அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் ஜனவரி 9, 2021 அன்று சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூடியது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்
• முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, முதல்வரும் துணை முதல்வரும் அ.தி.மு.க.வை ராம- லட்சுமணர்போல பாதுகாத்து வருவதாக சான்றிதழ் வழங்கினார்.
• முதல்வர் வேட்பாளரை தீர்மானிப்போம் என்ற பா.ஜ.க.வுக்கு பதிலடியாக, கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.- தி.மு.க.வுக்குத்தான் போட்டி. தேசியக் கட்சிகள் பொருட்டே இல்லை என நாசூக்காக விமர்சித்தார்.
• பெயர் குறிப்பிடாமல் சசிகலாவைப் பற்றி, அவர் வெளியே வந்தாலும் அவருக்கே ஆயிரம் பிரச்சினைகள் என்று சொல்லி அ.தி.மு.க.வில் சசிகலாவுக்கு இடமில்லையென மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
• இக்கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்ததை பொதுக்குழு ஏற்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
• வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை உருவாக்கவும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டினை மேற்கொள்ளவும் தேர்தல் வியூகத்தை முடிவுசெய்யுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டது.
• ஒற்றைத் தலைமை குறித்து கட்சியில் சலசலப்பு எழுந்த நிலையில், வழிகாட்டுதல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 11 பேர் கொண்ட அ.தி.மு.க. வழிகாட்டுதல் குழுவுக்கு இந்தப் பொதுக்குழுவில் ஒப்புதலளிக்கப் பட்டது.
• இலங்கையில் மாகாண கவுன்சில் முறையை மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கைவிடுத்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
• அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்தும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
• மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தைக் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நீட் விலக்கு குறித்து என்ன செய்யப்போகிறார்கள் என்பது எதுவும் சொல்லப்படவில்லை.
• எடப்பாடியின் ராசி எண்ணை மனதில் வைத்தே பதினாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டதாக தொண்டர்கள் உற்சாக மாகப் பேசிக்கொண்டதைக் காணமுடிந்தது.
• பொதுக்குழுவில் தீர்மானித்தபடி அ.தி. மு.க.வின் கூட்டணியிலுள்ள தேசியக் கட்சியான பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் குறித்து இனி பேச்சைச் சுருக்கிக் கொள்ளுமா, விடுதலையாகி வரும் சசிகலாவின் செல்வாக்கு அ.தி.மு.க.வில் எந்த அளவுக்கு இருக்கும். பொதுக்குழுவில் முதல்வர் வேட்பாளராக எடப் பாடியை அங்கீகரித்த ஓ.பி.எஸ், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வேண்டிய தொகுதிகளை நினைத்தபடி கேட்டுப் பெறுவாரா… அப்படி கேட்டது கிடைக்காதபட்சத்தில் என்ன நடக்கும்?…
என்பதையெல்லாம் அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
-க.சுப்பிரமணியன்