டெல்லி, உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா எனப் பரவிய கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மூச்சுத் திணறுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கண்முன்னே உறவினர்களின் உயிர்கள் பலியாவதைக் கண்ணீருடனும் கதறலுடனும் பார்த்துப் பரிதவிக் கிறார்கள் மக்கள். எந்த மாநிலத்திலோ நடக்கிறது என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. தமிழ்நாட்டின் கதவுகளையும் கொரோனா இரண்டாவது அலை தட்டித் தட்டி, தாழ்ப்பாளை உடைத்து உள்ளே நுழைந்துவிட்டது.
பக்கத்தில் உள்ள கர்நாடகத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகளையும் ஆக்சிஜனையும் தனியாருக்கு விற்பதாகவும், கள்ளச்சந்தையில் மருத்துவமனை படுக்கைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் பா.ஜ.க. எம்.பி. தேஜஸ்வி, பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா அரசின் மீதே குற்றம்சாட்டி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலமும் ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளுக்காகத் திண்டாடுகிறது. தமிழகத்தின் நிலையும் அதுதான்.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவிவருகிறது. ஒருநாள் தொற்றின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நெருங்குகிறது. இந் நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல் பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மே 5-ம் தேதி மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500 நோயாளிகள் கொரோனா நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மே 4-ம் தேதி இரவு 10:00 மணி முதல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் மூச்சுதிணறி முதலில் 4 நோயாளிகள் உயிரிழந்தனர்.
உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸுக்கு தகவல் தரப்பட்டு, விரைந்து வந்த அவர் செங்கல்பட்டை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இருந்து உடனடியாக ஆக்சிஜனை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தார். ஆக்சிஜன் டேங்கர் லாரி வரத் தாமதமானதால் மேலும் 9 நபர்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி உயிரிழக்க... பலி எண்ணிக்கை 13 ஆனது. அதேபோல் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வேண்டும் என கோரிக்கை வைத்தும் அங்கும் குறைந்த அளவிலேயே இருந்ததால் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.
இதனிடையே தீவிரமாக மூச்சுவிடுவதில் சிரமமடைந்த நோயாளிகளுக்கு தனியார் ஆம்புலன்ஸ்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்களில் உள்ள ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு உயிரைக் காக்க வேண்டிய அவசரமும் ஏற்பட்டது. உயிரை காத்துக்கொள்ள தனியார் ஆம்புலன்ஸ்களில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு வாங்கும் அவலமும் ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் தங்கள் உறவினர்களை இழந்த சொந்தங்களோ எதிர்பாராத இந்த விபத்தால் உயிர் இழந்ததைத் தாங்கமுடியாமல் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் கண்களைக் கலங்கச் செய்தன. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இறந்த நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த பலமணி நேரத்திற்குப் பிறகு அதிகாலை மூன்று மணியளவில் எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பப்பட்டது. இதன் பிறகே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிலைமை சீரானது.
