சென்னையை ஒட்டியுள்ள நகரமான ஆவடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி, அதன் முதல் மேயருக்கான தேர்தல் பரபரப்பாக நடந்துவருகின்றது. மொத்தம் 48 வார்டுகளைக் கொண்ட ஆவடி மாநகராட்சியின் மேயர் பதவி, பட்டியலின பொது வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தரப்பில் 9-வது வார்டில் போட்டியிடும் உதயகுமார், 3-வது வார்டில் போட்டி யிடும் இருமுறை கவுன்சிலரான இளங்கோவன் மற்றும் 14-வது வார்டில் போட்டியிடும் வீரபாண்டி ஆகியோர் மேயருக்கான ரேஸில் ஜொலிக்கின்றனர், துணை மேயர் இடத்தைப் பிடிக்க அமைச்சர் சா.மு.நாசரின் மகன் சா.நா.அசிம்ராஜா கடுமையாக உழைக்கிறார். தான் போட்டியிடும் 4-வது வார்டைக் காட்டிலும் மொத்தமுள்ள 48 வார்டுகளிலும் தி.மு.க.வே கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவர்மீது மீது அ.தி.மு.கவினர் பல பொய் புகார்களைக் கொடுத்து பிரச்சாரத்தை திசை திருப்ப முயன்று வருகின்றனர்.

avadi

Advertisment

அ.தி.மு.க. தரப்பில், அத்தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் பிரச்சாரத்தில் தென்படவே இல்லை. முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், மா.செ. அலெக்சாண்டர் மற்றும் ஆவடி அப்துல்ரஹீம் ஆகியோர் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மத்தியில் சுணக்கம்தான் காணப்படுகின்றது, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 10 வார்டு களில், ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூன்றில், முன்னாள் கவுன்சிலர் களான சூரியகுமார் மற்றும் சுப்பிரமணி இருவருமே மக்கள் செல்வாக்கில் வெற்றிபெற வாய்ப் புள்ளது. 48-வது வார்டில் போட்டி யிடும் ம.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் காமேஷ் பிரச்சாரத்தில் மந்தமாக இருக்கிறார்.

தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு வார்டில், மயில்வாகனன் 25-வது வார்டில் போட்டியிடுகிறார். அங்கு அதே கட்சியைச் சேர்ந்த மதிசெல்வம் போட்டியிடுவதால் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி கடினம், தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட மூன்று வார்டுகளில், 38-வது வார்டில் போட்டியிடும் மேகலா சீனிவாசனின் வெற்றி வாய்ப்பு அமோகமாக இருந்தாலும், 13-வது வார்டில் போட்டியிடும் அபிஷேக், 34-வது வார்டில் போட்டியிடும் ரேவதி இருவரும் வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபட வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப் பட்ட 41 மற்றும் 21-வது வார்டுகளில் தி.மு.க.வின் வாக்கு வங்கி மிகுந்திருப்பதால் தி.மு.க.வினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதுவும் அக்கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல் பிடிவாதமாக தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுவது அக்கட்சிக்குப் பின்னடைவு. ஒட்டுமொத்தமாக, ஆவடி நிலவரம் தி.மு.க.வுக்கே சாதகமாக இருக்கிறது. தி.மு.க. தலைவர் கை காட்டு பவரே மேயர் நாற்காலியை அலங்கரிப்பார் என்கிறது ஆவடி மாநகர தி.மு.க.