முன்னேற்றம் என்று சொல்லி பல திட்டங்களை மக்களின் தலையில் கட்டுகின்றனர் ஆட்சியாளர்கள். திட்டத்துக்காக தங்கள் வாழிடம், தொழில், சுற்றுச்சூழல் கேடு என விலை கொடுப்பது மக்களாக இருக்க, அந்தத் திட்டத்தின் பலனை மட்டும் சம்பந்தப் பட்ட நிறுவனங்களும், ஆட்சியாளர்களும் அறுவடை செய்துகொண்டு போகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப் பள்ளி துறைமுக விரிவாக்கம் என்ற பெயரில் அதானி நிறுவனத்துக்காக ஒதுக்கப்பட்ட துறைமுக விரிவாக்கத்தால் "பதினாறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேரடியாகவும், நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படு கிறது' என்ற அச்சத்தில் மீனவ கிராம மக்கள் உள்ளனர்.
காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கப் பணிகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கடல்வள சுற்றுச்சூழல் ஆர்வலர் சரவணனிடம் பேசினோம், ""கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் டிட்கோ மற்றும் எல்.அண்ட்.டி. நிறுவனம் இணைந்து, காட்டுப்பள்ளி மீனவ கிராமத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி, அதில் எம்.எஃப்.எஃப்.கே. நிறுவனம், எல்.அண்ட்.டி. கப்பல் கட்டும் நிறுவனம், எல் அண்டு டி துறைமுகம் என மூன்று நிறுவனங்கள் கடந்த 2009 முதல் செயல் படத் துவங்கின
கடந்த 2018-ஆம் ஆண்டு எல்.அண்ட்.டி துறைமுகம் அதானி குழுமத்திற்குக் கை மாறியது. ஆண்டுக்கு 24.65 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு களைக் கையாண்டு வந்த இந்த துறை முகத்தில் அதானி குழுமம் விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் மேலும் சுமார் ஆறாயிரத்து பதினோரு ஏக்கர் நிலத்துடன் சேர்ந்த கடல்பரப்பையும் கையகப்படுத்தி அதில் ஆண்டுக்கு முன்னூற்று அறுபது மில்லியன் மெட்ரிக் டன் சரக்கைக் கையாளும் திறன்கொண்ட துறைமுகம் அமைக்கும் பணிகளைத் துவக்கியுள்ளது. கிட்டதட்ட ஆறு கிலோ மீட்டர் தூரம் கடல் பரப்பு கையகப்படுத்தப்பட உள்ளது,
முகத்துவாரம், சுடுகாட்டையொட்டி வடக்குப் பகுதி 1.22 கிலோமீட்டர் கடல் பரப்பில் கருங்கல் தடுப்பும், வடக்கிலிருந்து கிழக்குப் பகுதியில் 9.02 கிலோமீட்டர் தூரம் கருங்கல் தடுப்பும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி 1.86 கிலோமீட்டர் தூரம் கருங்கல் தடுப்பும் அமைத்து, செயற்கைத் துறைமுகம் அமைக்க கடல் பரப்பில் 1967.32 ஏக்கர் பரப்பளவு கடல்நீரை அப்புறப்படுத்தி மண் அடைத்து துறைமுக மேடை அமைக்க வுள்ளனர். அதேபோல துறைமுகத் தேவைக்காக 30 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் பிளாண்ட் அமைக்கப்படவுள்ளது.
இந்தப் பகுதியிலுள்ள இயற்கை கடல் திட்டு, சேற்று மணலில் சிறந்த இயற்கை இறால், உலகப் புகழ்பெற்ற பழவேற்காடு பச்சை நண்டு, கிளிஞ்சல், கரையோர மீன்கள் கிடைக்கும். இந்த துறைமுகப் பணியால் கப்பல் வழித்தடத்திற்காக இந்த மணல்திட்டு பல கிலோமீட்டர் தூரம் அகற்றப்பட்டால் இதை நம்பியுள்ள மக்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும், மேலும் பழவேற்காடு கோரைக்குப்பம், தாங்கல்பெரும்புலம் ஆகிய பகுதி முதலில் மூழ்கும். இதனால் பழவேற்காடு தீவாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
கடல் நீரோட்டம் ஆண்டுக்கு 9 மாதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது இயற்கை மணல்திட்டு உருவாகும். மீதமுள்ள மூன்று மாதம் வடக்கிலிருந்து தெற்குப் பகுதி நோக்கி கடல் நீரோட்டம் செல்லும்போது குறைந்த அளவு மணல்திட்டு உருவாகும். இந்த துறைமுகப்பணி தொடர்ந்தால் இயற்கை கடல் நீரோட்டத்தால் பழவேற்காடு முகத்துவாரம் அடைக்கப்பட்டுவிடும். கடல்நீர் நிலப்பரப்பில் ஊடுருவி நன்னீர் உப்பு நீராகும் பேரபாயம் ஏற்படும்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையில் ஆண்டுக்கு 8 மீட்டர் கடல் அரிப்பு ஏற்படும் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் நாற்பது கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கின்றனர்.
