கவனம் ஈர்க்கும் ஸ்ரீஹரன்!
இளைஞர்களைக் கவரும் வகையில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நிற்கும் ஸ்ரீஹரன் வித்தியாசமான ஆளுமையாக இருக்கிறார். தெரிகிறார். மாற்றுக்கட்சி வேட்பாளர் களை சந்திக்கும்போது கைகுலுக்குவதோடு நிற்காமல், அவர்கள் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தும் தெரிவிக்கிறார். கடும் உழைப்பால் உயர்ந்த மதுரா டிராவல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனரான வி.கே.டி. பாலனின் மகன்தான் ஸ்ரீஹரன். சுற்றுலா துறைக்கான சர்வதேச படிப்பை ஜெனீவாவில் முடித்து சான்றிதழ் பெற்றவர். தந்தையைப் போல தொழில்துறையில் முனைப்பு காட்டியதுடன், சாதி- மதம் சாராத அரசியல் மீது நம்பிக்கை வைத்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது சின்னமான டார்ச் லைட் வெளிச்சம் குறிப்பிடத்தக்க அளவில் பரவி உள்ளது.
திருவள்ளூரில் தி.மு.க வேகம்!
2016-ல் திருவள்ளூர் தொகுதி மட்டுமே அந்த மாவட்டத்தில் தி.மு.க.வுக்கு கை கொடுத்தது. இந்தமுறை அ.தி.மு.கவில் முன்னாள் அமைச்சர் ரமணா நிற்பதால் களத்தில் போட்டி கடுமையானது. சற்று பின்தங்கியிருந்த தி.மு.க. வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான வி.ஜி.ராஜேந்திரனிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் கூடுதல் சுறுசுறுப்பும் வேகமும் வெளிப்படுகிறது. குட்கா விவகாரத்தில் சிக்கிய ரமணாவுக்கு எதிராக தி.மு.க. தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அனைத்துத் தரப்பினைரை யும் அரவணைத்து ராஜேந்திரன் மேற்கொள்ளும் பிரச்சாரம் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
கோபியில் அமைச்சர் அக்கறை!
கோபிசெட்டிப் பாளையம் தொகுதியில் 8 முறை வென்றவர் அமைச்சர் செங்கோட்டையன். ஒரே ஒருமுறை அவர் தோல்வியடைந்தது, தி.மு.க. வேட்பாளர் ஜி.பி. வெங்கிடுவிடம்தான். அந்த வெங்கிடுவின் மகன் மணிமாறன் தற்போது அமைச்சரை எதிர்த்து களம் இறங்கியுள்ளார். தி.மு.க. கூட்டணியின் பலம், தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைகள் இவற்றை உணர்ந்து, தொகுதியில் தனக்குள்ள செல்வாக்கைத் தக்க வைக்க தனி அக்கறை எடுத்து கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் செங்கோட் டையன். 9-வது முறையாக வெற்றிபெறுவதில் முனைப்பு காட்டுகிறது செங்கோட்டையன் டீம்.