"கீரைக்கட்டுகளை எடுத்துக்கொண்டு தினமும் சேலம் மார்க்கெட்டுக்கு சென்று வர பஸ் செலவு மட்டும் தினமும் 30 ரூபாய் ஆகிவிடும். கூவிக்கூவி விற்பதால் காலையில் சீக்கிரமாகவே பசியெடுக்கும். அதற்காக ஏன் செலவு செய்ய வேண்டும் என்று பட்டினியுடன் கீரையை விற்றுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகுதான் சாப்பிடுவேன். தமிழக முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணச்சலுகை அளித்ததால், அதில் மீதமான பணத்தில் தினமும் காலையில் மார்க்கெட்டிலேயே தக்காளி சாதம் வாங்கிச் சாப்பிட்டு விடுவேன்'' என்கிறார் சேலத்தை அடுத்த பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற பெண் விவசாயி.
அதே நேரத்தில், சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் கூறுகையில், ''தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் போலதான் இயக்கப்பட்டு வருகின்றன. வேலைக்குச் செல்பவர்களில் ஷேர் ஆட்டோக்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பலர் உண்டு. பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தால், வேலைக்குச் செல்லும் பெண்களில் பெரும்பாலானவர்கள், ஷேர் ஆட்டோக்களுக்குப்பதில் பேருந்துகளுக்குச் செல்லத் தொடங்கியதால் எங்கள் ஆட்டோத் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் தனியார் பள்ளிகளில் படித்த பிள்ளைகள் பலரும் அருகிலுள்ள அரசு பள்ளிகளுக்கு மாறியதால், தற்போது அவர்களின் சவாரி வருவாயும் பெருமளவு குறைந்துள்ளது. எனவே கடன் வாங்கிப் பிழைப்பை ஓட்டும் நிலையிலிருக்கிறோம்" என்றார்.
சேலம் செவ்வாய்பேட்டை ஆட்டோ ஓட்டுநர் ஜோதி, "சேலம் நகரில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடுகின்றன. தற்போது தினசரி வருமானம் 500 ரூபாயிருந்து 200 ரூபாயாகக் குறைந்துவிட்டது. குடும்பச்செலவுகளைச் சமாளிப்பதும், ஆட்டோவுக்கான கடன் தொகையைச் செலுத்துவதும் மிகவும் கடினமாக உள்ளது. அதனால் சேலத்தில் மட்டும் 2,000 ஆட்டோக்கள் வரை ஃபைனான்ஸியர்களிடம் முடங்கியுள்ளன. பலரும் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, ஜவுளிக்கடையிலும், தறிப் பட்டறையிலும் வேலையில் சேர்ந்துவிட்டனர்.'' என்கிறார்.
''அரசின் இந்த நலத்திட்டத்தால் ஷேர் ஆட்டோ மட்டுமின்றி, தனியார் நகரப் பேருந்துகள், சிற்றுந்து தொழிலும் பெருமளவு பாதித்துள்ளது. இதனால், பல நகரப் பேருந்துகளை மறுவிற்பனை செய்வது அதிகரித்துள்ளது,'' என்றார் சேலத்தைச் சேர்ந்த ஆர்.டி.ஓ.
சி.ஐ.டி.யு. சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் கூறுகையில், ''பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டத்தை நாம் குறை சொல்ல முடியாது. அதேவேளையில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 3.50 லட்சம் ஆட்டோ தொழிலாளர்களைப் பாதுகாப்பதும் அரசின் முக்கிய கடமையாகும். சேலம் மாவட்டத்தில் காக்காபாளையம் ஸ்டேண்டில் 30 ஆட்டோக்கள் ஓடுகின்றன. அவர்கள் பவர்லூம் பட்டறைகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களைச் சவாரி ஏற்றிச்சென்று வந்தனர். இப்போது பெண்களுக்கு பேருந்துகளில் இலவசம் என்பதால், அங்குள்ள ஆட்டோக் களுக்கு சவாரி அடியோடு நின்றுவிட்டது. இதுதான் மாநிலம் முழுமைக்குமான நிலைமை.
ஆட்டோ தொழிலை பாதுகாக்க டீசல் விலையில் சலுகை அளிக்கலாம். சொந்த வீடு இல்லாதவர் களுக்கு அரசு, வீடு கட்டிக்கொடுக்கலாம். கேரளாவில் அரசே, ஆட்டோ, டாக்சி சேவையை இணையவழியில் இயக்கவுள்ளது. அதுபோல தமிழக அரசும் செயல்படுத்தலாம்,'' என்றார்.
பெண்களுக்கு இலவசப் பேருந்துத் திட்டம் என்பது, மிகவும் குறைந்த ஊதியத்தில் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் பெண்களின் வருமான இழப்பை ஈடுகட்ட பெரிதும் உதவக்கூடிய திட்டமாக உள்ளது. இத்திட் டத்தினை அனைத்துப் பெண்களும் பயன் படுத்துகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. இலவசப் பயணப் பேருந்துக்காகக் காத்திருக்காமல், மற்ற பேருந்துகளில் பயணிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேபோல, குறித்த நேரத்தில் அலுவலகத் துக்குச் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இதனால் ஓரளவு பாதிப்பு இருப்பது உண்மை தான். பொதுப்போக்குவரத்தைப் பொறுத்தவரை, அடுத்தடுத்த வளர்ச்சிகளில் குதிரை வண்டி, ரிக்ஷா, ஆட்டோ போன்றவையெல்லாம் இழப்பைச் சந்திப்பதும், அடுத்த மாறுதலுக்குச் செல்வதும் இயல்பாக இருந்தது. தற்போது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரி செய்யவும், அவர்களுக்கு உதவும் வகையிலும் நல வாரியத்தின் செயல்பாடுகள் அமைந்து, அவர்களின் குறைகளைச் சரிசெய்ய அரசு முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, மானிய விலையில் ஆட்டோ வாங்க உதவுவது, டீசல் மானியம் வழங்குவது போன்றவற்றை சிந்தித்துச் செயல்படுத்தலாம்.