கர்நாடக முதல்வராக பி.எஸ். எடியூரப்பா தொடர்வாரா அல்லது புதிய முதல்வர் குறித்து பா.ஜ.க. தலைமையிலிருந்து அறிவிப்பு வருமா என்ற குழப்பம் சில நாட்களாக நீடித்துவந்தது. தற்போது எடியூரப்பாவின் ராஜினாமாவையடுத்து முதல்வர் பதவி கனவுடன் இருந்த ஆறு பேரில் பசவராஜ் பொம்மை அடுத்த முதல்வராக பதவியேற்றார்.
2018 சட்டமன்றத் தேர்தல் யாருக்கும் பெரும்பான்மையில்லாமல் முடிய, பெருவாரியான இடங்களை வென்ற தோரணையிலும், கைக்கு அடக்கமான ஆளுநர் இருந்த நம்பிக்கையிலும் பா.ஜ.க. ஆட்சியமைக்க முயன்றது. பி.எஸ். எடியூரப்பாவை முதல்வராக அறிவித்துவிட்டு, பெரும்பான்மையை நிரூபிக்க மூன்று நாள் அவகாசம் அளித்து, அதற்குள் ஆட்சியமைக்கத் தேவையானவர்களை வளைத்துவிடலாமென பா.ஜ.க. நம்பியது.
ஆனால் பா.ஜ.க. 104, காங்கிரஸ் 80, ஜனதா தளம் (எஸ்) 37 என்ற கணக்கில் இடங்களை வென்றநிலையில், தனக்கு முதல்வர் சீட்டு போனால்கூட பரவாயில்லை பா.ஜ. க.வின் கைக்கு ஆட்சி போய்விடக்கூடாது என்ற கணக்கில் குமாரசாமி யுடன் கூட்டணி ஆட்சிக் கான உடன்படிக்கையைப் பேசியிருந்தது காங்கிரஸ். அதனால் பா.ஜ.க.வால் ஜனதா தளத்தின் ஆத ரவைப் பெறமுடியாமல் போனது.
எனவே பி.எஸ். எடியூரப்பா பெரும் பான்மையை நிரூபிக் காமலே பதவி விலகினார். அதிக இடங்களை வென்றும் ஆட்சியமைக்க முடியாமல் போன பா.ஜ.க. தக்க தருணத் துக்காக காத்திருந்தது. இரண்டாவது இடம் வந்தும் முதல்வர் பதவியை ஜனதா தளத்துக்கு தாரைவார்த்திருந்த எரிச்சல் காங்கிரசுக் குள்ளும் இருக்கவே செய்தது.
ஒரு பக்கம் காங்கிரஸ், ஜனதா தளம் உரசல், மறுபக்கம் பா.ஜ.க.வின் நெருக்கடி யால் எதிர்பார்த்தபடியே 14 மாதங்களில் குமார சாமியின் ஆட்சி கவிழ்ந் தது.
இதையடுத்து பி.எஸ். எடியூரப்பாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்து ஆட்சியமைத்தது பா.ஜ.க. ஆனால் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள், உட்கட்சி மோதல்கள் இவற்றுக்கிடையில் கடந்த இரண்டு வருடங் களாகவே பி.எஸ். எடியூரப்பாவின் தலைமையின் மீதான புகார்கள் அதிகரித்தபடியே சென்றது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தவிர, எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. பா.ஜ.க. கொள்கைப்படி 75 வயதுக்கு மேற்பட்டவர் நிர்வாகப் பதவியில் நீடிக்கக்கூடாது.
தவிரவும் கட்சித் தலைமைக்கு வந்த கையெழுத்திடப்படாத கடிதம் ஒன்று, கட்சியிலுள்ளவர்கள் சொல்லும் விஷயங்களைக் கேட்டுக்கொள்வதிலும் புரிந்துகொள்வதிலும் எடியூரப்பாவுக்கு சிரமம் இருக்கிறது. எளிய விஷயங்களைக்கூட அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை என அவரது வயதையும் செயல்திறனையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. கொரோனா கால சுகாதார நிர்வாகமும் முதல்வருக்கு பெருமை யளிப்பதாக அமையவில்லை.
