தேர்தல் தேதியை அறிவிக்கப்போகிறார்கள் என்று டெல்லியில் இருந்து தகவல் வந்த உடன், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே முதல்வர் எடப்பாடி 110 விதியின் கீழ் அவசர அவசரமாக பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் "கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 6 சவரன் வரையிலான நகைகளுக்குப் பெறப்பட்ட கடனும் தள்ளுபடி' என்பது மிகவும் கவர்ச்சிகரமான அறிவிப்பாகும்.

f

இதை அறித்த அவர் ""கிராமப்புற ஏழை எளிய மக்கள், சிறு குறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என அனைவரும் இதன் மூலம் பயனடைவார்கள்'' என்று தனது அந்த அறிவிப்பைத் தானே சிலாகித்துக்கொண்டார். இதேபோல் "கூட்டுறவு கடன் தள்ளுபடி', "சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன் தள்ளுபடி' என அவர் அறிவித்த அறிவிப்புகள், உண்மையிலேயே உரியவர்களுக்கு உரிய பயனைத் தருகிறதா?

Advertisment

இந்தக் கேள்வியோடு கிராமப்புற ஏழை எளிய மக்களையும் விவசாயிகளையும் சந்தித்தோம்.

f

திருவாரூரில் எடப்பாடிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசிய தஞ்சை மாவட்ட விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான சுகுமாரன் நம்மிடம், ""கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளோ மற்ற அரசியல் கட்சியினரோ பயனடையா வண்ணம் இத்தனை நாள் அங்கே தடையாக இருந்தவர்கள் ஆளும் கட்சியினர்தான். ஏனென்றால், அவர்கள்தான் தலைவர்களாகவும் இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் கருணை இல்லாமல் கடன் வாங்கிவிட முடியாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நகை கடனாகவும் விவசாயக் கடனாகவும் பெற்றவர்கள் பலரும் அ.தி.மு.க.வினரும், அவர்களை சார்ந்தவர்களும்தான். ஒரு சொசைட்டியில் ஒன்றரை கோடி ரூபாய் வரைக்கும் அவர்கள்தரப்பு கடன் வாங்கி இருக்கிறது. உண்மையான விவசாயிகள் கடன் கேட்டபோதெல்லாம், கொடுக்காமல் இழுத்தடித்தார்கள்.

Advertisment

அத்தி பூத்தாற்போல் ஒரு சிலருக்குக் கொடுத்திருந்தாலும், அவர்கள் ஆளும்கட்சியினருக்கு நெருக்கமான பெரிய விவசாயி களாகத்தான் இருப்பார்கள். அதனால், எடப்பாடி அரசின் இந்தத் தள்ளுபடி அறிவிப்பின் மூலம் பயனடைகிறவர்கள் முழுக்க முழுக்க அவர்கள் தரப்பினர்தான். உண்மையான விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பால் ஒரு பைசாகூட லாபமில்லை. விவசாயிகளான நாங்கள் ஏமாற்றப்பட்டி ருக்கிறோம்'' என்றார் ஆதங்கமாய்.

மற்றொரு விவசாய சங்கப் பிரமுகரான கீழ்வேளூர் காவிரி தனபாலனோ, ""சிறு குறு விவசாயிகளுக்கும், வேளாண்மையை மட்டுமே நம்பி இருக்கிறவர்களுக்கும் இந்த அரசின் அறிவிப்பு களால் எந்தவிதப் பலனும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவு சங்கத் தலைவர்களாக இருந்தவர்களும், இப்ப இருப்பவர்களும் அ.தி.மு.க.காரங்கதான். கடன் தள்ளுபடி பயனாளிகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிடும் தைரியம் உண்டா எடப்பாடி அரசுக்கு?

