முதல்வர் வேட்பாளர் அவர்தான், ஆனா எனக்கும் அதில் பங்கு இருக்கிறது என்பதை விளம்பரங்கள் மூலம் வெளிப்படுத்தி, தனி ஆவர்த்தனம் செய்கிறார் ஓ.பி.எஸ்.
இ.பி.எஸ்.ஸின் பிரச்சாரங்களிலும் பத்திரிகை, டி.வி. விளம்பரங்களிலும் தன்னை முன்னிறுத்துவதில்லை என்பதால் பத்திரிகைகளில் ஓ.பி.எஸ்.ஸுக்கென தனி விளம்பரம் வந்தது. தற்போது டி.வி. விளம்பரங்களிலும் இ.பி.எஸ். மட்டுமே இருக்கிறார் என்பதால், ஓ.பி.எஸ். தயாரித்துள்ள தனக்கான வீடியோ அவரது மாவட்டத்தில் வாட்ஸ்ஆப்-பேஸ்புக் மூலம் வைரலாகி வருகிறது.
"தாய் மண்ணை உன்னை வணங்குகிறேன்... தமிழ் மக்களே உங்களை வணங்குகிறேன்' என்கிற அந்த விளம்பரத்தை இன்னும் சில நாட்களில் மீடியாக்களில் விளம்பரமாக கொடுக்க இருக்கிறார்களாம். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். விளம்பரம் யுத்தம் கட்சிக்காரர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் பலரிடம் கேட்டபோது, ""எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சிக்கு திண்டுக்கல் மாவட்டம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அப்புறம் 30 வருடம் கட்சியைக் கட்டிக்காத்தார் ஜெ. தனக்குப் பிறகு 100 ஆண்டுகள் அ.தி.மு.க. இருக்கும் என்றார். அந்த அடிப்படையில்தான் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக எல்லாரும் சேர்ந்து அறிவித் திருக்கிறார்கள். ஆனால், எல்லா விளம்பரத் திலும் எடப்பாடி தன்னை மட்டும் முன்னிலைப் படுத்திக்கிறார். துணை முதல்வரையோ மற்ற அமைச்சர்களையோ காட்டுவதில்லை. இவர் என்ன எம்.ஜி.ஆரா? அம்மா ஜெயலலிதாவா? புரட்சித் தலைவரும் அம்மாவும் உருவாக்கிய இந்த அ.தி.மு.க. கட்சியானது தமிழகத்திலுள்ள கடைக்கோடி தொண்டன் வரைக்கும் சொந்தமானது. அதை இ.பி.எஸ். நினைத்து துணை முதல்வர் உள்பட அமைச்சர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்டுக்கொண்டு விளம்பரங்களிலும் அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டுமே தவிர, சர்வாதிகாரப் போக்கில் செயல்படுவதை தவிர்த்துகொள்ள வேண்டும்'' என்கிறார்கள்.
""ஆரம்பத்திலிருந்தே எடப்பாடியை ஏற்பதில் தயக்கம்காட்டி வருகிறார் ஓ.பன்னீர். தர்மயுத்தம் நடத்தி, நீதி கேட்ட தனக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதங்கள் நிறைவேற்றப்படவில்லை என்கிற கோபமும் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் இப்படி விளம்பர யுத்தத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்'' என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.
"ஆளும்கட்சியில் தலைவிரித்தாடும் இந்த உள்கட்சி கோஷ்டி பூசலை சரி செய்யாவிட்டால், தேர்தல் நேரத்தில் பெரும் தலைவலிதான்' என்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர்கள்.
-சக்தி