அப்பகுதியைச் சேர்ந்த சமூகஆர்வலர் மகேந்திரன், ""இந்தத் திட்டத்தால் மேலும் குடியிருப்புகளைக் கையகப்படுத்துவ தில்லை என்றாலும் காட்டுப் பள்ளிக்குப்பம், காட்டுப் பள்ளிகிராமம், காலாஞ்சி ஆகிய கிராமங்கள் திட்டவரைவுக்குள் உள்ளதால் மூன்று கிராம மக்கள் வசிக்கும் பகுதி அருகே பெட்ரோலியம், எல்.பி.ஜி. வாயு, திரவ வேதிப்பொருட்கள் மற்ற அபாயகரமான பொருட்களை கையாளும்போது சிறு விபத்து ஏற்பட்டாலோ, வாயுக் கசிவுகள் சரக்கு வாகனங் களால் ஏற்படும் மாசு போன்ற அபாயகரமான வாழ்க்கைக்கு தள்ளப்படுவார்கள்.
அதேபோல இந்தப் பகுதியில் கிளிஞ்சல் களைச் சேகரித்து பல பெண்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள் அவர்களுடைய வாழ்வாதார மும் முற்றிலும் பாதிக்கும். இந்தப் பகுதியிலுள்ள புறம்போக்கு நிலத்தையும் கையகப்படுத்துகிறது அதானி குழுமம். அதை நம்பி நெல், சவுக்கு போன்ற விவசாயம் செய்துவந்தவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது, விவசாய நிலத்தை நம்பியுள்ள கால்நடைகள் உணவுக்கு எங்கே போகும்? மீனவர்களும் மீனவ கிராமத்தார் மட்டுமின்றி அவர்களை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் என சுமார் நாற்ப தாயிரம்பேர் பாதிக்கப்படுவார்கள்''’என்கிறார்.
காட்டுப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் சேதுராமன் வேறொரு யதார்த்தத்தை விளக்கினார், “""ஏற்கனவே வடசென்னை அனல்மின்நிலையம், ஜூவாரி சிமெண்ட் கம்பெனி, காமராஜர் துறைமுகம்னு ஊரையே காலி பண்ணிட்டாங்க. இதனால ஏற்படும் காற்றுமாசால் பல நோய் வருது. 2006-ஆம் வருசம் எல் அண்ட் டி கம்பெனி வரும்போது சுத்துவட்டாரத்துல பத்தாயிரம் பேருக்கு வேலைகிடைக்கும்னு சொன்னாங்க. எங்க ஊராட்சில பலரோட இடம் கையகப்படுத்தப்பட்டதால குடும்பத்துக்கு ஒருத்தருக்கு வேலை தரதா சொன்னாங்க. ஆனா எங்க ஊராட்சியைச் சேர்ந்த 750 குடும்பத்துல 140 பேருக்கு மட்டும்தான் வேலை கொடுத்தாங்க. அவங்களையும் பத்துவருசமா பணிநிரந்தரம் செய்யாம வைச்சிருக்காங்க. அதுக்கு பல போராட்டம் நடத்தியும் பலனில்லை. இப்போ மீதமுள்ள இடத்தையும் கையகப்படுத்தினா எதை நம்பி வாழ்க்கை நடத்துறது'' என்கிறார் அவநம்பிக்கையாய்.
அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் உதயசூரியன், ""மொதல்ல இந்த எல்.அண்ட்.டி வரும்போது இப்பகுதி மக்களுக்கு வேலை தரப்போறதா சொன்ன உறுதிமொழிய நிறுவனமும் காப்பாத்தல. சட்டசபைல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிச்சத அரசாங்கமும் நிறைவேத்தல. இந்தநிலையில, மத்திய- மாநில அரசுகள் சுற்றுச்சூழல் பாதிப்பையோ, இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்தையோ பார்க்காம, வேலைவாய்ப்பு வழங்காம அதானி குழுமத்துக்கு நாங்க வசிக்கிற பகுதியை தாரைவார்த்துக் குடுத்தா எங்க நிலை என்ன ஆகிறது?
இந்த பகுதியில பிறந்தவங்க காலாகாலமாக புறம்போக்கு இடத்துல விவசாயம் செய்தவங்களின் நிலத்தைப் பிடுங்கி அதானிக்குக் கொடுத்துட்டா விவசாயிகளும் அதை நம்பியுள்ள கால்நடைகளும் எங்க போறது? மக்களோட பிரச்சனைகளை யோசிக்காம பேருக்கு கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துறதா சொல்லி சம்பந்தமே இல்லாம 24 கிலோமீட்டர் தள்ளி ஒரு இடத்துல கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துறதா சொல்லிட்டு, மக்கள் எதிர்ப்பு சொல்ல தயாரா இருப்பதை உளவுத்துறை மூலம் தெரிஞ்சுக்கிட்டு ஜனவரி 22-ஆம் தேதி கூட்டத்தை கொரோனா தொற்றை காரணம் காட்டி தள்ளிவைச்சுட்டாங்க. பலமுறை மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவுனு புகார் கொடுத்ததுதான் மிச்சம்''’’ என கொதிக்கிறார்.
சரி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா இந்த அதானி துறைமுகம் குறித்து என்ன தான் விளக்கம் கொடுக்கிறார்னு பார்ப்போம்னு அவரது எண்ணுக்குத் தொடர்புகொண்டால் அவர் நமது அழைப்பையே எடுக்கவில்லை.