நடிகர் திலகத்தின் பேரன்
நடிகர்திலகம் சிவாஜியின் இளையமகன் பிரபு, ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது கேரக்டர் ரோல்களில் நடித்து சினிமாவில் பிஸியான ஆர்ட்டிஸ்டாக இருக்கிறார். மூத்த மகன் ராம்குமார் அவ்வப்போது சில வெயிட்டான கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார். பிரபுவின் மகன் விக்ரம்பிரபு, ஸ்டெடியான ஹீரோ அந்தஸ்துக்காக போராடிவருகிறார். சிவாஜியின் தம்பி மகன் மனோ ஒரு சில படங்களில் தலைகாட்டியுள்ளார். துஷ்யந்த் என்ற பேரன் சில வருடங்களுக்கு முன்பு ஹீரோவாக அறிமுகமானார்.
இப்போது ராம்குமாரின் இரண்டாவது மகன் தர்ஷன் கோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரியாகிறார். டெல்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் பயின்ற தர்ஷன், படிக்கும்போதே மேடை நாடகங்களில் நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பயணம் செய்து இந்தி, தமிழ் நாடகங்களை வடிவமைத்து நடத்தியுள்ள தர்ஷன், பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் தெருக்கூத்து, வீதி நாடகத்தை நடத்தி அசத்தியுள்ளாராம்.
பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொண்டு, தனது தாத்தா நடிகர் திலகத்தின் ஆசியுடன் வெகுவிரைவில் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு இளம் இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்டுவருகிறாராம் தர்ஷன்.
தோழரின் மகன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.ஐ.யின் சி.மகேந்திரனை அறியாத அரசியல் கட்சியினர் கிடையாது. கட்சியின் தேசியக்குழு உறுப்பினராக இருக்கும் மூத்த தோழர் மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் ஹீரோவாக தடம்பதிக்க வருகிறார். அறிமுக இயக்குனர் மகிவர்மனின் கதை-திரைக்கதை-வசனத்தில் உருவாகியுள்ள "வாய்தா'’என்ற படத்தில் சீனியர் நடிகர்களான நாசர், மு.ராமசாமி ஆகியோருடன் அறிமுகமாகிறார் புகழ் மகேந்திரன். பல திரைப்பட விழாக்களில் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்ற வாய்தாவின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை கடந்த வாரம் விஜய்சேதுபதி வெளியிட்டார்.
கோர்ட் கூண்டுக்குள் கழுதையுடன் அமர்ந் திருக்கிறார் மு.ராமசாமி. பின்னணியில் சாமானியர்கள் மீது நடத்தப்படும் வன்முறை வாசகமும் உள்ளது. தோழரின் மகன் ஹீரோவாகும் படமல்லவா, படத்தின் சட்டயரிங்கிற்கு இதான் சாம்பிள்.
மாயாண்டியின் மகன்
ராஜ்கிரண் என்றால் "என் ராசாவின் மனசிலே'’மாயாண்டி கேரக்டர்தான் பெண்களுக்கு நினைவுக்கு வரும். அந்த சூப்பர்டூப்பர் ஹிட் படத்தின் இயக்குனர் கஸ்தூரிராஜாவும் ராஜ்கிரணும் குடும்பரீதியாக நெருங்கிய நண்பர்கள்.
அந்த ஆழ்ந்த நட்புக்காகத்தான் கஸ்தூரிராஜாவின் இளையமகன் நடிகர் தனுஷ் டைரக்டராக அறிமுகமாகிய ‘"பவர் பாண்டி'’படத்தில் பவர்ஃபுல்லான கேரக்டரில் நடித்தார் ராஜ்கிரண். இப்போதும் தனது கெத்தைவிட்டுக் கொடுக்காமல் செலக்டிவான கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறார் ராஜ்கிரண். அவரது மகன் திப்பு சுல்தான் நைனாமுகமது தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார், ஹீரோவாக அல்ல, டைரக்டராக.
தனது அப்பா நடித்த எவர்க்ரீன் படமான "என் ராசாவின் மனசிலே'’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை-திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார் திப்புசுல்தான். "இறை அருளால் எனது மகனார் திப்பு சுல்தான் நைனார்முகமது, மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்'’என திப்புவின் 20-ஆவது பிறந்த நாளன்று உருக்கமிகு அறிக்கைவிடுத்துள்ளார் ராஜ்கிரண்.
விஜயகுமாரின் பேரன்
தரமான கதையுடன் கமர்ஷியல் ஹிட்டையும் கணக்கில்கொண்டு படங்களைத் தயாரித்து வருகிறது சூர்யாவின் "2டி என்டெர்டெயின்மெண்ட்'. அந்த வரிசையில் குழந்தைகளை மையமாக வைத்து சூர்யா தயாரித்துவரும் இன்னும் பெயரிடப்படாத படத்தை சரவ் சண்முகம் என்பவர் டைரக்ட்பண்ணி வருகிறார். இந்தப் படத்தில் சீனியர் நடிகர் விஜயகுமாரின் பேரனும் நடிகர் அருண்விஜய்யின் மகனுமான அர்னவ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். படத்தில் அர்னவ்விற்கு தந்தையாக நடிக்கிறார் அருண்விஜய்.
மகேஷ்பட் மகள்
இந்தி சினிமாவின் ஜாம்பவானான மகேஷ்பட்டின் மூன்றாவது மனைவியின் மகள் ஆலியாபட், இந்தி சினிமாவில் ஹீரோயினாக வலம்வந்து, இப்போது ராஜமௌலியின் ‘"ஆர்.ஆர்.ஆர்.' மூலம் தெலுங்கு சினிமாவிலும் எண்ட்ரியாகிவிட்டார். விரைவில் தமிழ் சினிமாவிலும் எண்ட்ரியாகப் போகிறார்.
"சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் விஜய்யின் 65-ஆவது படத்தை நெல்சன் டைரக்ட் பண்ணுகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜாஹெக்டே கமிட்டாகலாம். அடுத்து விஜய்யின் 66-ஆவது படத்தைத் தயாரிப்பவர் மாஸ்டரின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார்தான். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆலியாபட்டிடம் இப்போதே பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.