வட மாவட்டங்களான விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் பா.ம.க.வுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாகக் கணக்கிட்டுதான், அ.தி.மு.க., தைலாபுரத்திடம் அதீத பவ்வியம் காட்டியது. பல்வேறு நிர்பந்தங்களையும் ஏற்றுக்கொண்டு பா.ம.க.வோடு கூட்டணி உறவைத் தொடர்ந்தது. எனினும், அது எதிர்பார்த்த அளவுக்கு அங்கெல்லாம் வெற்றி கிடைக்கவில்லை. அதோடு பா.ம.க. வையே, அந்தப் பகுதியில் தி.மு.க. மண் கவ்வ வைத்திருக்கிறது. அதேபோல் தி.மு.க.வுக்குக் கிடைத்த மகத்தான வெற்றிக்கு இடையில் ஒருசில தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. இது எப்படி? இவற்றிற்கான காரணங்களை சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம்
திண்டிவனம் தொகுதி
திண்டிவனம்: இங்கு அ.தி.மு.க.தான் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. ஏற்கனவே 2016 தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டி யிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் திருமதி சீதாபதி சொக்கலிங்கம். இவரையே மீண்டும் தி.மு.க. களமிறக்கியது. இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் அர்ச்சுனன். இருவரும் கடுமையான தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். இருந்தும், அ.தி.மு.க. வேட்பாளர் அர்ச்சுனன் வெற்றி பெற்றி ருக்கிறார்.
இதற்குக் காரணம், தேர்தல் பணியில் அ.தி.மு.க. வேட்பாளர் வாக்காளர்களை கவனித்த அளவிற்கு தி.மு.க. வேட்பாளரின் கவனிப்பு இல்லை என்று அக்கட்சியினரே புலம்புகின்றனர். ஆட்சி மாற்ற ’மூடில்’ இருக்கும் மக்கள் எப்படியும் நம்மை வெற்றிபெற வைப்பார்கள் என்ற மிகுந்த நம்பிக்கைகொண்டிருந்தாராம் தி.மு.க. வேட்பாளர். அதனால், அவர் சிக்கனம் காட்டப்போக, அவர் பக்கம் போதுமான கவனம் திரும்பாமல் போய்விட்டதாம். அ.தி.மு.க. வேட்பாளரோ கரன்ஸி மூலம், கள நிலவரத்தைத் தனக்கு சாதகமாக்கிக்கொண் டாராம்.
வானூர்
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் கட்சியின் மா.செ. வான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சிஷ்யர் சக்கர பாணி, மீண்டும் களமிறக்கப்பட்டார். அவருக்கு தொகுதி யில் கடும் அதிருப்தி நிலவி வந்த நிலையிலும், வி.சி.க. வேட் பாளர் வன்னி யரசு சுலபமாக வெற்றி பெற்று விடுவார் என்ற நிலை முதலில் இருந்தது. அ.தி.மு.க வேட்பாளரின் பலமான கவனிப்பு, நிலைமையை அவருக்கு சாதகமாக்கியது. வன்னியரசு, தீவிரமாக வேலைசெய்தாலும், வைட்ட மின் "ப' விஷயத்தில் அவரால் தாராளம் காட்ட முடியவில்லை. அதுவே இவரது தோல்விக்கு முக்கிய காரணமாக கூறுகின்றனர் தொகுதி வாக்காளர்கள்.
மயிலம்
இங்கு தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் மாசிலா மணி மீண்டும் போட்டியில் இறங்கினார். அவர் மீண்டும் கரை ஏறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் நின்ற பா.ம.க. வேட்பாளர் சிவகுமார், சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றுவிட்டார். தி.மு.க. வேட்பாளர் ஏன் தோற்றார்? கடந்த ஆண்டு கொரோனா காலத்தில், தொகுதி முழுக்க சென்று மக்களைச் சந்தித்து உதவி செய்த தோடு, திட்டப் பணிகளையும் பாரபட்சம் இல்லாமல் செய்தவர் அவர். தொகுதி மக்களிடம் மிகுந்த பற்று கொண்டவர். எனினும், வெற்றி மீதான நம்பிக்கையால், கரன்ஸிப் பாசனத்தை இவர் தரப்பு நடத்த வில்லை. இதனால்தான் தி.மு.க. இங்கு சறுக்கியது என்கிறார்கள்.
