உயிர்த்தெழுவார் என்று கூறி பிணத்தை 28 நாட்கள் வீட்டில் வைத்து பிரார்த்தனை செய்த பாதிரியாரின் மூடநம்பிக்கை தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.
திண்டுக்கல் அருகேயுள்ள நந்தவனப்பட்டி டிரஸரி காலனியில் வாடகை வீடு பிடித்து குடியிருந்து வந்த பெண் காவலர் அன்னை இந்திரா. திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 12 வயதான ரட்சன் என்ற மகனும் எட்டு வயதில் மெர்சி என்ற மகளும் உள்ளனர்.
கணவர் பால்ராஜுக்கும் அன்னை இந்திராவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேனியிலிருந்து திண்டுக்கல் வந்த இந்திரா கடந்த ஒரு வருடமாக தனது குழந்தைகளோடு வசித்து வருகிறார். அதோடு தனது சகோதரி வாசுகியும் உடனிருந்து வந்தார். சிறுநீரகத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த காவலர் இந்திரா காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அதுகுறித்து எந்தவித தகவலையும் தனது மேலதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்காமல் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில்தான் மருத்துவ விடுப்பிலிருந்த இந்திரா மீண்டும் பணிக்கு திரும்பாததால் கடந்த 28-ஆம் தேதி இரண்டு பெண் காவலர்கள் இந்திரா வீட் டுக்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த வாசுகியும் பாதிரியார் சுதர்சனமும் இந்திராவைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த 31-ஆம் தேதி மீண்டும் பெண் போலீசார் சென்றபோதும் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் இன்ஸ்பெக்டர் அமுதாவுக்கும். டி.எஸ்.பி. வினோத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
அதனடிப்படையில் ஸ்பாட்டுக்கு வந்த அதிகாரிகள் வீட்டை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோது ஒரு அறையில் இந்திராவின் உடல் துணியால் சுற்றப்பட்டு கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். வாசுகியிடமும். பாதிரியார் சுதர்சனிடமும் விளக்கம் கேட்டும் அவர்கள் சரிவர பதில் சொல்லவில்லை. அவர்களை வெளியே அனுப்பி வைத்து விட்டு குழந்தைகளிடம் விசாரித்ததில் ""தனது தாய் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாலையில் எழுந்துவிடுவார்... அவர் தூக்கத்தை யாரும் கெடுக்காதீர்கள்'' என சர்வசாதாரணமாக பதிலளித்ததுடன் ""தாயை தொந்தரவு செய்பவர்களுக்கு இயேசு தண்டனை கொடுப்பார்'' எனவும் கூறினர்.
ஆனால் இந்திராவின் உடலில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் துர்நாற்றம் வீசவே உடனே டாக்டர்களை வரச் சொல்லி இந்திராவின் உடலை பரிசோதனை செய்தபோது பல நாட்களுக்கு முன்பே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி னார்கள். அதனடிப்படையில் இந்திராவின் உடலை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பாதிரியார் சுதர்சனையும் வாசுகியையும் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
""மகளிர் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறேன் என்று சொன்னதால்தான் இந்திராவுக்கு வீடு கொடுத்தேன். யாரிடமும் அதிகம் பேசமாட்டாங்க. ஏற்கனவே அவங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்று சொல்லுவாங்க. அந்தப் பாதிரியார் சுதர்சன் பெரும்பாலான நாட்கள் இங்கே வந்து ஜெபம் பண்ணிவிட்டுப் போவார். வெளியிலிருந்து பாதர் வந்துபோவது பிடிக்காத தால் வீட்டை காலி பண்ணச் சொல்லிவந்தேன்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இந்திராவைப் பார்க்க முடியவில்லை. மூன்றாவது மாடியிலுள்ள வீட்டு ஜன்னல்களை எல்லாம் அடைத்து ஊதுவத்தி பொருத்திவைத்து வாடை தெரியாமல் வைத் திருக்கிறார்கள்'' என்றார் வீட்டு உரிமையாளர் ஜெயபால்
ரூரல் டி.எஸ்.பி. வினோத்தோ, “""அந்த மேடம் (இந்திரா) இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவருடைய கணவர் பால்ராஜ் கிறிஸ்துவர். இருவரும் விரும்பித் திருமணம் செய்துகொண்டனர். இதற்கிடையில் அந்த பாதிரியார் சுதர்சனை ஒருமுறை பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அதிலிருந்து அந்த பாதிரியாருடன் இந்த மேடம் ரொம்ப நெருக்கமாக இருந்திருக்கிறார். இதனால் கணவனும் மனைவியும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
அவர் இறந்த விஷயமே தற்செயலாகத்தான் எனக்குத் தெரியும். ஏற்கனவே அந்த மேடம் உடல்நலம் சரியில்லாதவங்க. அப்படி இருக்கும்போது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் அல்லது இறந்த விஷயத்தை உயரதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கலாம். அதையெல்லாம் மூடி மறைத்து கடந்த 7-ஆம் தேதி இறந்த அந்த மேடத்தின் உடலை வீட்டிலேயே வைத்து மீண்டும் உயிர்த்தெழுவார் என்று கூறி தினசரி ஜெபம் செய்திருக்கிறார் பாதிரியார் சுதர்சன். அதற்கு வாசுகியும் துணைபோயிருக்கிறார். அதனால்தான் இருவரையும் கைது செய்திருக்கிறோம்
பாலியல்ரீதியான புகார்களும், மதமாற்றக் குற்றச்சாட்டுகளும் வருவதால் விசாரணை செய்து வருகிறோம் இறந்து 20 நாட்களுக்கு மேலாகி உடல் அழுகிவிட்டதால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் எப்படி இறந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றார்.
-சக்தி