விதிகளையும் நடைமுறையையும் அரசும், அதிகாரிகளும், உரியமுறையில் கண்காணிப்பார்களேயானால் அச்சங்குளம் போன்ற பட்டாசு ஆலை உட்பட கடந்த 20 ஆண்டுகளில் 482 உயிர்கள் பட்டாசு பயங்கரத்தில் வெடித்துச் சிதறியிருக்காது என்று அடித்துச்சொல்கிறார்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

sivakasi

வழக்கம்போல பிப்ரவரி 12-ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தின் ஏழாயிரம்பண்ணைக் காவல் லிமிட்டில் வருகிற அச்சங்குளம் கிராமத்திலிருக்கும் மாரியம்மாள் பட்டாசு ஆலையில், 89 பேர் பேன்சி பட்டாசு ரகத் தயாரிப்பில் மும்முரமாக இருந்திருக்கின்றனர். ஊருக்கு வெளியே இருக்கும் அந்தப் பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தனித்தனியான சிறு அறைகளில் தயாரிப்பு பணிகள் நடந்தபடியிருந்தது.

Advertisment

மதிய உணவுக்குச் சற்று முன்பு ஒன்றரை மணிவாக்கில், தயாரிக்கப்பட்ட வெடிகளை வெளியே உலர்த்தப்பட்டிருக்கும் பட்டாசுடன் சேர்த்துப் பரப்பியபோது, காய்ந்துபோன பட்டாசுடன் ஏற்பட்ட மருந்துக் கலவையின் உரசலால் திடீரென நெருப்பு பற்றிக்கொண்டு வெடிக்க, நொடியில் மொத்தப் பட்டாசு ரகங்களும் சீறிக்கொண்டு வெடித்திருக்கின்றன. கூடவே பற்றிக்கொண்ட ராக்கெட் ரக வெடிகள் நாலாபக்கமும் சீறிக்கொண்டு அருகேயுள்ள அறைகளில் பாய்ந்து வெடித்திருக்கின்றன.

குவிக்கப்பட்ட அத்தனை வெடிபொருட் களும், மருந்துக் கலவைகளும் ஒருசேர வெடித்ததில் 15-க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாயின, மீதமுள்ள 13 அறைகள் சேதமடைந்து தீப்பற்றி எரிந்தன. தரையதிர வெடித்த வெடிச்சத்தம், பல கிலோமீட்டர் தொலைவு அதிர வைத்திருக்கிறது. ஆலை ஏரியாவிலோ, தீப்பிழம்பும், கரும்புகையும் வெந்து காயப்பட்டுக் கிடந்த தொழிலாளர்களின் கதறலுமாக ஏரியாவைக் கலங்கடித்திருக்கிறது. நான்-ஸ்டாப்பாக வெடித்த வெடிகளால் அக்கம் பக்க கிராமத்தவர்களும் உள்ளே செல்லமுடியவில்லை.

""வெடிச்சத்தம் அடங்கியபோதுதான் எங்களால் உள்ளே செல்லமுடிந்தது. வேட்டி, மற்றும் துண்டுகளில் அவர்களைக் கிடத்திதான் வெளியே தூக்கிவரமுடிந்தது. உடல் முழுக்கத் தீக்காயங்களோடு நெஞ்சு வயிறு என்று வெந்த நிலையில் ஓலமிட்டுக் கொண்டிருந்தார் கற்பகவள்ளி என்ற 7 மாதக் கர்ப்பிணி. அவளைக் காப்பாற்ற அவசரப்பட்ட நாங்கள் கிடைத்த போர்வையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆலையைவிட்டு வெளியே வருவதற்குள்ளாகவே அவளது மூச்சு அடங்கியதைப் பார்த்து ஆடிப்போனோம்'' என்கிறார்கள் சுப்பையாவும் அவரைச் சேர்ந்தவர்களும்.

Advertisment

சம்பவ இடத்திலே மட்டும் 10 பேர் உயிரிழந் திருக்கிறார்கள். தொடர்ந்து 38 பேர் மீட்கப்பட்டு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர். இரவுநேர நிலவரப்படி மருத்துவமனை கொண்டுசெல்லப் பட்டவர்களில் 9 பேர் மரணமடைய, அதன்பின் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.

ss

""இறந்துபோன 19 பேரில் ஆறு பேரை மட்டுமே அடையாளம் காணமுடிந்தது. மற்றவர்கள் உடல் சிதைந்து முகம் எரிந்துபோன நிலையில் அடையாளம் காணமுடிய வில்லை'' என வேதனையுடன் கூறினார் மீட்புப் பணியிலிருந்த காவலர்.