மைலம்
இங்கும் தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தான் நிறுத்தப்பட்டார். அ.தி.மு.க. கூட் டணி சார்பில் பா.ம.க. வேட்பாளராக ராஜேந்திரன் களமிறக்கப்பட்டார். இருவருமே தொகுதியின் முக்கியஸ் தர்களை நன்கு அறிந்தவர்கள். மக்கள்தொடர்பு உள்ள வர்கள். இருந்தும் செஞ்சி மஸ்தான், சாதி, மதம், இனம் கடந்து அனைத்து மக்களோடும் இரண்டறக் கலந்திருந்தவர். மேலும் தன்னிடம் இருப்பதை தன் கட்சியினருக்கும் நலிவுற்ற ஏழை-எளிய மக்களுக்கும் தாராளமாக உதவி செய்பவராக இருந்தார். தேர்தல் செலவினங்களைப் பற்றியும் கவலைப்படாமல், தாராளமாக நடந்து கொண்டார். இதனால் வெற்றிபெற்று இப்போது அமைச்சராகவும் ஆகியிருக்கிறார் மஸ்தான் என்கி றார்கள்.
விக்கிரவாண்டி
இங்கு 2016-ல் தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற ராதாமணி உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் காணை ஒ.செ.வான முத்தமிழ்ச் செல்வன், மா.செ. சண்முகத்தின் ஆதரவோடு நிறுத்தப் பட்டார். இடைத்தேர்தல் என்பதால் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தொகுதியில் உள்ள கிராமங்களை தத்து எடுத்துக்கொண்டு எல்லாவிதமான அஸ்திரங்களையும் பிரயோகித்ததின் விளைவாக, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் முத்தமிழ்ச்செல்வன். தற்போதைய தேர்தலிலும் அவரையே மீண்டும் களமிறக்கியது அ.தி.மு.க. இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் களம் இறக்கப்பட்ட மா.செ. புகழேந்தியையே மீண்டும் கட்சி களமிறக்கியது. இடைத்தேர்தலில் தோல்வியுற்ற புகழேந்திக்கு மக்களிடம் அனுதாபம் இருந்தது. அவரது பிரச்சார அணுகுமுறையும் மக்களைக் கவர்ந்தது. அ.தி.மு.க. வேட்பாளர் அளவிற்கு செலவுகளிலும் தாராளம் காட்டினார். அதனால் வெற்றிக்கனியை தட்டிப் பறித்திருக்கிறார் புகழேந்தி.
விழுப்புரம்
அ.தி.மு.க.வில் அமைச்சராக ஒருந்த சி.வி. சண்முகம் மீண்டும் இங்கு போட்டியிட, இவரை எதிர்த்து அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.விற்கு வந்த டாக்டர் லட்சுமணன் கோதாவில் இறங்கினார். இவரும் பிரச்சாரத்திலும் செலவினங்களிலும் வலிமையைக் காட்டினார். அதன் விளைவாக சண்முகத்தை 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத் தில் தோற்கடித்திருக்கிறார். இவரைத் தோற்க டித்தே தீரவேண்டுமென்று பலவகையிலும் முயன்றார் சண்முகம். இருந்தும் அதீத நம்பிக்கையால் அவரது வெற்றி கைநழுவிப் போய்விட்டது. மேலும், இவரது மாவட்டத்தில் திண்டிவனம், மைலம், வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, விழுப்புரம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் நான்கு தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளார் சண்முகம். மேலும் இவரால் அரசியலில் உருவான இவரது சிஷ்யர் களான திண்டிவனம் அர்ஜுனன், வானூர் சக்கர பாணி இருவரும் வெற்றி பெற்றனர். ஆனால் அவர் களது குருவான சண்முகம் தோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
திருக்கோவிலூர்
இங்கு 2016-ல் தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற பொன்முடி மீண்டும் தற்போதைய தேர்தலில் நின்று, இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2011-ல் சி.வி.சண்முகத்திடம் தோல்வியை தழுவினார். அதன்பிறகு இனி விழுப்புரம் ஒத்துவராது என்று 2016 தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியைத் தேர்வுசெய்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது இரண்டாவது முறையாக மீண் டும் திருக்கோவிலூரில் வெற்றி பெற்று அமைச்சராகவும் ஆகியிருக்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி. சார்பில் நின்ற அதன் மாவட்ட தலைவர் கலிவரதனுக்காக, அமித்ஷாவே வந்து பிரச்சாரம் செய்தார். அப்படி யிருந்தும் கலிவரதன் வெற்றி பெற முடியவில்லை. காரணம் நிறைய தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கியபடியே இருந்தார் வரதன்.
ரிஷிவந்தியம்
இங்கு தி.மு.க. சார்பில் சிட்டி எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன் மீண்டும் களமிறக்கப் பட்டார். கடந்தமுறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றது முதல், தொகுதி மக்களிடமும் கட்சியினரிடம் பலமான இனணப்பில் இருந்தார். இவரது எளிமை இவருக்கு மிகவும் கை கொடுத் தது. அதனால் வெற்றிவாகை சூடியிருக்கிறார். மேலும் அ.தி.மு.க. வேட்பாளரைவிட செலவில் மிகுந்த தாராளம் காட்டினார். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சந்தோஷ், திருக்கோவிலூரில் வசித்துவருகிறார். இவரும் கரன்ஸியில் தாராளம் காட்டினார். இருந்தும் வசந்தன் கார்த்திகேயன் அளவிற்கு மக்களிடம் நெருக்கம் பாராட்டாததால் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்.
