poo

போயஸ் கார்டன்ல அன்னைக்கு காலை எட்டரை மணிக்கு, மாடி அறையில் இருந்த ஜெயலலிதா, அங்க இருந்த ரிசப்ஷனுக்குப் பேசி, "கலைராஜனை வரச் சொல்லு''ன்னு கோபக்குரல்ல சொல்லியிருக்கார். அப்ப, அவர் நக்கீரனை வச்சிக்கிட்டு பத்ரகாளி மாதிரி இருந்தாராம்.

அன்னைக்கு அ.தி.மு.க. பொதுக்குழு முடிஞ்சி வெளியே வந்த பொன்னை யன், பி.ஹெச். பாண்டியன் உட்பட, அத்தனை தலைவர் களையும் உடனே கார்டனுக்கு வரச்சொல்லி, ஜெயலலிதா அடுத்ததா உத்தரவு போட் டார். அதனால் அத்தனை பேரும் அங்க வந்துட்டாங்க. அப்ப 20-க்கும் மேற்பட்ட போலீஸ்காரங்களும் அங்க வந்து, அங்க இருந்த கட்சி நிர்வாகிகளை எல்லாம், ஏதோ அட்டாக் பண்ணப்போற மாதிரி, ரவுண்டு கட்டி நின்னுருக்காங்க.

கட்சித் தலைவர் களோட அட்வகேட் ஜெனரல், உளவுத்துறை ஐ.ஜி, உட்பட எல்லோரும் அங்க இருந்திருக்காங்க. அப்ப வெறி பிடிச்ச மாதிரி வெளியே வந்த ஜெயலலிதா...

Advertisment

"நக்கீரன்ல என்ன போட்டிருக்கான் பாத்தீங் களா?''ன்னு ஆவேசமாகக் கேட்க, எல்லோரும் ”"நாங்க பார்க்க லைம்மா''ன்னு, கோரஸாச் சொல்லி யிருக்காங்க.

"அதான் கடை கடையா போஸ்டர் போட்ருந்தானே? நீங்க பாக்கலையா?''”

"இல்லைம்மா''”

Advertisment

"உங்களுக்கெல்லாம் கண்ணு குருடா போய்டுச்சா?''ன்னு கேட்டபடி, தன் பார்வையை பொன்னையன் பக்கம் திருப்பி...

"என்ன பொன்னையன்? உங்க வேலைதானே இது?''”

"இல்லைம்மா.. நீங்கதான் இந்தக் கட்சின்னும் எம்.ஜி.ஆர். புகழை நிலை நிறுத்தறவங்கன்னும் நம்பறவன் நான். உங்க பெயருக்கு இழிவு வர்ற எதையும் நான் செய்யமாட்டேன்''”

அடுத்து அவர் பார்வை, பி.ஹெச்.பாண்டியன் பக்கம் திரும்புது.

"என்ன பாண்டியன், உங்களைப் பார்க்க நக்கீரன்ல இருந்து ஒருத்தன் வருவானாமே?...''

"என்ன பொன்னையன். தேர்தல் வெற்றி பற்றி நக்கீரனுக்குப் பேட்டி கொடுத்தீங்க இல்ல... உங்களுக்கும் நக்கீரனுக்கும் தொடர்பு இருக்குதுன்னும் நக்கீரன் சீஃப் ரிப்போர்ட்டர் ஒருத்தன் உங்க வீட்டுக்கு வருவான்னும், ஜெயக்குமார் என்கிட்ட சொன்னாரு.''”

"அந்தப் பேட்டி, டெலிபோன்ல எடுத்த பேட்டிம்மா. அந்த பேட்டில நமக்கு சாதகமாகத்தான் எழுதுனாங் கம்மா.''”

"அந்த பேட்டி பத்தி நான் தப்பா சொல்லலை. சசிகலா வெளியேறுனதுல இருந்து நக்கீரன் ரொம்ப கரெக்டாதான் எழுதுனாங்க. நம்ம கட்சிக்கார னெல்லாம் நக்கீரனை விடாம வாங்கிப் படிக்கிறாங்க. அதுல இப்படி "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி'ன்னு அட்டைல, அதிலும் என் கன்னம் பெருசா இருக்குற மாதிரி படம் போட்டுப் போட்டுருக்கான். அதை போஸ்டர்லயும் போட்டு, தமிழ்நாடு முழுக்கத் தொங்கவிட்டிருக் கான்''”-ஜெயலலிதாவின் கண்ணு, மருதாணி போட்ட மாதிரி செவ செவன்னு மாறிடிச்சி.

