"ஆரணங்கள் சாத்திரங்கள் ஆகம புராணங்கள்
காரணங்கள் காவியங்கள் கலைக்கி யானஞானங்கள்
பூரணங்கள் பூரபவுஷிய வர்த்தமானங்கள்
தோரணையாய் சொல்ல வல்லோர் சித்தர் ஆவதில்லையே.'
(சிவவாக்கியார்)
அகத்தியர்: சைவத் தமிழ்ச்சித்தர் பெருமக்களே, உயிரினங்களுடைய ஆன்மாவின் இயக்க நிலைபற்றி தேரையர் இந்த தமிழ்த் திருச்சபையில் கூறி வருகிறார்.
நேற்று கண்களின் பார்வை சக்தியால் உண்டாகும் ஆசைகளால், தங்கள் ஆன்மாவை இயக்கி, நன்மை- தீமை, பாவ- சாப- புண்ணியப் பதிவுகளைத் தங்கள் ஆன்மாவால் உருவாக்கிக்கொள்ளும் நிலைபற்றிக் கூறினார். இன்று ஆன்மாவை இயக்கும் ஐம்புலங்களில் மற்றொரு உறுப்பான செவிகளின்மூலம் ஆன்மாவின் இயக்கநிலைபற்றி தேரையர் கூறுவதை அறிவோம். தேரையர் சித்தரே, காதுகளுக்கும் ஆன்மாவிற்கும் உண்டான தொடர்புபற்றி தாங்கள் கூறுவதைக் கேட்க சித்தமாக உள்ளோம். தங்கள் கருத்தைக் கூறுங்கள்.
தேரையர்: ஆசான் அகத்தியருக்கும், தமிழ்ச்சபையிலுள்ள பகுத்தறிவுச் சித்தர் பெரியார்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கம். உயிரினங்களின் காதுகள், காற்றின் ஒலியால் (சப்தம்) செயல்பட்டு ஆன்மாவை இயங்கச் செய்கின்றன.
இந்த அண்டவெளியானது காற்றினால் சூழப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது. காற்று மண்டலத்தில் எத்தனையோ வகையான காற்றுகள் உண்டு. இவற்றுள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஆதாரமாக உள்ளவை இரண்டு வகையான காற்றுகள் மட்டுமே. ஒன்று உயிர்மூச்சுக்காற்று, மற்றொன்று ஓசையாக (சப்தம்) உள்ள காற்று. காதுகள் இந்த ஒலிக்காற்றினால் இயங்கி ஆன்மாவை செயல்படச் செய்கிறது.
ஒருவர் கூறும் வார்த்தைகளை மற்றொருவர் கேட்பது, பறவைகளின் ஒலி, காற்றின் இரைச்சல், வானில் உண்டாகும் முழக்கம் போன்ற அனைத்து சப்தங்களும் காதின்மூலம்தான் ஒரு ஆன்மாவை அறியச் செய்கிறது. ஒருவர் கூறும் வார்த்தைகளும், கேட்கும் இசையும், ஓசையும் ஒரு ஆன்மாவுக்குக் பிடித்திருந்தால் மகிழ்ச்சியடைகிறது. பிடிக்கவில்லையென் றால் விலகிப்போகிறது.
ஒருவர் பேசும் வார்த்தைகளைக் காதால் கேட்டு, வெறுப்பும் கோபமும் உண்டானால், அங்கு கலவரம் உண்டாகி அமைதி குலைந்து, ஒருவரையொருவர் தாக்கியழிக்கும் நிகழ்வும் அல்லது பேச்சுக்குப் பேச்சு வாதப் பிரதிவாதங்களும், உண்டாகிவிடுகின்றன. ஒருவருக்கொருவர் பகை உண்டாகிவிடுகிறது. குடும்ப உறவுகளில் பிரிவு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தீமைகள் செய்து வாழும்போது, பாவ- வாக்கு சாபப்பதிவுகள் உண்டாகி, தொடர்ந்து வம்சத்தையே பாதிப்படையச் செய்கிறது.
(இன்றைய நாளில் காற்றின் ஒலி அலைவரிசை உதவியால், தொலைத் தொடர்பை ஏற்படுத்தி, பல நாடுகளில் வாழும் மக்களுடன் நினைத்தபோது பேசுகிறோம். இந்த நிகழ்வையும், ஒரு மனிதனின் ஆன்மா, தன் அறிவு சக்தியால் உருவாக்கிகொண்டது என்பதே உண்மை.)
குண்டலிணி யோகம் செய்து, அட்டமாக சக்திகளை அடைய முயன்ற சித்தர்கள், தங்களின் யோக முயற்சியில் முதல்நிலையில் அடைந்த அனுபவம் என்பது, காற்றின் ஓசைமூலம் அண்டவெளியில் உண்டாகும் ஒலியைத்தான். இதனைபற்றி சித்தர்கள் கூறியுள்ளதையும் அறிவோம்.
