நெல்லையில் நடந்த பா.ஜ.க. பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தலைவர்களின் "தில்'லான பேச்சு அ.தி.மு.க.வை உறும வைத்திருக்கிறது.
ஜனவரி 22-ல் நெல்லை வண்ணாரப் பேட்டையில் பா.ஜ.க.வின் தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் ஆய்வுக் கூட்டம். அக்கூட்டத்தில் சட்டமன்ற தொகுதிப் பொறுப்பாளர்களான சக்தி கேந்திர நிர்வாகிகளை நியமனம் செய்வதற்காக பா.ஜ.க.வின் மாநில பார்வையாளரான சி.டி.ரவி, மாநிலத் தலைவர் முருகன், தென் மண்டலத் தலைவரான நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கூடியிருந்தனர்.
தேர்தல் கூட்டணியும், தொகுதிப் பங்கீட்டு முறைகளும், அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளிடையே உடன்பாடுகள் எட்டப்படாத நிலையில் தொகுதி பற்றியதைத் திட்டவட்டமாகப் பேசினர்.
மாநில தேர்தல் பார்வையாளரின் முன்னிலையிலேயே புள்ளிவைத்துப் பேசிய மாநிலத் தலைவரான முருகன், ""நாம் போகவேண்டிய தூரம் ரொம்பவும் அதிகமிருக்கிறது. ஆனால் நமக்கான இலக்கை அடைவதற்கான நேரமோ மிகமிகக் குறைவாக உள்ளது. குறிப்பாக இந்த நெல்லை சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. அசுர வளர்ச்சியில் செல்கிறது. நெல்லை சட்டசபையில் பா.ஜ.க. வெற்றிபெற சக்தி கேந்திர நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்'' என நெல்லைக்கான பா.ஜ.க.வின் வேட்பாளர் நயினார் நாகேந்திரனை மனதில் கொண்டே சீரியஸாகப் பேசியிருக்கிறார் தலைவர் எல்.முருகன்.
இதனால் சிலாகித்துப்போன தென் மண்டலப் பொறுப்பாளரான நயினார் நாகேந்திரன், நெல்லை தொகுதி தனக்காக ஒதுக்கப் பட்டுள்ளதை மறைமுகமாகத் தன் பேச்சில் கொண்டு வந்தவர், ""தமிழகத்தில் பா.ஜ.க. அதிக தொகுதிகளைக் கைப்பற்றும். அதில் வாக்குகள் வித்தியாசத்தில் நெல்லை தொகுதி முதன்மையாக இருக்கவேண்டும், இருக்கும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெறுவோம். பா.ஜ.க.வின் வெற்றிக்கு கேந்திர நிர்வாகிகள் விருப்பு வெறுப்பின்றி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்று தன் பேச்சில் அழுத்தம் கொடுத்தார்.
மாநில பார்வையாளர் மற்றும் மாநிலத் தலைவர்களே "நெல்லைத் தொகுதி தங்களுக்கானது என பட்டா நிர்ணய மானது' என்ற கெத்தில் பேசியது, நெல்லை அ.தி.மு.க.வினரை உள்ளுக்குள் கொந்தளிக்க வைத்திருக்கிறது. அடுத்தநொடி அ.தி.மு.க.வின் தலைமைக்குத் தகவல்கள் பறந்தன. "எந்தக் காரணம் கொண்டும் நெல்லையை பா.ஜ.க.விற்குத் தாரைவார்த்து விடாதீர்கள்' என்ற கோரிக் கைகள் பலப் படுத்தப்பட்டன.
அ.தி.மு.க. தரப்பிலோ நெல்லையின் பல சீனியர் கட்சிப் புள்ளிகள் தொகுதியைக் குறி வைத்து மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நேரத்தில், பா.ஜ.க.வினரின் நெத்தியடிப் பேச்சுக்களையும், அறிவிப்பையும் பெரியண்ணன் அதிகாரமாகவே பார்ப்பதோடு தங்களுக்கான உரிமையின் மீதான சவால் என்று புரிதலை ஏற்படுத்தியிருப்பதால், ஒட்டு மொத்த ர.ர.க்களும் இந்த விஷயத்தில் ஏகோபித்திருக்கின்றனர் என்பதை அறிய முடிந்தது.
