அ.தி.மு.க. பா.ஜ.விற்கிடையே நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையில் அமித்ஷா எடுத்த அவதாரத்தைப் பார்த்து எடப்பாடி அதிர்ந்துபோனார்.
சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும் ஓ.பி.எஸ். முதல்வராகவும் இருந்த காலகட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக அனைத்து அசைவுகளையும் மேற் கொண்டது அமித்ஷாதான்.
ரெய்டுக்கு மேல் ரெய்டு, பினாமி சட்டம், வருமான வரித்துறை வழக்குகள், அமலாக்கத்துறை பாய்ச்சல் என சசிகலாவை நிர்மூலமாக்கியது பா.ஜ.க.தான்.
போதாக்குறைக்கு தினகரன் மேல் இரட்டை இலையைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு, ஓ.பி.எஸ்.ஸின் சசி எதிர்ப்பு தர்மயுத்தம், சசிகலா, அடாவடி தினகரனை அ.தி.மு.க.விலிருந்து நீக்குதல் என சகலத்தையும் செய்த அமித்ஷாவையும் பா.ஜ.க.வையும் திருப்திப்படுத்த சசிகலா எதிர்ப்பு கோஷத்துடன் அ.தி.மு.க.வை ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும் வழிநடத்தி வந்தார்கள்.
ஜெயக்குமார், கே.பி.முனு சாமி, சி.வி.சண் முகம் என ஏகப் பட்ட சசிகலா எதிர்ப்பாளர்கள் எடப்பாடியை நம்பி சசிகலாவை எதிர்த்தார்கள். ஆனால் இதற்கெல்லாம் நேர் எதிராக அமித்ஷாவும் கிஷன் ரெட்டியும் பி.எல்.சந்தோஷும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எடப்பாடியிடமும், ஓ.பி.எஸ்.ஸிடமும் பொங்கித் தீர்த்தார்கள்.
""நாங்கள் சசிகலாவை சேர்க்க மாட்டோம். இதை பிரதமரிடமே தெளிவுபடுத்திவிட்டோம்'' என சொன்ன எடப்பாடியை நேரடியாக முறைத்த அமித்ஷா, “"" பிரதமர் என்னைவிட உங்களுக்கு நெருக்கமானவரா?''’என திருப்பிக் கேட்டிருக்கிறார்.
""நான் சசிகலாவிடம் நேரடியாகப் பேசுகிறேன். சசிகலா நான் சொல்வதை கேட்கத் தயாராக இருக்கிறார். நீங்கள் சசிகலாவை அ.தி.மு.க.விற்குள் சேர்க்க வேண்டும். அதற்கு என்ன வழி என கண்டுபிடியுங்கள்''’’என அமித்ஷா பேசியதைக் கேட்டு எடப்பாடி அதிர்ந்துபோய் விட்டார்.
""அதெல்லாம் முடியாது'' என்ற எடப்பாடியிடம், ""நீங்கள் சசிகலாவை சேர்ப்பதை கௌரவக் குறைச்சலாகப் பார்க்கிறீர்கள். தவறான இந்த கௌரவம் உங்களை தோல்விக்குள்ளாக்கி விடும். நாளை நீங்கள் தோற்றால் அதற்கு உங்களது கௌரவம்தான் காரணமாக இருக்கும்''’என்றார் அமித்ஷா.
அதற்குப் பதிலளித்த எடப்பாடி, ""பா.ஜ.க., சசிகலாவை எதிர்த்ததால்தான் சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட நான் சசிகலாவை எதிர்க்கத் தொடங்கினேன். அத்துடன் சசிகலா எதிர்ப் பாளராக பா.ஜ.க. ஆதரவுடன் இயங்கிவந்த ஓ.பி.எஸ்.ஸை அவர் எனது ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர் என்பதை மறந்து நான் சேர்த்துக்கொண்டேன். சசிகலா இல்லாமல் நானும் ஓ.பி.எஸ்.ஸும் கட்சியை வழிநடத்தி நீண்டதூரம் வந்துவிட்டோம். மறுபடியும் சசிகலாவை நீக்கச் சொன்ன நீங்களே அவரை சேர்க்கச் சொல்கிறீர்கள். இது என்ன நியாயம்?''’என எடப்பாடி கேட்டார்.
பக்கத்திலிருந்த பன்னீர் வேறொரு கணக்கைச் சொன்னார். ""சசிகலா இல்லையென்றால் முக்குலத்தோர் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு பெருமளவு கிடைக்காது. தென் மாவட்டங்களில் போட்டிபோடும் எங்களைப் போன்றோர் தோல்வியடைய நேரிடும். எடப்பாடி போன்று கொங்குமண்டலத்தில் போட்டியிடுபவர்கள், வெற்றிபெறுவார்கள். இது எனது அரசியல் எதிர்காலத்தைக் கெடுத்துவிடும்''’என பன்னீர் வருத்தப்பட்டார்.
அதற்குப் பதிலளித்த அமித்ஷா, ""நான் உங்களை, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக்கச் சொல்லவில்லை. அ.ம.மு.க.வுடன் ஒரு தேர்தல் உடன்படிக்கை வைத்துக்கொள்ளத் தான் சொல்கிறேன். நீங்கள் நேரடியாக தேர்தல் உடன்படிக்கை வைத்துக்கொள்ள வேண்டாம். அ.ம.மு.க.வும் பா.ஜ.க.வும் தேர்தல் உடன்படிக்கை செய்துகொள்ளும். அ.ம.மு.க.வுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய தொகுதிகளை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்''’என தெளிவாகக் கூறினார்.
