தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடப்பது தொடர் கதை. சேலம் ஒன்றியத்தில் ஊழல் முறைகேடுகள் செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படாமல், சுட்டிக்காட்டிய முகவர்களே பழிவாங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆவின் பால் விற்பனைக்கு செல்லாத இடங்களுக்கு விநியோகித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் புதிதாக கொண்டு வரப்பட்ட விநியோகஸ்தர்களை 10,000 ரூபாய் மட்டுமே அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு ஏற்கனவே, 1 லட்ச ரூபாய்க்குமேல் அட்வான்ஸ் கொடுத்து பால் விற்பனை செய்யும் முகவர்களின் இடங்களிலேயே நியமித்து விட்டார்கள். மேலும், பால் விற்பனையில் 30 வருடங்களுக்கு மேலாக ஈடுபட்டு வரும் முகவர்களுக்கு வெறும் 5 சதவீத கமிஷனும் ஊக்கத் தொகையாக 50 பைசாவும் மட்டுமே கொடுக்கப்பட்டது. புதிதாக வந்த விநியோகஸ்தர்களுக்கோ 8.5 சதவீத கமிஷன் கொடுத்து, எந்த மாவட்டத்திலும் இல்லாத புதிய நடைமுறையாக விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 3 டூ 5 லட்ச ரூபாய் கடன் தொகை என கூடுதல் சலுகைகளைக் கொடுத்து ஆவின் முகவர்களின் விற்பனையையே சுய லாபத்துக்காக முடக்கி விட்டனர் சேலம் ஒன்றியத்தினர்.
இதனால், சேலம் ஒன்றியத்தில் தனியார் பால் முகவர்களை ஆவினுக்கு கொண்டு வராமல் கமிஷன் அதிகமாக கிடைக்கும் என்றும் ஏற்கனவே இருக்கிற முகவர்களையே தங்களிடம் வாங்கச் சொல்லி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். விஜய்பாபுவுக்கு பதிலாக வந்த பொதுமேலாளர் நர்மதாதேவியும் இதையே தொடர்கிறார் என்றெல்லாம் குற்றஞ்சாட்டி பல்வேறு கோரிக்கைகளுடன் கடந்த 2021 பிப்ரவரி-3 ந்தேதி காத்திருப்பு போராட்டம் அறிவித் தார்கள் ஆவின் பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர் சங்கத்தினர்.
அதற்காக காவல்துறை அனுமதியை பெறச் சென்ற போது முதலமைச்சரின் மாவட்டத்தில் போராட்டம் என்றால் தேர்தல் நேரத்தில் அனைவருக்குமே நெருக்கடி ஏற்படும். அதனால், பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று சேலம் ஒன்றிய பொதுமேலாளர் நர்மதா தேவியிடம் பேசினார்கள் காவல்துறை உயரதிகாரிகள். காவல்துறையின் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் முகவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பொது மேலாளர் நர்மதா தேவி உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதற்குப்பிறகுதான், தங்களை பழிவாங்க ஆரம்பித்தார் நர்மதா தேவி என்று குற்றஞ்சாட்டும் ஆவின் பால் முகவர்கள் மற்றும் விற்பனை பணியாளர் சங்கத்தின் தலைவர் அருணா சுந்தர், பொதுச்செயலாளர் ஜவஹர், துணைத்தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் நம்மிடம், “ஜனவரி-29 ந்தேதி பேச்சுவார்த்தை நடத்தியபிறகு பிப்ரவரி-1ந் தேதியிலிருந்து பொது மக்களுக்கு விற்பனை செய்ய எங்களுக்கு வரவேண்டிய பால் பாக்கெட்டுகளை மட்டும் நிறுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து விட்டார் பொதுமேலாளர் நர்மதா தேவி. இதனால், எங்கள் முகவர்களிடமே வாங்கி விற்பனை செய்தோம். உடனே, யாரெல்லாம் எங்கள் மூன்று பேருக்கும் பால் விநியோகம் செய்கிறார்களோ அவர்களுக்கும் வழங்கப்படும் பால் பாக்கெட்டின் அளவை குறைத்துவிட்டார்.
இதனால், தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் சேலம் மாவட்ட தலைவர் எஸ்.கே பெரியசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் எங்களது குடும்பத்தினர் பெயரில் புதிதாக விண்ணப்பித்து முகவராகிக் கொள்ளச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். இதனால், 30 வருடங்களுக்கு மேலாக முகவர்களாக இருந்த எங்களது சீனியாரிட்டியும் பறிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில்தான், போராட்ட அறிவிப்பின்போது அதிகாரிகளின் ஊழல் முறைகேடுகள் குறித்து நாங்கள் தெரிவித்த தகவல்கள் நக்கீரன் (2021 பிப்ரவரி 17-19 இதழ்) உள்ளிட்ட பத்திரிகை ஊடகங்களில் வெளியானது. இதனால், இன்னும் கோபமான சேலம் ஒன்றிய பொது மேலாளர் நர்தமா தேவி தனக்கு ஆளுந் தரப்பு புள்ளிகளிடம் செல்வாக்கு இருப்பதைக் கூறி, எங்கள் குடும்பத்தின் பெயர்களில் எடுக்கப்பட்ட புதிய முகவர்களுக்கும் பிப்ரவரி-19 ந்தேதியிலிருந்து பால் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பத்திரிகை ஊடகங்களில் வெளியான முகவர் சங்க நிர்வாகிகளுக்கு விநியோகிப்படும் பால் பாக்கெட்டுகளையும் நிறுத்தி பழிதீர்த்துவிட்டது நர்மதா தேவி கூட்டணி'' என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஆவின் சேலம் ஒன்றிய பொதுமேலாளர் நர்மதா தேவி, விற்பனை துணை பொதுமேலாளர் பிரவினா, விற்பனை மேலாளர்கள் அருளாநந்தம், பார்த்த சாரதி உள்ளிட்டவர்களை தொடர்புகொண்ட போது அட்டெண்ட் செய்யவில்லை. விளக்கம் அளித்தால் பிரசுரிக்க தயாராக இருக்கிறது நக்கீரன்.
தொழிலாளர் துறையிலிருந்து மாற்றலாகி ஆவின் நிர்வாக இயக்குனர் ஆன நந்தகோபால் ஐ.ஏ.எஸ்ஸின் கவனத்துக்கு கொண்டுசெல்ல தொடர்புகொண்டோம். அட்டெண்ட் செய்யவில்லை. இதழ் வெளியான பிறகாவது, அதிகார துஷ்பிரயோகத்துடன் ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் சேலம் ஒன்றிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.