இதுவரை தோன்றிய நோய்க்கிருமிகளிலே கொடூர மானதும், தொடர்ந்து தன்னை புதுப்பித்துக்கொள்வதுமான கொரோனா, ஒவ்வொரு குடும்பத்திலும் விவரிக்கமுடியாத வேதனைகளை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.
கொரோனா பசிக்கு பெற்றோர்களை பலிகொடுத்து விட்டு அனாதைகளாக தவிக்கும் குழந்தைகளும், குழந்தை களைப் பறிகொடுத்து உருகும் பெற்றோர்களும், வாழ்க்கைத் துணையை வாரிக்கொடுத்துவிட்டு கண்ணீர்விடும் ஆண் -பெண்ணுமாக உலகெங்கும் ஆறா வடுக்கள். டெல்டா மாவட்டங்களிலும் இதே நிலைதான்.
சம்பவம் 1
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் கனகராஜன். கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். மனைவி மீனா, மகன் மனோஜ்குமார். மூவரும் ஒருவரை விட்டு ஒருவர் ஒருநாளும் பிரிந்து இருந்ததில்லை. எதிர்பாராத கொரோனா தொற்றால் மீனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட, அவரது உடலை கிருஷ்ணகிரியிலேயே எரித்துவிட்டு, கைப்பிடி அஸ்தியோடு கனகராஜனும் அவரது மகன் மனோஜ்குமாரும் நடைப்பிணமாக சொந்த ஊரான திருவோணம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்து, அஸ்தியை கரைத்துவிட்டு செய்ய வேண்டிய காரியத்தை செய்து முடித்தனர். ஆனாலும் மூவரில் ஒருவர் இல்லாத துயரம் இருவரையும் வாட்டியது, அம்மா இல்லாத இடத்தில் வாழப்பிடிக்கவில்லை என மகனும், மனைவி இல்லாத வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை என கணவரும் அவசர அவசரமாக முடிவெடுத்து விஷம் குடித்து மொத்த குடும்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள, ஊரே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.
சம்பவம் 2
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கிராமம் எரவாஞ்சேரி. விவசாயக் கூலி வேலை பார்க்கும் பவானிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. மூன்று குழந்தைகளையும், மனைவி யையும் தவிக்க விட்டுவிட்டு பவானியின் கணவர் அமிர்தலிங் கம் வேறொரு பெண்ணோடு ஓடிவிட, தனி ஒரு பெண்ணாக விடாப்பிடியாக நின்று மூன்று பிள்ளைகளையும் படிக்கவைத்து இரண்டு பெண் குழந்தைகளை நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்தார். கையோடு மகன் பாலச்சந்திரனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தார். மகனும் வெளிநாட்டில் சம்பாதித்து அம்மாவிற்கு பணத்தை அனுப்பி வீடுகட்டச் சொல்லியிருக்கிறார். தாய் பவானியோ, வீடு கட்டிய கையோடு, மகனுக்கு திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
காரைக்காலை அடுத்துள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை நிச்சயம் செய்து எளிமையான முறையில் திருமணம் நடந்தது. தாய் பவானி தன் கடமை முடிந்தது என ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஆனால் அந்த சந்தோஷம் ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. திருமணம் முடிந்து மதியத்துக்கு மேல் பாலச்சந்திரனுக்கு ஜுரம், இருமல். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறி, உடனே திருவாரூர் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிவிட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். முதல்நாள் மாப்பிள்ளையாக இருந்தவன் மறுநாள் பொட்டலமாகக் கட்டி வந்ததை தாங்க மாட்டாமல் அவனது தாய் பவானியும் இறந்தார். பாலச் சந்திரனை திருமணம் செய்துகொண்டு ஒரு நொடிப்பொழுது கூட வாழாமல் அனாதையான அந்த மணப்பெண்ணும் தற்கொலை செய்துகொள்ள முயல, காப்பாற்றி ஆறுதல் கூறி பாதுகாப்போடு தாய் வீட்டில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் 3
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கரைமேடு தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி. திருவெண்காடு ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். கொரோனா வைரஸ் தொற்று அவரை பலி வாங்கியது. சுந்தரமூர்த்தி இறந்த மூன்றாவது நாளே அவரது மனைவி கார்த்திகாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட, 13 வயதுடைய பிரியங்காவும் பத்து வயதுடைய நந்த குமாரும் அனாதைகளாக நிற்கின்றனர்.
கொரோனாவால் இறந்தவர்களை உறவினர்களே காணமுடியாத ஊரடங்குச் சூழலில் எந்தவித சுயநலமும் இன்றி அடக் கம் செய்து வரும் த.மு.மு.க. மாவட்ட நிர்வாகிகளுள் ஒருவரான மயிலாடுதுறை முகமது பாசித்திடம் விசாரித்தோம், "இப்படி ஒரு கொடூர நோயை எங்க வயசுல கண்டதில்ல, ஒவ்வொரு உடலையும் அடக்கம் செய்யும்போது எங்களது மனம் ரணமாகிவிடும். ஒரு உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா என கலங்கிவிடுவோம். ஆனாலும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் எங்கள் கடமையைச் செய்கிறோம்.
மிக மிக இக்கட்டான சூழலில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனோவின் கொடூ ரத்தை உணர்ந்து, மக்களுக்குத் தேவை யானதைச் செய்துகொடுத்து நோய்த் தொற்றில் இருந்து காத்து வருகின்றார். தாய் -தந்தையை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரணம் உள்ளிட்ட பல அதிரடி உதவிகளை அறிவித்திருப்பது மனம்நெகிழச் செய்கிறது. இருந்தாலும், கொரோனாவால் இறந்தவர்களே தமிழகத்தில் இல்லை என்ற நிலை வரும் நாளே நன்னாள்''’என்றார் ஏக்கமாக.