இச்சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மீண்டும் மறுநாள் காலை பத்துமணியள வில் வந்து செங்கல்பட்டு மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்டார். இறந்தவர்களில் 11 பேரின் உடல் முதல் நாள் இரவிலும், 2 பேரின் உடல்கள் மறு நாளும் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. புதன்கிழமை காலை செய்தி யாளர்களைச் சந்தித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், ஆக் ஸிஜன் சம்மந்தமாக புகார் வந்ததாகவும் அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆகிய நான் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் ஆக்சிஜன் செல்லும் குழாயில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆக்ஸிஜன் சரிவர விநியோகம் செய்ய முடியாமல் 13 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
மேலும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 23 கே.எல். கொள்ளளவு கொண்ட ஐந்து டேங்கர் கள் உள்ளதாகவும் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 2.9 கே.எல். ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை நோயாளிகளின் வருகை அதிகமானதால் 4.5 கே.எல். வரை ஆக்சிஜன் செலவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 447 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
செவ்வாய் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக சிகிச்சையில் இருந்த சுமார் 13 நோயாளிகள் உயி ரிழந்ததையடுத்து, அங்கு பணிபுரிந்து வந்த 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, "செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்திருப்பதாகவும், இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்க வில்லை'' என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
போதிய மருத்துவர்களை மருத்துவமனையில் நியமிக்கக் கோரியும் மருத்துவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரியும் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சம்பவ இடத்திற்கு மாநில மருத்துவக் கல்லூரி இயக்குனர் நாராயண பாபு மற்றும் செங்கல்பட்டு கோட்டாட்சியர் சுரேஷ் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். "கோரிக்கைகள் அனைத்தும் ஒரு வாரத்தில் நிறை வேற்றப்படுவதாக' உறுதியளித்த பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
செங்கல்பட்டில் மட்டுமல்ல... மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் ஆக்சிஜன் வசதிகொண்ட பெட் கிடைக்காமல் நோயாளி கள் காரிலும், தரையில் படுக்க வைக்கப்பட்டும் காத்துக் கிடக்கின்றனர். எந்தெந்த வகையில் ஆக்சிஜன் நெருக் கடியை சமாளிக்கலாம் என மருத்துவமனை நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன. "ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம்' என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட நிலையில், அங்கு ஆக்சிஜன் உற்பத்திக்கான மின்சாரத்தை அரசு வழங்கியுள்ளது. "7 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்' என்கிறது ஸ்டெர்லைட். அதற்குள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொடுக்க வேண்டியிருக்குமோ என அஞ்சுகிறார்கள் பொதுமக்கள்.
ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு முன்பாகவே, தனது செனடாப் சாலை இல்லத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் மு.க.ஸ்டாலின். கொரானா பரவலின் வேகம் அதிகரித்திருப்பதை புள்ளிவிபரங்களுடன் உயரதிகாரிகள் சுட்டிக்காட்டியபோது, "கொரோனா பரவலின் சங்கிலிகள் துண்டிக்கப்பட வேண்டும்; கொரோனா நோயாளிகள் காப்பாற்றப்பட வேண்டும்; இதில் சமரசங்களுக்கு இடம் தந்துவிடக்கூடாது'' எனத் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.
இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளு டன், "இனி வர்த்தகக் கடைகள் மதியம் 12 மணிவரை மட்டுமே இயங்கவேண்டும்' என்பது உள்ளிட்ட மேலும் சில கட்டுப் பாடுகளை 6-ந் தேதி முதல் அமல்படுத்து வதற்கான அனுமதியை மு.க.ஸ்டாலினிடம் உயரதிகாரிகள் பெற்றனர். அதன்படி புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. "அவற்றைக் கடைப்பிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும், கொரோ னாவைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் இயக்கமாக செயல்படவேண்டும்' என்றும் ஸ்டாலினிடமிருந்து அறிக்கை வந்தது. அத்துடன், டாஸ்மாக் மதுபான விற்பனைக்கான நேரமும் குறைக்கப் பட்டது.
தமிழகத்திலுள்ள மருத்துவமனை களில் ஆக்சிஜன் அளவையும், நோயாளி களுக்கான தேவையையும் தொடர்ந்து கண்காணித்து முறையிடும் வகையில், "வார் ரூம்' அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பேற்கும் நாளி லேயே கொரோனாவுக்கு எதிரான போரை முழு வேகத்துடன் தொடங்கியுள்ளார்.
"தனியார் மருத்துவமனைகளில் ஏழை எளியவருக்கான படுக்கைகளைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும்' எனவும் ஸ்டாலின் கோரினார். நாளுக்கு நாள் வேகமெடுக்கும் கொரேனாவும் அதன் உயிர்ப்பலிகளும் புதிய அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன. தேர்தல் யுத்தத்தில் வென்ற தளபதி ஸ்டாலின், கொரோனா யுத்தத்தை அறிவியல்பூர்வமாக வென்று, மக்களின் உயிர் காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனை அவரும் உணர்ந்திருப்பதால், போர்க்கால நடவடிக்கைகள், பதவியேற்புக்கு முன்பாகவே தொடங்கியுள்ளன.