திட்டமிட்டே இந்த மோசடி நடத்தப் பட்டிருக்கிறது. தங்கள் தரப்புக்கு மட்டுமே கடன் கொடுத்து, அதைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். அதிலும் தமிழகத்திலேயே அதிகமாக எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்துக்கு மட்டும் 1600 கோடி ரூபாயைக் கடனா கொடுத்திருக்காங்க. இரண்டாவதாக ஈரோடு மண்டலத்திற்கும் கணிசமாகக் கொடுத்திருக்காங்க. ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இரண்டுவேளை உணவை உற்பத்தி செய்து கொடுக்கின்ற விவசாயிகளின் டெல்டா மண்டலத்திற்கு வெறும் 625 கோடி மட்டுமே கொடுத்திருக்காங்க. அதிலும் அவங்க ஆளுங்களுக்கே திட்டமிட்டுக் கடனைக் கொடுத்து, இப்ப அதையெல்லாம் தள்ளுபடி செஞ்சிருக்காங்க.

கூட்டுறவு வங்கிகளில் குறுகிய கால கடன், மத்திய கால கடன், நீண்டகால கடன், கெடுமாற்று கடன்னு நான்கு வகை உண்டு. அதாவது குறுகிய கால கடனை உரிய காலத்தில் செலுத்த முடியவில்லைன்னா, நீட்டிப்பு செய்து மத்தியகாலக் கடனாக மாத்துவாங்க. மத்திய காலக் கடனை நீட்டிப்பு செய்து நீண்டகாலக் கடனாக மாத்துவாங்க. நீண்டகாலக் கடனை கெடுமாற்றுக் கடனா மாத்துவாங்க. இப்படி சுயஉதவிக் குழுக்களின் கடனும், விவசாயப் பெருங்குடி மக்கள் வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படலை. உண்மையான நிலைமை என்னன்னா, அப்பாவி விவசாயப் பெண்கள் வங்கியில் கடன் வாங்க முடியாததால், இப்ப மைக்ரோ ஃபைனான்சில் சிக்கி சீரழிஞ்சிக்கிட்டிருக்காங்க. ஏதேதோ கடன் தள்ளு படின்னு அறிவித்த இந்த அரசு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2017-18 கஜா புயல் காரணமாக ஒத்திவைத்த கடனை, இப்பவரை தள்ளுபடி செய்ய முன்வரலை. அந்தப் பட்டியல்ல உண்மையான விவசாயிகள் அதிகமா இருக்காங்க. எடப்பாடி அறிவிப்பு எல்லாமே நாடகம்தான்'' என்றார் கோபமாக.

floan

குறுவிவசாயியான சேகர், ""கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட விவசாய கடன் 2,100 கோடி ரூபாயை ஏற்கனவே தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்னு கூறிவிட்டு ஆளுங்கட்சியினரை மட்டுமே பயனடைய வச்சிட்டார் எடப்பாடி. தற்போது ஓட்டுக்காக நகைக்கடன் தள்ளுபடிங்கிற ஒரு மாயையை மக்கள் மத்தியில் அவர் உருவாக்கி விட்டிருக்கிறார். சாமானியனால் கூட்டுறவு வங்கிகளில் நகையைக்கூட அவ்வளவு எளிதாக அடமானம் வைத்துவிட முடியாது. கூட்டுறவு வங்கிகளுக்கும், உள்ளுர் அடகுக் கடைக்காரர் களுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும் இடையே மிகப்பெரிய சீக்ரெட் கூட்டணி உண்டு. அதாவது சாதாரண விவசாயி, தன் நகைகளைக் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கச் சென்றால், அவர்கள் பணம் இல்லை, இரண்டு நாளாகும், நான்கு நாளாகும்னு அலைக்கழிப்பாங்க. இங்க அவதிப்படுறதவிட, வட்டிக்கடையில நகையை வச்சிட்டு வேலைய பாருங்கன்னு தந்திரமா ரூட்டையும் சொல்லுவாங்க. வேறுவழியில்லாமல் தனியாரிடம் அதிக வட்டிக்கு நகையை வைத்து விட்டு சாகுபடி செய்வார்கள் விவசாயிகள் ஆனால் அதே நகையை தனியார் வட்டிக்காரர்கள் 10 நிமிடம் உட்கார்ந்திருக்கச் சொல்லி விட்டு, அதே கூட்டுறவு வங்கிகளில் அந்த நகையை அடமானம் வைத்து, அந்த தொகையைக் கொண்டு வந்து, கொடுத்துவிடுவார்கள். அதே போல நகையை மீட்க வரும்போதும், விவசாயிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, நகையை நாளைக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்னு சொல்லிவிட்டு, அவங்கப் பணத்துலயே கூட்டுறவு வங்கியில வச்சிருக்கும் நகையை மீட்டுக் கொண்டுவந்து, அவங்ககிட்ட கொடுப்பாங்க. அரசு அறிவிப்பால் நகையை கூட்டுறவு வங்கிகளில் வைத்த கந்துவட்டிக்காரர்களுக்கும் அடகு கடைக்காரர்களுக்கும் மட்டுமே கடன் தள்ளுபடி ஆகுது.

