மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள்விரோதச் செயல் பாடுகளில் வேளாண் திருத்தச் சட்டங்களும் ஒன்று. இவற்றை எதிர்த்து இந்தியா முழுக்க விவசாயிகள் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். அரியானா, அசாம் மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள், தலைநகர் டெல்லியில் குடும்பத்துடன் முகாமிட்டு இரவுபகலாக அங்கேயே தங்கி, "மோடி அரசே! மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு!'' என ஆறுமாத காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்திய அளவில் விவசாயிகள் அமைப்புகளை ஒருங்கிணைத்து "சம்யுக்த கிசான் மோர்ச்சா' என்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதில் தொழிற்சங்கங்களும் இணைக்கப்பட்டு, தொடர்ச்சியான பல கட்டப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களில், தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராகப் பிரச்சாரங்களிலும் ஈடுபட்டனர்.
சொந்தநாட்டு மக்கள், தலைநகரைப் போராட்டக் களமாக்கி, அரைவருட காலமாக அற வழியில் போராடுவதை, மத்திய பா.ஜ.க. அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதை எதிர்த்து, சர்வதேசச் சமூக நல ஆர்வலர்களும் கண்டித்தபின்னும் பிரதமர் மோடியின் பார்வை விவசாயிகள் மீது திரும்பவே இல்லை.
விவசாயிகளின் இந்த தொடர் போராட்டத்திற்கு, பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், தி.மு.க., உட்பட 22 மாநிலக் கட்சிகள் ஆதரவாக உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த எடப்பாடி அரசோ, இந்தச் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களென்று மத்திய அரசுக்கு ஆதரவாகப் பேசிவந்தது. ஆனால் தி.மு.க., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த சட்டங்களைத் திரும்பப்பெறும்படி வலியுறுத்தினார்கள். தலைநகர் டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவித்தார்கள். இந்த போராட்டக்களத்தில் இதுவரை சுமார் 470 விவசாயிகள் பலியாகியுள்ளனர்.
இந்தச் சூழலில், மே 26-ம் தேதி மோடி பிரதமராகி 7-வது வருடம் தொடங்கும் நாளை பாஜக கொண்டாட இருந்த நிலையில், டெல்லியில் போராட்டம் தொடங்கிய 6-வது மாதமும் இதே நாள் என்பதால், நாடு முழுவதும் கருப்பு தினமாக அனுசரிக்க டெல்லிப் போராட்டக்களத்திலிருந்த விவசாயிகள் அழைப்புக் கொடுத்தனர்.
டெல்லியில் அனைத்து போராட்ட முனைகளிலும் விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி, மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். டெல்லி சிங்கு பார்டரில் திரண்டிருந்த விவசாயிகள், மோடி உருவ பொம்மைக்கு தீ வைத்தனர். இந்தியாவிலுள்ள விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணை அமைப்புகள் சார்பாக அவரவர் வீடுகள், தெருக்களில் கருப்புக்கொடியேந்தி "மக்கள் விரோத மோடி அரசே பதவி விலகு... மக்களின் உயிரைக் காக்கத் தவறிய மோடியே பதவி விலகு... இந்திய மக்களைக் கொல் லாதே... தொழிலாளர், விவசாய விரோதி பா.ஜ.க.வே பதவி விலகு...'' எனக் கண்டன முழக்கமிட்டனர்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நெல்லை, திருச்சி, குமரி, திருவாரூர், ஈரோடு, பவானி, கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை என அனைத்து நகரங்கள், கிராமங்களிலும் இடதுசாரி மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த போராட்டத்தை வீரியமாக நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்கள் வீடுகள், வீதிகள், தோட்டங்களில் கருப்புக்கொடி ஏற்றி, தங்கள் கைகளிலும் கறுப்புக்கொடிகளோடு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லி போராட்டக்களத்திலிருந்து, பஞ்சாப் விவ சாயிகள் சங்க பிரதிநிதி ராஜ்வீந்தர்சிங் கோல்டன் நம்மிடம், "இன்றையநாளை கறுப்புதினமாக அனுசரிக்க இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு கொடுத்தோம், முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்காக ஆதரவு தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக விவசாயிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும் நன்றி. டெல்லியில் 470 விவசாயிகள் இறந்தும்கூட கொரோனா காரணத்தைச் சொல்லி வெளியேற்ற முயன்றனர்.
இந்த அறிவிப்பைக் கேட்டு பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி நோக்கிப் புறப்படத் தயாரானதால் அறிவிப்பை திரும்பப் பெற்றனர். இப்போதும்கூட மோடி அரசு, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது. இப்போது மறுபடி மத்திய அரசுக்கு 7 நாள் காலக்கெடு வைத்திருக்கிறோம். சங்கங்களை அழைத்துப் பேசவில்லை என்றால் போராட்டத்தின் தன்மை மாறும். அதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், "வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து 6-மாத காலமாக உயிரைப் பணயம் வைத்துப் போராடுகிறார்கள். இன்றுவரை அவர்களை மோடி அழைத்துப் பேசாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
ஒட்டுமொத்த விவசாயிகளையும் அவமதித்து போராட்டத்தின் நோக்கங்களை சிதைக்க நினைக்கிறார், கொச்சைப்படுத்துகிறார். உடனடியாக விவசாயிகளை அழைத்து பேச வேண்டும். இந்த சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்து, தென்னிந்தியாவில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியிருப்பதை வரவேற்கிறோம்'' என்றார்.