அந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறுநாளும் தனது பயணத்தை நீட்டித்துவிட்டு, தங்கியிருந்த அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தார். அப்பொழுது, அவர் “""சசிகலாவால் 8 முதல் 16 சதவிகிதம் வரை சில தொகுதிகளில் ஓட்டு வாங்க முடியும். நாங்கள் தினகரனை எதிர்த்தவர்கள் என்பதால் எங்களுக்கு தினகரனின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும். அ.தி.மு.க. கூட்டணிக்கு சசிகலா ஏற்படுத்தும் சேதாரத்தை பல முக்குலத்தோர் அமைப்புகளின் ஆதரவைப் பெற்று சரிசெய்ய முடியும். மறுபடியும் சசிகலாவின் பிடிக்குள் அ.தி.மு.க.வை சிக்கவைக்க நான் விரும்பவில்லை'' ’என்றார்.
அதற்குப் பதிலளித்த அமித்ஷாவும் கிஷன் ரெட்டியும், “""இதெல்லாம் உங்கள் மாநில உளவுத்துறை போட்டுக் கொடுக்கும் கணக்கு. கள நிலவரம் வேறு. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால் சீர்மரபினர் அ.தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கிறார்கள். அவர்களில் முக்குலத்தோரும் இடம் பெறுகிறார்கள். வடக்கில் பா.ம.க., கொங்குமண்டலத்தில் சொந்த செல்வாக்கு என அ.தி.மு.க. பலம் பெற்றிருப்பதாக கணக்குப் போடுகிறார். தென்மாவட்டங்களில் 80 தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க. பலவீனமாகவே இருக்கிறது''’என விளக்கினார்கள். ஆனாலும் எடப்பாடி இறங்கி வரவில்லை.
அவர் சசிகலா வேண்டாம் என்பதில் உறுதியாக நின்றார். சசிகலா வேண்டும் என்பதில் பன்னீர் உறுதியாக நின்றார். இந்தப் பிரச்சினை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே சென்றதால், “அ.தி.மு.க. கூட்டணி மீதான நம்பிக்கை குறைவதாக, தோல்வி அறிகுறிகளைச் சுட்டிக்காட்டிச் சொல்லிவிட்டு அமித்ஷா டெல்லிக்கு கிளம்பினார்.
அடுத்தகட்டமாக பா.ஜ.க.விற்கு, கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியையும் அவர் இடம்பெறும் 6 சட்டமன்றத் தொகுதி களைக் கொடுக்கவேண்டும் என பேச்சு திசை மாறியது. ""அமித்ஷாவிற்குப் பதில் கிஷன் ரெட்டி இனி பேசுவார்''’என பா.ஜ.க. அறிவித்தது.
இதற்கிடையே தனக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் மூலமாக அமித்ஷாவிடம் நேரடியாகப் பேசிவந்த சசிகலாவிடம் பா.ஜ.க. தரப்பு நடந்தவற்றை விளக்கியது. பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் சசிகலாவின் ஆதரவை கேட்டுக்கொண்டது. அதற்கு பதிலளித்த சசிகலா, “""டி.டி.வி. தினகரன் பேசுவதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை''’என பா.ஜ.க. தரப்பிடம் விளக்கினார்.
சசிகலாவை பொறுத்தவரை ஒரு தேர்தல் தோல்விக்குப் பிறகு அ.தி.மு.க.வை. முழுமையாக தன்னிடம் பா.ஜ.க. ஒப்படைக்கும் என்கிற நம்பிக்கையில் அமைதி காக்கிறார்''’என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.
அமித்ஷா வலியுறுத்தியும் எடப்பாடி பிடிவாதமாக இருந்ததும், அ.ம.மு.க. தனித்து கள மிறங்கும் என தினகரன் பிடிவாதம் காட்டியதும் சசிகலாவுக்கு அதிர்ச்சி யையும் சோர்வையும் ஏற்படுத்திவிட்டது. அதனால், கடந்த இதழிலேயே நாம் சொன்னதுபோல அரசியல் துறவற அறிவிப்பை மார்ச் 3ந் தேதி இரவு அவர் வெளியிட்டார். பதவிக்கு ஆசைப்பட்டதில்லை என்றும், ஜெயலலிதா ஆட்சி தொடர விரும்புவதாகவும், தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாதென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் கள நிலவரம் சசிகலாவுக்கும் தெரிய வருவதால், அமித்ஷா சொன்னதுபோல அ.தி.மு.க.வின் வெற்றி பாதிக்கப்பட்டால் அதற்கு, தான் காரணமில்லை என்று எஸ்கேப் ஆவதுபோல, போதும்டா சாமி என கும்பிடு போட்டிருக்கிறார் சசிகலா. அவரது இந்த அறிவிப்பு அனுதாபமாக மாறினால், ரீ-என்ட்ரி இருக்கலாம். அல்லது, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அ.தி.மு.க. தன் பக்கம் வரும் என்ற கணக்காகவும் இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.