"மணி கடல் யானை வார்குழல் மேகம்
மணி வண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமவைப் பத்தும்
பணிந்தவர்க் கல்லாது பார்க்க வொண்ணாதே.'
மனிதன் வயிற்றிலுள்ள குடலானது ஒரு பாம்பு தன் உடலைச் சுற்றிக்கொண்டு படுத்திருப்பதுபோல், அனேக வளைவு களுடன் அமைந்துள்ளது. குண்டலினி யோகநிலையில், உள்ளுக்கிழுத்து தன் உடம்பினுள்ளே நிறுத்திய மூச்சுக்காற்று, 22 அடி நீளமுள்ள குடல் முழுவதும் சென்று தங்கி, பிறகு அபான வாயுவைப் போன்று, ஆசன துவாரம் வழியாக வெளியே செல்லும். இது அபான வாயுவல்ல; நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றுதான்.
குண்டலினி யோகம் செய்த சித்தர்கள், இந்த மூச்சுக்காற்றைத் தங்கள் ஆசனவாயின் வழியே செல்லவிடாமல், தனது இரண்டு புட்டங்களையும் இடுக்கிப்பிடித்ததால், அந்த மூச்சானது, முதுகெலும்பிலுள்ள வெள்ளை நரம்புடன் இணைந்திருக்கும் நூல் போன்ற சின்னச்சின்ன நரம்புகளின்மூலம் மேலேறி சுற்றிதிரியும். அப்போது தொப்புளின் கீழுள்ள குண்டலினி சக்தி, பாம்பு சீறுவது போன்ற சப்தத்துடன் சீறிக்கொண்டு மேலே கிளம்பும். இந்த நிலையின்போது, பத்துவிதமான ஓசைகளும் யோகம் செய்பவரின் காதுகளில் கேட்டுக்கொண்டிருக்கும்.
யோகநிலையில் குண்டலினி சக்தியை மேல்நோக்கி ஏற்றுவதில் முறையாக முயற்சி செய்பவருக்கு, ஆரம்பத்தில் காதில் ஒரு இரைச்சல் சப்தம் கேட்டுக்கொண்டிருக்கும். யோகநிலைபற்றி அறியாத அவர்கள், காதில் ஏதோ இரைச்சல் கேட்கிறதென்று கூறுவார்களே தவிர, யோகத்தின் முதல் நிலை இதுதான் என்று புரிந்துகொள்ள மாட்டார்கள். யோகநிலையின் முதல்படியில் உண்டாகும் நாத சப்தம் என்று அவர் களுக்குத் தெரியாது. இந்த நிகழ்வைக் கண்டு பயந்து குண்டலினி யோகம் செய்வதை நிறுத்திவிடுபவர்களும் உண்டு.
குண்டலினி யோகாப்பியாச பயிற்சியைத் தொடர்ந்து செய்துகொண்டேவர வர, இரவில் ஊர் இயக்கம் அடங்கி, ஊயிரினங் களின் சப்தம் அடங்கி, பன்னிரண்டு மணிக்குமேல் "ஓ' என்ற சப்தம் கேட்கும். யோகப்பயிற்சி செய்பவர்களின் காதில் இந்த ஓங்கார சப்தம் கேட்டவுடன், அவர்கள் தங்கள் சூட்சும புத்தியினால் அறிந்து, தெய்வம், குடும்பம், மந்திரம் போன்ற மற்ற எந்த எண்ணங்களிலும் சித்தத்தைச் சிதறவிடாமல், அந்த ஓங்கார சப்தத்தில் மட்டும் தங்கள் சித்தத்தை கவனமாகச் செலுத்தி, அந்த சப்தத்திலேயே தங்களை நிலைப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
ஓங்கார ஒலியை கவனமாகக் கேட்டுக்கொண்டே இருந்தால், அடுத்து வண்டின் சப்தம் போன்று, "ஙீ' என்ற சப்தம் கேட்கும். அந்த சப்தத்திலேயே சித்தத்தை கவனமாகச் செலுத்தினால் அடுத்து "கிணி கிணி' என்ற சப்தம் ஒலிக்கும். இதையும் கவனித்திருந்தால் அடுத்து சங்கொலி சப்தமும், அடுத்து புல்லாங்குழல் இசையில் உண்டாகும் வேணுநாத சப்தமும், அடுத்து வீணையின் நாத இசையும், அடுத்து தாளத்தின் சப்தமும், அடுத்து கண்டநாத ஒலியும், அடுத்து பேரிகை முழக்க ஓசையும், அடுத்து மேகநாத இடிமுழக்க சப்தமும் என ஒவ்வொன்றாக அந்த ஓங்கார சப்தத்திலிருந்து உருவாகி யோகிகளுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கும்.