கிராமத்தில் விசாரித்த போது, “வானம் பார்த்த மானாவாரிப் பூமியான ஏழாயிரம்பண்ணை, அச்சங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் கிடையாது பட்டாசுத் தொழில்தான் முக்கியமானது. குறிப்பாக அச்சங் குளம் கிராமத்தில் ஏழாயிரம் பண்ணையைச் சேர்ந்த சந்தனமாரிக்குச் சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை உள்ளது. அதை நடத்தமுடியாமல் போனதால் சந்தனமாரி பேன்சி ரகப் பட்டாசு தயாரிக்கப்படுகிற தனது ஆலையை விஜயகரிசல் குளத்திலிருக்கும் சக்திவேல் மற்றும் அவரது உறவினர் உட்பட நான்கு பேர்களுக்குக் குத்தகைக்கு விட்டிருக்கிறார்.

நீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டால் பணம் பார்க்கமுடியாது. என்பதற்காக, வீரியமுள்ள லேட்டஸ்ட் வெடி குண்டு, பேன்சி ரக வெடிகள் தயார் செய்யும் பொருட்டு நாக்பூர் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையிடமிருந்து லைசென்ஸ் பெற்றிருக்கிறார்கள் குத்தகைதாரரான சக்திவேல் வகையறாவினர். மாதந்தோறும் ஆய்வுசெய்ய வேண்டிய பொறுப்பு விருதுநகர் மாவட்ட எகஸ்ப்ளோசிவ் கட்டுப்பாட் டுத் துறையினரிடமிருந்தாலும், அவர்கள் முறைப் படி ஆய்வுக்கு வருவது கிடையாது. போகவேண் டிய மாமூல் மாதம்தோறும் போய்விடுவதால், அவர்கள் இந்த பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை. எனவே வருமானம் வரக்கூடிய பேன்சிரகப் பட்டசுகளையே தயாரித்திருக்கின்றனர்'' என்கிறார்கள் அச்சங்குளம் கிராமத்தினர்.

""சிவகாசியில் வெடிவிபத்து ஏற்படாத வருடம் இருக்கிறதா... பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவியோடு நிறுத்திக்கொள்ளாமல், யார் அலட்சியத்தால் இத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டன? தீ விபத்தின்போது செயல்பட வேண்டிய உபகரணங்கள் என்னவாகின? அனைத்தையும் தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம், இனியும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க அரசு முயலவேண்டும்'' என்கிறார் சமூக ஆர்வலரான ராஜேஸ்வரிபிரியா.

ss

மாவட்ட ஆட்சியரான கண்ணன், “""இறந்தவர்கள் தவிர்த்து காயமடைந்தவர்களில் 22 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையிலும், சிவகாசி மருத்துவமனையில் 7 பேரும் சிகிச்சையில் உள்ளனர் மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடிமருந்து உராய்வு காரணமாக இந்தக் கோர விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது'' என்றார்.

""இந்த வெடிவிபத்து குறித்து ஆலையின் உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல், மற்றும் ஃபோர்மேன் என்று மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அவர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது'' என்றார் டி.ஐ.ஜி. ராஜேந்திரன். சனிக்கிழமையன்று குத்தகை தாரர்மீது கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

பலியான 19 பேரில் குழந்தைத் தொழிலாளர் ஒருவரும் இறந்திருக்கிறார். பட்டாசு, தீப்பெட்டி ஆலைகளில் குழந்தைத் தொழிலாளர்களை அனுமதிக்கக்கூடாது என்கிற நடைமுறை இருந்தும் அதனை உரிமையாளர்கள் மீறி வருகின்றனர். குழந்தைத் தொழிலாளர்களை அனுமதிக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட தொழிலாளர் நலத்துறை (அமலாக்கம்) உதவி ஆணையர் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை என்பதும் தெரிகிறது.

விபத்து, உயிர்ப்பலி என செய்தியாக வெளியானாலும் பட்டாசு ஆலை அதிபர்கள்- அதிகாரிகள்- அரசாங்கம்- இந்த அலட்சிய தெனாவெட்டுக் கூட் டணியின் மறைமுக படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

- ராஜவேல்