சங்கராபுரம்
தி.மு.க. சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. உதய சூரியனே மீண்டும் வேட்பாளராக களமிறக்கப் பட்டார். இவர் 1989-ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை பல தேர்தல்களைச் சந்தித்தவர். சங்கராபுரம் தொகுதியில் 2016-ல் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற உதயசூரியன், மீண்டும் இப்போது எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் ராஜா போட்டியிட்டார். இவர் தொகுதிக்கு அறிமுகம் இல்லாதவர். கட்சி பலத்தை மட்டுமே நம்பியவர். அதனால் உதயசூரியனை எதிர்க்கும் அளவிற்கு பலமான வேட்பாளராக ராஜாவால் பரிணமிக்க முடிய வில்லை. அதனால் இங்கு பா.ம.க. தோல்வியைத் தழுவியது. தி.மு.க. எம்எல்ஏ உதயசூரியன் கட்சிக்காரர்களிடமும் தொகுதி மக்களிடமும் நெருக்கமாக உள்ளவர். அதுதான் அவரைக் கரையேற்றியிருக்கிறது.
கள்ளக்குறிச்சி
இங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கட்சியின் அடிமட்டத் தொண்டர் செந்தில்குமார். இவர் மாவட்டச் செயலாளர் குமர குருவின் ஆதரவால் வேட்பாள ராக களம் இறக்கப்பட்டவர். இவரது வெற்றிக்கு முக்கிய காரணம் ஏற்கனவே இந்த தொகுதியில் எம்.எல்.ஏ. வாகவாக இருந்த பிரபுவும் அவரது அப்பா ஐயப்பனும்தான் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். இவர்கள் தங்கள் வருமானத்தில் கட்சிப்பணியையும் மக்கள் பணியையும் தாராளமாக செய்தவர்கள். தொகுதியில் மிகுந்த செல்வாக்கை வளர்த்திருந்த பிரபுவுக்கு, மீண்டும் உள்குத்து அரசியல் காரணமாக போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர் வளர்த்த செல்வாக்கின் பயனை, செந்தில்குமார் வெகுசுலபமாக அறுத்திருக் கிறார். இங்கு தி.மு.க.- கூட்டணி சார்பில் போட்டியிட்ட காட்டுமன்னார் கோயில் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மணிரத்தினம், தொகுதிக்கு எந்த விதத்திலும் தொடர் பில்லாதவர். அதனால் கூட்டணியிலேயே ஒருவித சுணக்கம் இருந்தது. அதுவே தோல்வியை யும் ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள்.
உளுந்தூர்பேட்டை
இங்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர் அந்தக் கட்சியின் மா.செ.வான குமரகுரு. இவர் 2001-இல் திருநாவலூர் தொகுதி எம்.எல்.ஏ. அடுத்து தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு 2011- இல் உளுந்தூர்பேட்டையில் எம். எல்.ஏ.வாக வெற்றிபெற் றார். அடுத்து 2016-இல் மீண்டும் எம்.எல்.ஏ. தற்போது நான்காவது முறையாக எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்று தீவிரம்காட்டி, தோல்வியைச் சந்தித்துள்ளார். இதற்குக் காரணம், தி.மு.க. வேட்பாளர் மணிகண்ணன். இவர் 96-ஆம் ஆண்டு திருநாவ லூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவர். அப்போது முதல் மக்களிடமும் கட்சி யினரிடமும் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்தார். அப்படிப் பட்டவரை தி.மு.க. தலைமை இப்போதும் களமிறக்கியது. அசுரபலம் கொண்ட குமரகுருவை மணிகண்ணனால் வீழ்த்த முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். ஆனால் தொகுதி வாக்காளர்கள் பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும் என்ற நிலையை மாற்றி, நாங்கள் மனம் வைத்தால்தான் யாராக இருந்தாலும் வெற்றிபெற முடியும் என்று, மணிகண் ணனை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர்
இங்கு தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பிரபாகரன். இவர் கடந்த 2011-இல் இதே தொகுதியில் போட்டியிட்டு அ.தி.மு.க. தமிழ்ச்செல்வனிடம் தோல்வி கண்ட வர். 2011-2016- இல் இரண்டு தேர்தல்களிலும் அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற தமிழ்ச்செல்வன், இந்தமுறை மீண்டும் மூன்றாவது முறையாக எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று தன் னம்பிக்கையுடன் களமிறங்கினார். கொடுக்க வேண்டியதையும் அள்ளிக் கொடுத்தார். அப்படி யிருந்தும் இவர் தோல்வியைச் சந்திக்கக் காரணம், கடந்த சில ஆண்டுகளாக இவர் பல்வேறு சர்ச்சை களில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டதால்தானாம். இது தி.மு.க. வேட்பாளர் பிரபாகரனுக்கு சாதக மாக அமைந்தது. மேலும் இவருக்காக கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியதால் பிரபாகரன் உற்சாகமாகக் கரையேறி இருக்கிறார்.
