வாழும் காலத்திலேயே சிலை வைக்கப்படுவது என்பது அரிதாக நிகழும் அதிசயம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு முதல் சிலை சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டது. 1968-லேயே பெரியாரால் முடிவெடுக்கப்பட்டு, பெரியாரின் மறைவுக்குப் பின் மணியம்மையாரால் அந்த சிலை திறந்து வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். மறைவின்போது ஏற்பட்ட வன்முறையின்போது போலீசார் வேடிக்கை பார்க்க, சில விஷமிகளால், கலைஞரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. ஓர் இளைஞர் கடப்பாரையால் கலைஞர் சிலையின் நெஞ்சுப் பகுதியை உடைக்கின்ற படங்கள் பத்திரிகைகளில் வெளியாகின.
‘செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகில் குத்தவில்லை. நெஞ்சில்தானே குத்துகிறான். அதுவரையில் நிம்மதி’ என அதையும் கவிதையாக்கி காயம் ஆற்றிக் கொண்டவர் கலைஞர்.
கலைஞர் மறைந்தபின் சென்னை அறிவாலயத்தில் அப்போதைய காங்கிரஸ் தலைவி சோனியாவால் முதல் சிலை திறந்துவைக்கப்பட்டது. அதன் பின் அடுத்தடுத்து ஈரோடு, காஞ்சிபுரம், திருச்சி என பல்வேறு இடங்களில் கலைஞருக்கு சிலைகள் திறக்கப்பட்டன. இவையெல்லாம் கட்சி அலுவல கத்திலும் கட்சிப் பிரமுகர்களுக்குச் சொந்தமான இடத்திலெல்லாம்தான் நிறுவப்பட்டன.
முதன்முறையாக பொது இடத்தில் மதுரையில் கலைஞருக்குச் சிலை திறக்க முடிவுசெய்யப் பட்டது. இதற்கென கலைஞரின் அழகிய வெண் கலச் சிலை ஆஸ்தான சிற்பக் கலைஞரான தன்ராஜால் உருவாக்கப்பட்டது. இந்தக் சிலையைத் திறந்துவைக்க முடிவுசெய்த நேரத்தில் காழ்ப்புணர்வுடன் அ.தி.மு.க. அரசு சட்டரீதியான இடைஞ்சல் களை ஏற்படுத்தியது. மதுரை நகரின் பல இடங்களில் கலைஞருக்குச் சிலையமைக்க முயன்றபோது, அதிகாரிகள் முறையான பதிலளிக்காமல் தட்டிக் கழித்தனர். இதனையடுத்து மதுரை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தளபதி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையை நாடினார். உரிய நடவடிக்கை எடுக்க நீதி மன்றம் உத்தரவிட்டபிறகும் அரசு அந்த உத்தரவைக் கிடப்பில்போட்டது. இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தபிறகே மதுரை சிம்மக்கல் ரவுண்டானா பகுதியில் கலைஞரின் வெண்கலச் சிலையை அமைக்க அனுமதியளித்தது.
இந்த வழக்குக்காக வாதாடிய வழக்கறிஞர் வீரா, கலைஞர் இறந்தபிறகும் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து வெற்றிபெற்று வருவதாக கூறினார். சிம்மக்கல் பகுதியில் கலைஞரின் சிலையை வைக்கக்கூடாதென, பா.ஜ.க.வினர் திரண்டு கலாட்டா செய்ய, காவல்துறையினர் அவர்களை கலைத்து விரட்டினர்.
பிப்ரவரி 17-அன்று தி.மு.க. தலைவரான மு.க.ஸ்டாலின் தலைமையில் சிலைதிறப்பு விழா வெகுவிமர்சையாக நடந்தது. மதுரை மற்றும் சுற்று வட்டார தி.மு.க.வினர் திரளாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே தனக்கான இடத்தை சட்டரீதியாக வென்ற கலைஞர், மதுரையிலும் சட்டப்போரில் வென்று சிலையாக சிரிக்கிறார்.