இன்றைய நாளில் "ஓம்' என்ற ஒலியை "ஓங்காரம்' என்று கூறிவருகிறார் கள். ஓங்காரம் என்பது பத்துவிதமான ஓசைகளைக்கொண்டது என்று, சித்தர்கள் அனுபவத்தில் அறிந்த உண்மை யைக் கூறுகிறார்கள்.
பகல் நேரங்களில் வெளிப்புற சப்தங்கள், உயிரினங்களால் எழுப்பப்படும் ஓசைகள் இருப்பதாலும், அதனால் கவனம் சிதறுவதாலும் தனக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த நாத சப்தங்கள் கேட்காது. உதாரணமாக பகலில் கடல் அலைகள் இரைச்சலிடும் ஓசை பெரிதாகக் கேட்காது. இரவு பன்னிரண்டு மணிக்குமேல் உயிரினங்கள் உறங்கி நிசப்தமாய் இருக்கும்போது, சமுத்திரத்தில் உண்டாகும் அலையின் ஓசை அதிகமாக இருப்பதை நன்றாய்க் கேட்கமுடியும். இதுபோன்று குண்டலினி யோகம் செய்பவர்களுக்கு பகல்பொழுதில் பத்துவிதமான நாத சப்தமும் கேட்காது. ஊர்ப்புறங்களில் உண்டாகும் ஓசைகளால், சித்தர்களாகிய நாம் செய்யும் குண்டலினி யோகப் பயிற்சிக்கு, அட்ட மகாசித்தியைப்பெற நாம் செய்யும் முயற்சிக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாமலிருக்க அமைதியாகவுள்ள கானகத்திலும், மலைக்குகைகளில் வசித்துவருகிறோம்.
இந்த ஓங்கார சப்தம், யோகப்பயிற்சியின் ஆரம்ப முதல் நிலையில், பிரபஞ்சத்தின் வெளியிலிருந்து கேட்பது போன்று தோன்றும். ஆனால் படிப்படியாக யோகநிலை உயர்ந்து சித்திபெறும்போது, தன்னுள்ளிருந்தே இந்த நாதம் ஒலிப்பதை அறிந்துகொள்ளமுடியும். "அண்டத்தில் உள்ளதுதான் மனித பிண்டத்தில் உள்ளது' என்ற உண்மையைப் புரிந்துகொள்ளமுடியம்.
இந்த பூமியில் குண்டலினி யோகம் செய்து, முதல்நிலையில் நாத ஒலியைக் கேட்டறிந்து, அதன்பின் முறையாக யோகநிலையைத் தொடர்ந்து செய்து பத்துவிதமான சக்திகளை (தீட்சைகளை) தங்கள் முயற்சியால் அடைந்து அட்ட மகா சக்திகளைப் பெற்றவர்கள், இந்த தமிழ்நாட்டில் மனிதனாகப் பிறந்து மரணத்தை வென்று வாழ்ந்துவரும் நாம் பதினெட்டு சித்தர்கள் மட்டுமே.
இந்த நிலையை நாம் அடைய ஆசான் அகத்தியரும், அவர் உருவாக்கி தமிழ் மக்களுக்குத் தந்த பூரண ஞான தமிழ்மொழி யுமே காரணம் என்பதே உண்மை.
அகத்தியர்: தேரையர் சித்தரே, உங்கள் விளக்கத்தை அனைவரும் அறிந்தனர். மற்ற விவரங்களை நாளைய தமிழ்ச் சபையில் காண்போம். தற்போது அனைவரும் யோகம் புரியச் செல்வோம்.
அட்டமகா சக்திகளையும், அதில் சித்திகளையும், குண்டலினி யோகம் செய்யாமல் தானம், தர்மம், தவமிருந்தோ, கடவுளை வணங்கியோ, பாராயணம், விரதம், யாகங்கள் செய்து, மந்திரம் ஜெபித்து, எந்திரம் வைத்தோ அடையமுடியாது; யோகியாக முடியாது என்பதே உண்மை.
வாசக அன்பர்களே, இன்றையநாளில் சிவயோகி, வாசியோகி, குண்டலினி யோகி, என கூறிக்கொள்பவர்கள், மக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் அனைவரும் ஆன்மிக வியாபாரிகள்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டவன் பெயரால் ஆன்மிக வியாபாரம், அரசியல் வியாபாரம் செய்பவர்களிடம் மக்கள் கவனமாக இருந்து, தங்கள் பணம், பொருள், உடல், கற்பைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.
"குண்டலினி யோக சாதனையிலிருந்து
திறமாக சாதிப்பவர் தமக்கு
சுத்தமா நாதத் தொனி களும்
பலநாதம் தோன்றிடு மணி கடம்
மேகமத் தளம் பேரியா ழொலி
சிலம்பு விளை யொளி தாளமென்று
மையாட் சித்தனு மொழிந் தானன்றி
முரவோ ராய்ந்தெ டுத்தரைத் தனரே.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)