குன்னம்
இங்கு 2016-இல் அ.தி.மு.க. சார்பில் மா.செ.வான ராமச்சந்திரன் போட்டி யிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதிரடி அரசியல்வாதியான ராமச்சந்திரன், உடல்நிலை சரியில்லாத நிலை யிலும், தொகுதி நலப்பணிகளுக்கு சொந்த பணத்தை அள்ளிக் கொடுத்தும் தனது செல் வாக்கை நிலை நிறுத்தி யிருந்தார். அதை நம்பி இந்த முறையும் அவர் களமிறங் கினார். இவரை எதிர்க்க தொகுதியில் தி.முக.வுக்கு பலமான வேட்பாளர் இல்லை என்று அ.தி.மு.க. தரப்பு கேலி பேசிய நிலையில், தி.மு.க.வோ அரியலூர் மா.செ.வான சிவசங்கரை குன்னத்தில் களமிறக்கியது. இதை யறிந்த உடனேயே அ.தி.மு.க. தரப்பு அப்செட் ஆனது. காரணம் சிவசங்கர் 2011-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்று, மக்கள் நலப்பணி களால் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றிருந்தார். அதுவே அவரது வெற்றிக்கு பாதை அமைத்துத் தந்துவிட்டது. அவர் இப்போது அமைச்சராகவும் ஆக அவரது மக்கள் செல்வாக்கே உதவியிருக்கிறது.
அரியலூர்
அ.தி.மு.க. சார்பில் அரசு கொறடாவாக இருந்த தாமரை ராஜேந்திரன் மீண்டும் களமிறங்கியபோதும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க. வேட்பாளரான சின்னப் பாவிடம் தோல்வியைச் சந்தித்துள்ளார். இரு வரும் ஒரே உடையார் இனத்தைச் சேர்ந்தவர்கள். எப்படியும் தனது பண பலம், படை பலம் மூலம் வாக்காளர்களை வளைத்துவிட முடியும் என்று தாமரை போட்ட கணக்கு தவறான விடையைத் தர, அவர் தோல்வியடைந்துள்ளார். காரணம், ராஜேந்திரன் தொகுதிக்கு பல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், கட்சிக்காரர்களின் பிரச்சினையைத், தான் கவனிக்காமல்.. தனது சகோதரி மகன் பிரேம்குமாரையே கைகாட்டிவிடுவாராம். அதனால் பிரேம்குமார் ஆக்டிங் எம்.எல்.ஏ.போல் செயல்பட்டாராம்.
இது கட்சியினர் மத்தியிலும் தொகுதி மக்களிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது என்கிறார்கள் பலரும்.
ம.தி.மு.க. வேட்பாளர் வழக்கறிஞர் சின்னப்பா, தி.மு.க. சார்பில் 1991-ல் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். அதன்பிறகு ம.தி. மு.க. சார்பில் போட்டியிட்டுள்ளார். இவர் மீது தொகுதி மக்களுக்கு அனு தாபம் இருந்தது.
மேலும் வழக்கறிஞர் தொழில் மூலம் தொகுதி முழுக்க பிரபலமானவர். அதோடு கூட்டணி பலமும் சேர்ந்து, இவரை வெற்றிபெற வைத்துவிட்டது என்று ம.தி.மு.க.வினரே சொல்கிறார்கள்.
ஜெயங்கொண்டம்
இங்கு தி.மு.க. சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. கா.சொ. கணேசனின் மகனும் தா.பழுர் ஒ.செ.வுமான கண்ணன் வெற்றி பெற்றுள்ளார். எளிமையான மனிதர். அதேபோல் அவரது அப்பாவின் செல்வாக்கும் இவருக்குப் பெரிதும் கை கொடுத்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் பிரபல வழக்கறிஞர் பாலு களமிறக்கப் பட்டார். பா.ம.க.வின் பலம் பொருந்திய தொகுதியான இங்கு, குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது பாலு வெற்றிபெறுவார் என்று பலரும் சொல்லிவந்த நிலையில்... கண்ணன் வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க.வினரும் சரியாக பா.ம.க.வுக்கு ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள்.
தொகுதிகளின் இப்படிப்பட்ட தட்பவெப் பம்தான் வெற்றி, தோல்வியை நிர்ணயித்திருக்கிறது.