சமீபத்தில் ரயில்வே துறையில், மக்களுக்கு முன்அறிவிப்பு தராமல் கட்டண உயர்வு நடந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நிறுத்தப்பட்ட 35 ரயில்களை ஜூலை மாதத்தில் இயக்கப் போவதாக அட்டவணையை வெளியிட்டுள்ளது தென்னக ரயில்வே. அந்த ரயில்கள் அனைத்தும் தமிழகத்திற்குள் ஓடுபவை. குறிப்பாக, அரக்கோணம் டூ வேலூர், அரக்கோணம் டூ ஜோலார்பேட்டை, விழுப்புரம் டூ காட்பாடி, விழுப்புரம் டூ திருப்பதி, சென்னை பீச் டூ மேல்மருவத்தூர், வேலூர் டூ சென்னை பீச் ஸ்டேஷன், ராமேஸ்வரம் டூ மதுரை, மேல்மருவத்தூர் டூ விழுப்புரம் என ஓடிய பாசஞ்சர் ரயில்கள், இனி எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், அன் ரிசர்வ்டு எக்ஸ்பிரஸ், எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் என்கிற பெயர்களில் அதிகக் கட்டணத்தில் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவரான நைனா மாசிலாமணியிடம் கேட்டபோது, "இப்படி பாசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸாக மாற்றம் செய்வதால், ஜோலார் பேட்டை டூ சென்னை மார்க்கத்தில் விவசாயிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவ- மாணவிகள், ஏழை மக்கள் என, சுமார் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். பாசஞ்சர் ரயில்களில் அரக்கோணம் டூ காட்பாடி, அரக்கோணம் டூ சென்னைக்கு 20 ரூபாய் மட்டுமே கட்டணம். இப்போது பெயர் மாற்றம் செய்துள்ள ரயில்களில் கட்டணம் 45 ரூபாய். எக்ஸ்பிரஸ் வண்டிகள் சில குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் மட்டும்தான் நிற்கும். பெயர் மாற்றப்பட்டுள்ள இந்த பாசஞ்சர் வண்டிகள் அனைத்து ஸ்டேஷன்களிலும் நிற்கின்றன, பிறகு எப்படி எக்ஸ்பிரஸ் கணக்கில் வரும்? கடந்த 2020-ஆம் ஆண்டு நாடு முழுவதும் 450 பாசஞ்சர் ரயில்களை நிறுத்தினார்கள். அந்த ரயில் களைத்தான் பெயர் மாற்றம் செய்து, பயணிகளிடம் எக்ஸ்பிரஸ் வண்டிக்கான கட்டணத்தை வசூலிக்கிறார்கள். பாசஞ்சர் ரயில்களில் கட்டணத்தை உயர்த்தினால் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்பதால் பெயரை மட்டும் மாற்றியுள்ளார்கள்.
"ரயில்வே சட்டப்படி பாசஞ்சர் ரயில்களுக்கு எக்ஸ்பிரஸ் வண்டிக்கான கட்டணம் வசூலிக்க முடியாதே?' என நாங்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது, "பாசஞ்சர் ரயில் பெட்டி வேறு, இப்போது அறிவிக்கப் பட்டுள்ளது மெமு பெட்டி ரயில் வண்டிகள்' என்கிறார்கள். இவர்களின் வசதிக்காக ரயில் பெட்டியை வடிவமைத்துவிட்டு பயணிகள் மீது கட்டணத்தை ஏற்றுவது எந்த விதத்தில் சரியானது? நார்மல் பெட்டிகளில் பயணிகளுக்கு தாராளமான இட வசதியிருக்கும். இந்த மெமு கூண்டு வடிவிலான பெட்டிகளில் இட நெருக்கடி உள்ளது, நார்மல் பெட்டிகளில் ஒரு கோச்சுக்கு ஒரு பாத்ரூம் வசதியிருக்கும், இந்த மெமு வண்டிகளில் மொத்தமே ஒன்று அல்லது இரண்டு பாத்ரூம் கள்தான் உள்ளன, அந்த பாத்ரூம்களையும் சுத்தம் செய்வதில்லை. பயணிகளுக்கு எந்த வசதியும் செய்து தராமல் ரயில் பெயரை மட்டும் மாற்றி விட்டு பொதுமக்களிடம் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை ஏற்றி வசூலிப்பதுபோல் ரயில் கட்ட ணத்தை உயர்த்தி மோசடி செய்வது சரியா? என நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவேண்டும். தனியாருக்கு ரயிலை விடலாமே என நினைக்க வைக்கும் யுக்திதான் இது. தனியார் மயம் முதலில் அழகாகத் தெரியும், போகப்போக அதன் லாபத்துக்காக மக்களைச் சுரண்டும்'' என்றார்.
போளூர் ரயில் பயணிகள் சங்க நிர்வாகி கே.வி.ராஜ்குமாரிடம் பேசியபோது, "மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, விழுப்புரம் டூ காட்பாடி இடையிலான மீட்டர்கேஜ் பாதையை பிராட்கேஜ் பாதையாக மாற்றவேண்டும் எனக் கோரிக்கைக் கடிதம் அனுப்பினோம். அமைச்சராக முதல் இரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த மம்தா, எங்கள் கோரிக்கைக்காக உடனே நிதி ஒதுக்கீடு செய்தார். அந்தளவுக்கு மக்கள் கோரிக்கைக்கு மரியாதை தந்தார். தற் போது பா.ஜ.க. ஆட்சி யில், அகலப்பாதையாகப் பயன்பாட்டிலுள்ள இந்த ரூட்டில், சென்னை பீச் டூ வேலூர் கண்டோன்மெண்ட், சென்னை டூ விழுப்புரம் வரை வந்து செல்லும் பயணிகள் ரயில்களை திருவண்ணாமலை வரை நீட்டிக்கச் சொல்லி பலமுறை மனு தரப்பட்டுள்ளது. அப்படி நீட்டித்தால், திருவண்ணாமலை நகரத்துக்கு வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவே யில்லை. இப்போது பாசஞ்சர் ரயில்களின் பெயர்களை மாற்றி ரயில் கட்டணத்தை உயர்த்தி மக்களிடம் கொள்ளையடிக்கிறது'' என்றார்.
இதுபற்றி இரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்த வர்களிடம் விசாரித்தபோது, "2019-ல் மெமு ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போதே நாடு முழுவதும் 300 பாசஞ்ஜர் ரயில்களில் 1200 பெட்டிகள் மெமு பெட்டிகளாக மாற்றப்பட்டன. அடுத்த 5 ஆண்டுகளில் 6 ஆயிரம் மெமு பெட்டி கள் இணைப்பது என முடிவானது, அதன்படிதான் இப்போது டி.இ.எம்.யூ, டி.எம்.யூ, இ.எம்.யூ ரயில் இன்ஜின்கள், பெட்டிகள் மாற்றம் செய்யப்படுகின் றன. அந்தந்த ரயில்களுக்குத் தகுந்தாற்போல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன'' என்றார்கள்.
லாபத்தில் இயங்கும் ரயில்வே துறையில், பெயரை மாற்றிக் கட்டணத்தை உயர்த்துவது எப்படி சரியாகும்?
-கிங்