இது ஒரு நம்பிக்கையால் ஆனது என்றெல்லாம் கிடையாது. எப்படி ஒருவர் ஏமாற்றக் கூடாதோ, அதே போல  கட்டாயப்படுத்தப்படவும் கூடாது. ஒருவரின் விருப்பப்படி வாழ்வதற்கு தண்டிப்பேன் என்று சொல்ல சட்டத்திற்கும் உரிமை இல்லை, வேறு எதற்கும் உரிமை இல்லை. பிறகு ஏன் ஒரு ஆணுக்கு மட்டும் அந்த உரிமை இருக்குனு நினைச்சிக்குறாரு? 

 

swathi murder scene



'நான் அந்த பெண்ணுக்காக செலவு செஞ்சேன், சொத்தை வித்தேன்' என்று இதுபோன்ற எண்ணற்ற காரியங்கள் செய்யும்போது அவர்கள் நம்மை ஏமாற்றுவது கொலை செய்யும் அளவுக்கு கோபமாக வெளியாகிறது என்று சொல்கிறார்களே?

ஆணவக்கொலைகள் செய்பவர்களும் இதைத்தான் சொல்கிறார்கள். 'நான் பெத்தேன், வளத்தேன், கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். இத்தனை செய்திருக்கேன். ஆதலால் எனக்கு கொலை செய்ய உரிமை இருக்கிறது' என்று பெற்றோர்கள் சொல்வது எவ்வளவு தவறான ஒரு விஷயமோ, அதே தவறை காதலன் செய்தாலும் தவறுதான். நம் கண்ணோட்டத்தில், 'பாவம் உண்மையிலேயே அவன் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான் போல, அதனால தான் கொன்னுட்டான்' என்கிறோம். எதுவாக இருந்தால் என்ன? அதற்காக கொலை செய்வது அதைக்காட்டிலும் தவறுதான். ஒரு பெண் தன்னை ஏற்றுக்கொள்ளாதது, விட்டுச்செல்வது போன்ற ஒரு சம்பவம் நடக்கிறதென்றால், அதை ஏற்றுக்கொள்ளும் பயிற்சி நம் ஆண்குழந்தைகளிடம் இல்லை. அதை ஆண்குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற விஷயங்களை கற்றுக்கொடுக்காதது நம் தவறு. இப்படிப்பட்ட சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளும் ஹீரோக்களை நம் சினிமாக்கள் காட்டியதே இல்லையே. 

தன் மனைவி இன்னொரு ஆணை நேசிக்கிறார் என்ற விஷயத்தை ஒருவரால் எளிதாக கடந்துவிட முடியுமா ?

ஆணாக இருப்பவர்களுக்கு மட்டுமில்லை, பெண்ணாக இருப்பவர்களுக்கு கூட, தன் கணவன் ஏமாற்றுவதை ஒத்துக்கொள்ள முடிவதில்லை. இதுபோன்ற சூழ்நிலை வருவதெல்லாம், மனைவியோ கணவனோ விட்டுப் போய்விட்டால் அவர்களுக்கு வேறு யாருமில்லை என்ற ஒரு மனப்பான்மையினால்தான். 'இதுவே போய்டுச்சு, வேற என்ன இருக்கு' என்ற மனப்பான்மையில் தான் வன்முறையை கையாள்கிறார்கள். முதலில் பக்குவமாக பேசவேண்டும், அவர்களின் நிலையை புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு மனக்கணக்கு உண்டு, இதனால் என்ன லாபம் நஷ்டம் என்றெல்லாம் யோசித்துதான் முடிவு செய்வார்கள். ஒரு ஆண் எப்படி வன்முறையை கையாள்கிறார்களோ, அதேபோன்று ஒரு பெண் அந்த நபரை கொல்லாமல் கொல்வார்கள். மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி அவர்களை மனஉளைச்சலுக்குக் கொண்டு செல்வார்கள். இவர்களை பொறுத்தவரை அது நியாயம் என்று கருதினாலும்கூட, இன்னொருவரின் சுதந்திரம் பறிபோகிறது. 

ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரச்சனை வந்தபிறகும் இன்னோருவர் பேசி அதை சரி செய்தால் பெண்கள் உடனே மாறிவிட்டு அவர்களுடன் திரும்பி வாழ ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் ஆண்களோ இனிமேல் முடியாது என்கின்றனர். இது ஏன் ?    

பெண்கள் எப்போதும், " நான் கோவத்துல பேசியிருப்பேன். ஆனால் உன்மேல அன்பாதானே இருக்கேன்" என்று சொல்வார்கள். நம் வளர்ப்பு முறை, ஜீன்களின் படி ஆணுக்கு அன்பை விட மானம் பெரிது. பெண்ணுக்கு மானத்தை விட அன்பு பெரிது. இதுதான் பிரச்சனையே.  

 

swathi aswini



ஒரு பெண் ஆணை விரும்பினால், அதை பிடிக்காத பெரியவர்கள் அவர்களை எப்படியாவது மாற்றிவிடுங்கள் என்று மருத்துவர்களை அணுகுவதுண்டு. அதைப்பற்றி?

கண்டிப்பாக.. அப்படியெல்லாம் நிறைய பேர் அணுகிறார்கள். இருந்தாலும் மனிதனின் மூளை இருக்கிறதே, அது ஒருமுறை முடிவு செய்துவிட்டது என்றால் அதை எவ்வளவு பெரிய மருத்துவர் வந்தாலும் மாற்றவே முடியாது. இவர் நமக்குத் தகுதியானவர் என்று யோசித்துவிட்டால் மாறவே மாறாது. தகுதியற்றவர் என்று நினைத்து விட்டால் உடனே கூட மாறிவிடும். அதிலும் பெண்களின் மனது எளிதாக மாறிவிடும். பெண்களுக்கு இயல்பாகவே 'ஆக்சிடோசின்' என்கிற ரசாயனம் சுரக்கும். அது ஒரு அம்மாவுக்கும் பையனுக்கும் சுரக்கக் கூடியது. எப்படி ஒரு அம்மா தனக்குப் பிறக்கும் பதினைந்தாவது குழந்தையாக இருந்தாலும் அன்பு செலுத்துவாரோ, அதேபோன்றுதான் காதலிகளும் காதலனை ஒரு குழந்தையாக பாவித்து அன்பு செலுத்துவார்கள். அதாவது எத்தனை காதலர்கள் வந்தாலும் அன்பு செலுத்துவார்கள். 

காதல் என்பது புனிதமானது அல்லவா, ஒரு முறைதானே வரும்?

ரியலிஸ்டிக்கா சொல்லனும்னா காதல் பலமுறை வரும். நம் ஊர்களில் இந்தக் கவிஞர்கள் எதுகை மோனைக்காக பாடிவிட்டார்கள். ஆனால் அவர்களுக்கே எத்தனை மனைவி இருக்கிறார்கள் என்று பாருங்கள். காதல் என்பது ஒன்றும் இப்போது சென்னையில் வரவில்லை. ஆப்பிரிக்காவில் பழங்குடிகளாக இருக்கும் போதே வந்தது. ஒரு கிராமத்தில் முப்பது பெண்கள் இருக்கிறார்கள், அதில் ஒருவர் காதலிக்கிறார். அந்த காதலன் இறந்துவிட்டார் என்றால் இவர் அப்படியே கல்யாணம் எதுவும் பண்ணிக்கொள்ளாமல்  இறந்துவிடுவாரா? அது உண்மையில் தவறு. நாம் இயற்கைக்கு செய்யும் துரோகம். இது ஒரு சுழற்சி முறை. அதை நாம் சரியாக செய்துதான் தீர வேண்டும்.