கர்நாடக -மகாராஷ்டிர எல்லைப் பகுதி வெள்ளப் பாதிப்பு களைப் பார்வையிடச் சென்ற எடியூரப்பா, “"கட்சித் தலைமை என்னை விலகும்படிச் சொன்னால் நான் பதவி விலகுவேன், தொடரச் சொன்னால் நீடிப்பேன்'' என்றார். வெளிப்படையாக இப்படிக் கூறினாலும், எடியூரப்பாவுக்கு பதவி விலகுவதில் விருப்பமில்லை. குறைந்தபட்சம் மிச்சமிருக்கும் இரண்டாண்டு காலத்தை ஓட்டிவிட்டு அரசியலில் இருந்து விலக விரும்பினார். ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லையெனில் தனது மகனான பி.ஒய்.விஜயேந்திராவுக்கு முதல்வர் பதவி அல்லது கட்சியில் மாநில அளவிலான பதவி பெற்றுவிட்டுத்தான் விலகுவது என நினைத்தார்.
எடியூரப்பாவுக்கு பதில் யார் என கட்சியில் ஆலோசனைகள் நடந்தன. யூகங்களும் பரவின. பி.எல். சந்தோஷ், அஸ்வத் நாராயணன், சி.டி. ரவி, முருகேஷ் நிரானி, பசவராஜ் பொம்மை என 5 பெயர்கள் அடிபட்டன. அதே நேரத்தில், எடியூரப்பாவின் ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. எடியூரப்பாவே முதல்வராகத் தொடரவேண்டும் என அறிக்கை விடுத்தார் முன்னாள் முதல்வர் குமாரசாமி. கர்நாடகத்தின் பெரும்பான்மை சமூகத்தவரான லிங்காயத்து களின் மடங்களைச் சேர்ந்த அதிபதிகள் பெங்களூரு அரண்மனை வளாகத்தில் திரண்டு, “"எடியூரப்பா ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது. அவரை மாற்றும் முடிவை பா.ஜ.க. கைவிடவேண்டும்''” என குரல் கொடுத்தனர்.
லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரான எடியூரப்பாவை வேறு காரணங்கள் கொண்டு பதவி விலகச் செய்தாலும், சாதி சர்ச்சையால் நெருக்கடி உண்டாகும் என்பதால் அதனை சமாளிக்க ஆலோசித்தது பா.ஜ.க தலைமை. நெருக்கடிகளுக்கிடையில் எடியூரப்பாவை லாவகமாக அகற்ற முன்வந்தது பா.ஜ.க. தலைமை.
கர்நாடக ஆளுநரான தாவர்சந்த் கெலாட், மத்தியப் பிரதேசத்திலிருந்து அவசர அவசரமாக ஜூன் 25-ஆம் தேதி கர்நாடகம் திரும்பினார். இனியும் அடம்பிடிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனக் கருதிய எடியூரப்பா, ஜூன் 26-ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதுவரை எடியூரப்பா ஒரு முறைகூட தனது முதல்வர் பதவியில் 5 ஆண்டு களை முழுமையாக நிறைவு செய்ததில்லை. அதை தனது ராஜினாமா நேரப் பேச்சில் வழிந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினார்.
புதிய முதல்வராக பசவராஜ் பொம்மையை அறிவித்தது பா.ஜ.க மேலிடம். இவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.ஆர். பொம்மையின் மகன். எடியூரப்பா போலவே லிங்காயத்து சமூகத்தைச் சார்ந்தவர். மற்ற மாநிலங்களில் மதத்தை நம்பி அரசியல் செய்து ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வுக்கு, கர்நாடகத்தில் சாதி அரசியல்தான் ஆட்சிக்காலத்தை நீட்டிக்கச் செய்கிறது.