அப்போது, பி.ஹெச்.பாண்டியன், "அம்மா, உள்ளே உள்ள கன்டெண்ட்ல நீங்க பீஃப் சமைப்பீங்கன்னுதான் எழுதியிருக்கான்''’என்று சொல்ல...

pp

"இல்ல பாண்டியன், உள்ள கன்டெண்ட்ல தப்புல்ல. நான் கறி சாப்புடறவதான். பீஃப்ன்னா ஆங்கில அகராதில சிக்கனைத் தவிர, மான்கறி வரை அர்த்தம் வரும். எம்.ஜி.ஆருக்கு நான் ஆக்கிக் கொடுத்தேன்னு எழுதியிருக்கான். இந்தத் தகவல் எல்லாம் எப்படி வெளியே போகுது? நாம பேசுறத அப்படியே எழுதியிருக்கான்....''

"பொன்னையன் நீங்க, நான் கொ.ப.செ. ஆவதை எதிர்த்தது உண்மை தானே? அதுக்குள்ளல்லாம் நான் வரலை. அந்த கோபால் திருந்திட்டான்னு நினைச்சேன். அவன் திருந்தலை. அவன் இன்னமும் கோபாலபுரத்துல இருக்குற வன்தான். அதனால்தான் மாட்டுக்கறி சாப்பிடும் மாமின்னு டைட்டில் போடுறான். இதை நான் கண்டுக்காம விட்டா, உயர்சாதி இந்துக்கள் என்னை எதிர்ப்பாங்க. இதை நான் எதிர்த்தா, மாட்டுக்கறி சாப்பிடும் தலித், முஸ்லிம் எல்லாம் என்னை எதிர்ப்பாங்க. இந்த மாதிரி என்னை மாட்டிவிடுற ஐடியா எல்லாம் கருணாநிதிக்குதான் வரும். அவன் பேச்சைக் கேட்டு, (எப்பவும் கலைஞரை யும் "அவன், இவன்'னு ஒருமையில்தான் அந்தம்மா பேசும்... ஆனால் கலைஞர் அந்தம்மாவை "அம்மையார்' என்றுதான் அழைப்பார்) கோபால் செயல்படுறான்''னு ஜெயலலிதா சொல்லிக்கிட்டே இருக்கும்போது...

சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. செந்தமிழன்கிட்ட இருந்து போன் வருது.

"என்ன சொல்வது?'ன்னு பூங்குன்றன் வந்து, ஜெயலலிதாகிட்ட கேட்டார்.

"அவரைப் போய், ஜெயா. டி.வி. அலுவலகத் துக்கு எதிரில் வச்சி, நக்கீரனைக் கொளுத்தச் சொல்லு. அதை அப்படியே ஜெயா பிளஸ்சில் லைவ்வா ஒளிபரப்பச் சொல்லு''ன்னு சொன்னார் ஜெயலலிதா.

அடுத்த போன், கலைராஜன்கிட்ட இருந்துன்னு சொன்ன பூங்குன்றன், "நக்கீரனைக் கொளுத்துனா, தி.மு.க. மா.செ. அன்பழகன் ஆளுங்க அடிக்கி றாங்களாம்''னு சொல்ல...

அப்ப ஒரு உளவுத்துறை அதிகாரி வந்து... "அம்மா, நக்கீரன் காமராஜும் நடராஜனும் ரொம்ப நெருக்கம். நடராஜன் சொல்லித்தான் இப்படி எழுதறாங்க''’என்றார்.

அப்ப தன் செகரட்டரி ஒருவரைக் கூப்பிட்ட ஜெயலலிதா, சென்னை கமிஷனரைக் கூப்பிட்டு. "அ.தி.மு.க.காரன் நக்கீரனுக்கு எதிரா எதைச் செய்தாலும், அவங்களுக்கு போலீஸ் பாதுகாப்பக் கொடுக்கணும்னு சொல்லு''’-அவர் குரல்ல நெருப்புத் துண்டுகள் இருந்துச்சு.

பிறகு உளவுத்துறை அதிகாரியிடம், "நீங்க நக்கீரன் ஆபீசுல என்னென்ன நடக்குதுன்னு எனக்கு சொல்லிக்கிட்டே இருங்க. நக்கீரன் டேமேஜ் ஆகணும். அவனுக்கு (என்னத்தான் ரொம்ப அன்பா அவன், இவன்னு ஏகவசனத்துல கொக்கரிச்சுருக் காங்க...) ஒரு மறக்க முடியாத பாடத்தக் கத்துக் கொடுக்கணும்''னு சொல்லிட்டு, "கலைராஜன் என்னாச்சு பூங்குன்றன்?''னு சத்தமா காது ஜவ்வு கிழியுற மாதிரி கத்தினார் "ஜெ.'

(புழுதி பறக்கும்)