றநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கொரோனாவால் தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் சிதம்பரம் கோயில் ஆருத்ரா தேர்த்தரிசன திருவிழா நடத்தியே ஆகவேண்டும் என்று தீட்சிதர்கள் குழு சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியனுடன் முதல்வர் மற்றும் தலைமைச் செயலரை சந்தித்து அனுமதி கோரி தேர்த் திருவிழாவை நடத்திக்காட்டினாலும் விழாவில் சர்ச்சைகளுக்கு குறைவில்லை.

chidambaram

கடலூர் மாவட்ட நிர்வாகம் நடராஜர் தேரிழுக்க 1000 பேர், சிவகாமியம்மன் தேருக்கு 800 பேரும் மற்ற தேர்களுக்கு 200 பேரும் என தரிசனத்திற்கு குறைந்த அளவு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர், ஆனால் வெளியூர் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றது. இதனை எதிர்த்து சிவபக்தர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார் அதனடிப்படையில் உயர்நீதிமன்றம் வெளியூர் மக்களையும் அனுமதிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றது.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் தேர், தரிசன விழாவில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என 2 இணையதள முகவரிகளை 28-ஆம் தேதி மாலை 3 மணிக்கு அறிவித்தது. இதற்கெதிராக தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் கீழவீதியில் கூடி மாலை 6 மணிக்கு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ், சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன், எம்.எல்.ஏ. பாண்டியன் ஆகியோர் தீட்சிதர்களிடம் இது நீதிமன்ற நடவடிக்கையின் அடிப்படையில் போடப் பட்டுள்ளது. இது ஒரு பார்மாலிட்டிதான் என விளக்கினர். தீட்சிதர்களோ கோயிலில் இ பாஸ் இல்லை என எழுத்து மூலம் கொடுக்கவேண்டும் என்று விடாப்பிடியாக 29-ஆம் தேதி அதிகாலை 2.30 மணி வரை மறியல் செய்தனர்.

Advertisment

அடுத்தநாள் தேர் ஓடுமா? ஓடாதா? என்ற குழப்பத்தில் மக்களின் கூட்டம் கோவிலில் குவிந்தது. இந்த நிலையில் தலைமைச் செய லாளர் சண்முகத்திடமிருந்து, எப்போதும்போல் திருவிழாவை நடத்திகொள்ளலாம் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள் என்று தீட்சிதர்களுக்கு தகவல் வந்தபின்பே தேர்த் திருவிழா நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, தேரிலிருந்து சாமி கோவிலுக்கு வரும்போது கீழசன்னதியில் குடியிருக்கும் பக்தர் பாலசுப்பிரமணியம் என்பவர் சாமிக்கு பூ தூவி தீபாராதனை காட்டியுள்ளார். தீட்சிதர்கள் அவரை நெட்டித் தள்ளி தட்டைப் பிடுங்கி தூக்கியெறிந்ததுடன், உதவிக்கு வந்த போலீஸையும் தள்ளிவிட்டுத் தாக்கியுள்ளனர். அவர் சிதம்பரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தீட்சிதர்கள் முத்து, ஸ்ரீ வர்ஷன், சோமு உள்ளிட்ட சில தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

cc

Advertisment

இதுகுறித்து பாலசுப்பிரமணியன் கூறுகை யில், ""நாங்கள் பரம்பரை பரம்பரையாக சாமி வரும்போது தீபாராதனை காட்டுவது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசுக் கட்டுபாட்டில் எடுத்து நிர்வகித்தது. அப்போது கருவறையில் தேவாரம், திருவாசகம் பாட தமிழகத்திலுள்ள சிவனடியார்களை அழைத்துவந்து கருவறை முன்பு நிற்கவைத்து தேவாரம், திருவாசகம் பாட அனைத்து ஏற்பாடுகளையும் நான் செய்தேன். இதனால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் அன்றைய தினத்திலிருந்து என்மீது பகையுடன் நடந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு தேர் மற்றும் தரிசன விழாவிலும் இதுபோன்று தாக்குதல் சம்பவம் நடைபெறுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தால் சமாதானம், சி.எஸ்.ஆர். காபியுடன் முடிந்துவிடும். தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களை கைது செய்யவேண்டும்'' என்றார்.

பெயர் கூறவிரும்பாத காவல் துறையைச் சேர்ந்த ஒருவரோ, ""எம்.எல்.ஏ., நீதிபதி, காவல்துறை உயரதிகாரிகள்வரை சிதம்பரம் கோவிலுக்கு வருகை தருகையில் தீட்சிதர்களின் அணுக்கத்தை எதிர் பார்ப்பவர்களாக உள்ளனர். அந்த தைரியத்தில்தான் போலீஸ் உயரதி காரிகளையும்கூட தீட்சிதர்கள் முரட்டுத்தனமாகப் பிடித்துத் தள்ளுகின்றனர். சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை இவர்கள்மேல் எடுக்கப் படும்வரை தீட்சிதர்களின் செயல்பாடுகள் மாறாது'' என்றார்.

-காளிதாஸ்