அதோடு சுயஉதவிக் குழு என்பதை கலைஞர் ஆட்சி காலத்தில் இருந்த போது கொண்டுவந்து வங்கிகள் மூலம் கடன் வழங்க செய்தார், ஆனால் தற்போது முற்றிலும் மாறுபட்டு குழு என்கிற பெயரில் மைக்ரோ பைனான்ஸ்காரர்களிடம் சிக்கி கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். 10 பேர் கொண்ட மகளிர் குழுவில் ஒருவர் கட்டவில்லை என்றாலும் 10 பேரையும் நிற்க வைத்து கேள்வி கேட்கும் அநாகரிகமான அடாவடித்தனம் இன்றைக்கும் கிராமப்புறங்களில் தினசரி நடந்து வருகிறது. இதனால் பல குடும்பங்களில் விவாகரத்து வரை பிரச்சினை சென்றிருக்கிறது. தற்கொலைகளும் நடந்திருக்கிறது. எடப்பாடி அவசர அவசரமாக அறிவித்திருப்பது மாய அறிவிப்பு'' என்கிறார் ஆத்திரம் குறையாதவராக.

கனத்த யோசனையோடு பேச ஆரம்பித்த திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி வீரமணி, ""கூட்டுறவு வங்கிக்கடன் அ.தி.மு.க.வினர்களுக்கு மட்டும்தான் கிடைத்தது. பெரும்பாலான விவசாயிகள் கந்துவட்டிக்கும், தேசிய வங்கிகளிலும், அதன் சார்பு வங்கிகளிலும் கடன் வாங்குகிறார்கள் அதைத் தள்ளுபடி செய்தால்தான் விவசாயிகள் பயனடைவார்கள். இந்த லட்சணத்தில் பல கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பு வரவில்லைன்னு சொல்லிவிட்டு, உங்க பெயரை சேர்க்கணும்னா ஒரு பவுனுக்கு 2000 ரூபாய் கமிஷன் கொடுக்கணும். அப்பதான் உங்க பேரை தள்ளுபடிப் பட்டியலில் சேர்க்க முடியும்னு சொல் றாங்களாம்''’’என்றார் வேதனையாய்.

கும்பகோணத்தைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம், ""இந்தக் கடன் தள்ளுபடியால் அரசுக்கு பெரும் நஷ்டமா?'' எனக் கேட்டோம், ""அதெல்லாம் இல்லை. 12,110 கடன் தள்ளுபடிக்கு ஐயாயிரம் கோடி ரூபாய் மட்டும் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்காங்க. அதற்கு ஆண்டுக்கு வட்டியாக ஆயிரம் கோடிக்கு நெருங்கிவந்துவிடும். நான்கு, ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த கடன் அடைந்து விடும். அதோடு கூட்டுறவு வங்கி நகைக்கடன் மிக மிக சொற்பத் தொகை. அது ஒரு பெரிய தொகையாகவோ, பாரமாகவோ அரசுக்கு இருக்காது'' என்கிறார்.

"வெற்று அறிவிப்பால் அரசுக்கு பாரமும் இல்லை, எங்களுக்கு பலனும் இல்லை' என்கிறார்கள் விவசாயிகள்.