அ.தி.மு.க.வினரின் உஷ்ணம் ஒரு பக்கம் ஏறிக்கொண்டிருந்த நிலையில்... நயினார் நாகேந்திரனைத் தொடர்புகொண்டதில், ""கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு தொகுதிக்கும் சட்டமன்ற சக்திகேந்திர பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள். அதே போன்றுதான் நெல்லைத் தொகுதிக்கும் பொறுப்பாளர் நியமிக்கப்படுகின்றனர். எங்களின் நோக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்பதே'' என்றார் ஷார்ப்பாக.
நெல்லை மாவட்ட பா.ஜ.க.வின் தலைவர் மகராஜன் உள்ளிட்ட பொறுப்பாளர்களோ, "234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடத் திட்டம் வைத்துள்ளாம். நெல்லை உட்பட எங்களுக்கான வாய்ப்பான தொகுதிகளை நாங்கள் கேட்கிறோம். அதுபற்றி உறுதியாக கட்சியின் மேல்மட்டத்திற்கும் கொண்டுபோயிருப்பதாக'த் தீர்மானமாகவே தெரிவிக்கின்றனர்.
பா.ஜ.க. பல்ஸ் குறித்து நெல்லை அ.தி. மு.க.வின் சீனியரும் கட்சியின் அவைத் தலைவரு மான சங்கரலிங்கத்திடம் இதுகுறித்துக் கேட்டதில், இயல்பாகவே அமைதியான சுபாவம்கொண்ட அவர்... சற்று சூடானார். ""தலைவர் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. கட்சியைத் தொடங்கிய 1977லிருந்தே நெல்லைத் தொகுதி அ.தி.மு.க.வை விட்டுக் கைமாறியதில்லை. தேர்தல்தோறும் கூட்டணி என்றாலும் நெல்லை, நேற்றுவரை கூட்டணிக் கட்சிக்கே கூட ஒதுக்கப்பட்ட வரலாறில்லை என்பதை அ.தி.மு.க.விலிருந்த நயினார் நாகேந் திரன், உணர்ந்ததுதானே. அப்படியிருக்க நாங்கள் எப்படி எங்களின் அடிப்படை உரிமையை விட்டுக் கொடுப்போம்.
ஆண்டாண்டுகாலமாயிருக்கும் அ.தி.மு.க.வின் மீது இப்போது வந்த பா.ஜ.க. அதிகாரம் செலுத்துவதா. இந்த விஷயத்தில் எங்கள் கட்சியினர் எங்களுக்குள்ளிருந்த வேற்றுமைகளை மறந்து தொகுதியை விட்டுக்கொடுக்கக்கூடாது என்ற ஒற்றுமையிலிருக்கிறோம். நயினார் நாகேந்திரன் தேர்தலில் போட்டியிட்டாலும், அவர் அ.தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.விற்கு கட்சி மாறியவர் என்ற கண்ணோட்டப் பார்வைதான் ஒவ்வொரு அ.தி.மு.க.வின் தொண்டர்களிடமும் இருக்கும். அ.தி. மு.க. தொண்டர்கள் மனதளவில் வேலை செய்யவே மாட்டார்கள்'' என்கிறார் குரலை உயர்த்தி.
உடைபட்ட கண்ணாடியைப் பெவிகாலிட்டு ஒட்டினாலும் ஒட்டிக்கொள்ளும். ஆனால் அதில் நிஜ உருவத்தை முழுமையாகக் காணமுடியாது. நெல்லை அ.தி.மு.க.-பா.ஜ.க.வின் உறவும் அப்படித்தானிருக்கிறது.