"அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு நன்மைகள் செய்வேன்'' என ரஜினி அறிவித்த பிறகும், அவரது ரசிகர்களிடம் இன்னமும் ஆன்மிக அரசியல் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடவில்லை என்பதையே காட்டியது, ஜனவரி 10-ந் தேதி யன்று வள்ளுவர் கோட்டத்தில் ‘" வா... தலைவா... வா! உங்கள் ஆட்சி வேண்டும்!'’ என அவரது ரசிகர்கள் பல மாவட்டங்களிலிருந்தும் திரண்டு வந்து நடத்திய வேண்டுகோள் போராட்டம்.
ரஜினி மக்கள் மன்றத் தலைமையிலிருந்து இதனைத் தவிர்க்கச் சொன்னபோதும், போலீஸ் அனுமதியைப் போராடிப் பெற்ற ரசிகர்கள், "இது போராட்டமல்ல, கூட்டுப் பிரார்த்தனை' என்றனர். சென்னையில் நடந்த போராட்டத்தின் தாக்கத்தை கன்னியாகுமரி வரை உணர முடிந்தது.
குமரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற சிறுபான்மை பிரிவுச் செயலாளர் சதீஷ்பாபு, ""தலைவரின் உடல்நிலைதான் முக்கியம். அவரது உடல்நிலை சீராக வேண்டிதான் கடவுளிடம் வேண்டி மொட்டை போட்டிருக்கேன். அவர் கட்சி ஆரம்பிக்கலைன்னு அறிவிப்பு வெளியிட்டதும் மன்ற நிர்வாகிகளை பல கட்சிகளிலிருந்தும் அழைக்கிறார்கள். நாங்க யாரும் போகமாட்டோம். மக்கள் மன்றமே அரசியல் கட்சி போன்ற கட்டமைப்புடன்தான் உள்ளது.
இந்த மாவட்டத்தில் மட்டுமே மொத்த முள்ள 1694 பூத்துகளில் பூத்துக்கு 30 பேர் கொண்டு 800 பூத்துக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் தமிழகம் முமுவதும் கணக்கெடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் இப்போதும் நம்பிக்கையோடுதான் இருக்கிறோம்'' என்றார்.
ரஜினி மக்கள் மன்ற ஆரல்வாய் மொழி பேரூராட்சி மகளிரணி நிர்வாகி கவிதா, ""மருத்துவர்கள் அறிவுரைப் படி சில நாட்கள் ஓய்வில்தான் தலைவர் இருக்கிறார். கண்டிப்பாக 100 சதவிதம் கட்சி தொடங்குவார்'' என்றார் நம்பிக்கையுடன்..
மக்கள் மன்ற ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரஜினி அசோக் கூறும்போது, ""ரஜினி ரசிகர்மன்றமாக இருக்கும் போது தலைமையால் அங்கீகரிக்கபட்டவர்கள் மாவட்டத் தலைவரும் செயலாளரும்தான். மக்கள் மன்றமான பிறகு பேரூராட்சி செயலாளர்களில் இருந்து மா.செ.க்கள் வரை தலைமையால் அறிவிக்கப்படுகிறார்கள். இதுவே ஒரு கட்சிக்குரிய அமைப்புதான். தலைவரின் அறிக்கை என்பது கமாதான், முற்றுப்புள்ளி அல்ல'' என்கிறார் உறுதியாக.
அரசியல் ஆர்வத்துடன் ரஜினியை எதிர்பார்த்து கட்டமைப்புகளை உருவாக்கிட செலவழித்த பலரும் அவரது அரசியல் வருகையை எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே "ரசிகர்களின் உணர்வை மதிப்பதாகவும், அதே நேரத்தில் அரசியல் முடிவு குறித்து ஏற்கனவே விளக்கமாகத் தெரிவித்துவிட்டதால், இத்தகைய நிகழ்வுகளை நடத்தி வேதனையை ஏற்படுத்த வேண்டாம்' என ரஜினி அறிக்கை வெளியிட்டார்.
-மணிகண்டன்