தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம்' என்று பெரிய பதாகையை கட்டி வைத்துக்கொண்டு தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம் வசூல் செய்தபிறகே ஆடுகளைக் கொடுத்த விவகாரம் புதுக்கோட்டையில் சர்ச்சையாக வெடித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம், எம்.உசிலம்பட்டி ஊராட்சி பொதுமக்களுக்கு கொன்னையூர் சந்தையில் விலையில்லா ஆடுகள் வழங்கப்படுவதாக தேர்வுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு தகவல்கொடுத்த ஊராட்சி நிர்வாகம், "வரும்போது ஒவ்வொரு பயனாளியும் ரூ.2 ஆயிரம் பணம் கொண்டுவரவேண்டும்' என்பதையும் தெளிவாகச் சொல்லியிருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கே பயனாளிகள் கொன்னையூர் சந்தைத் திடலுக்கு வந்தனர். அங்கே ஊராட்சி செயலர் சின்னக்காளை (எ) சேவக்கோன், பணித்தளப் பொறுப்பாளர் முருகேசனும் பயனாளிகள் பட்டியலோடு காத்திருந்தனர். ஒருவர் வரிசையாக பயனாளிகள் பெயரை வாசிக்க, அந்தப் பயனாளி அருகில் பையோடு காத்திருந்த மற்றவரிடம் பணத்தைக் கொடுத்த பிறகு அவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆட்டுக்குட்டிகள் கொடுக்கப்பட்டன. பயனாளிகளிடம் ஊராட்சி செயலர் லஞ்சம் வாங்குவதை வீடியோ எடுப்பதைப் பார்த்தும்கூட அவர்கள் கண்டுகொள்ள வில்லை. காரணம்... "இந்த லஞ்சப்பணத்தில் பங்கு வாங்கும் மேலதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்களைக் காப்பாற்று வார்கள்' என்ற நம்பிக்கை.
இந்த சம்பவம் குறித்து டைஃபி பொன்னமராவதி ஒன்றியப் பொறுப்பாளர் குமார் கூறும்போது... “""தமிழக முதலமைச்சர் லஞ்சம், ஊழலில்லாத ஆட்சி என்று விவாதங்களுக்கு அழைத்துக்கொண்டிருக் கிறார். ஆனால் பொதுமக்கள் அரசின் நலத் திட்டங்களைப் பெறவே லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது. இதுவரை இப்படி வெளிப்படையாக வாங்கிப் பார்த்ததில்லை. விலையில்லா ஆடுகள் வழங்குவதாக பதாகை கட்டிவைத்து விட்டு அதனருகிலேயே இருந்து பணம் வாங்கிய கொடுமையை தோழர்கள் வீடியோ எடுப்பதைப் பார்த்தவர்கள் கொஞ்சம்கூட அசரவில்லை. இவர்கள் வாங்கிய லஞ்சம் யாருக்கெல்லாம் போகிறது என்பதை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். வெளிப்படையாக லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் மற்றும் பணித்தளப் பொறுப்பாளர் மீது துறை சார்ந்த நட வடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுக்கத் தவறினால் டைஃபி சார்பில் பெரிய போராட்டம் நடத்த தயாராகிவருகிறோம்''’என்றார்.
இதுகுறித்து ஊ.ம. தலைவர் பழனிச்சாமியை தொடர்புகொண்டு கேட்டோம்... “""அரசு ரூ.10 ஆயி ரம் மட்டும் ஒதுக்கி யுள்ளது. இந்தப் பணத்தில் 3 ஆடு, ஒரு கடாய் வாங்க முடி யாது. அதனால பய னாளிகள் ரூ.2 ஆயிரம் கொடுத்தால்தான் அரசு சொன்னபடி ஆடுகள் கொடுக்கலாம் என்று ஆட்டு வியாபாரி சொன்னதால கால்நடைத்துறை அலுவலர்கள் பயனாளிகளிடம் கூட்டம்போட்டுப் பேசினார்கள். அதற்கு பயனாளிகளும் சம்மதித்து பணம் கொடுத்தார்கள். ஆனால் ஆடுகள் சிறியதாக இருப்பதாக பலர் விலை குறைக்கச் சொன்னாங்க. வியாபாரி ஒத்துக்கல. பிறகு பயனாளிகள் விருப்பத்திற்கே பணத்தைக் கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்றார்கள். இந்த பணம் ரூ.2 ஆயிரத்தை பிறகு கால்நடைத்துறை அரசிடமிருந்து வாங்கித் தருவதாக பயனாளிகளிடம் சொன்னார்கள். ஆடுகளுக்கு கொட்டகையும் அமைத்துத் தருவதாக சொன்னார்கள். இதில் முறைகேடுகள் நடக்கவில்லை''’என்றார்.
பணம் வாங்கிய ஊராட்சி செயலர் சின்னக்காளை நம்மிடம்... ""கால்நடைத்துறை ஏ.டி. மற்றும் ஒலியமங்கலம் கால்நடை மருத்துவர் ஆகியோர் 139 பயனாளிகளிடமும் ஆடுகள் விலை அதிகமாக இருப்பதாக ஆட்டு வியாபாரி சொன்ன தால் பணம் ரூ.2 ஆயிரம் கொடுத்து வாங்கிட்டுப் போங்கன்னு சொன்னாங்க. ஆடு கொடுக்கிற நாளில் ஆடுகள் வர தாமதம் ஏற்பட்டதால என்னைப் பணம் வாங்கச் சொன்னாங்க. ஆடுகள் வந்ததும் ஆடுபிடிக்கவில்லை என்று சொன்னதால பணத்தை உரியவர்களிடமே கொடுத்துட்டேன். அதன்பிறகு ஆட்டு வியாபாரியே பயனாளிகளிடம் பேசி பணம் வாங்கிக் கொண்டார். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை'' என்றார்.
இந்த முறைகேடுகள் குறித்து நக்கீரன் இணையத்தில் படங்களுடன் செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கு கொண்டுசென்றோம். ""உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று உறுதியளித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார். விசாரணை முடிவில் முதல்கட்டமாக ஊராட்சி செயலர் சின்னக்காளையை பணியிடை நீக்கமும், பணித்தளப் பொறுப்பாளர் முருகேசனை பணிநீக்கமும் செய்து உத்தரவிட்டுள்ளார். கால்நடைத்துறை சார்ந்து உயரதிகாரிகள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில் துறை அமைச்சர், ""ஏழை மக்களிடம் பணம் வாங்கியது தவறு. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று மீடியாக்கள் மூலம் பதில் கூறியுள்ளார்.
நக்கீரன் இணைய செய்தியால், விலையில்லா ஆடு குட்டு வெளிப்பட்ட நிலையில்... இந்த பணத்தை வசூல் செய்யச் சொன்ன கால்நடைத்துறை ஏ.டி., கால்நடை மருத்துவர் மீதான நடவடிக்கையை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கிறார்கள்.
-இரா.பகத்சிங்