"உஞ்சவிருத்தி' என்பது நாமசங்கீர்த்தனம் செய்துகொண்டே ஏழு வீடுகளில் "பிக்ஷை' எடுப்பது. அதாவது அரிசியை தானமாகப் பெறுவது என்பதாகும்.

உஞ்சவிருத்தி எடுப்பவர் அதிகாலையில் எழுந்து நீராடி, தூய உடை உடுத்தி, நெற்றி மற்றும் உடலில் ஒன்பது இடங்களில் சந்தனத்தில் நாமம் அல்லது திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொண்டு, தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு, "பஞ்சகச்சம்' வேட்டிகட்டி, அங்கவஸ்திரத்தைத் தோளில் போட்டுக் கொண்டு, கூடவே கழுத்தில் கயிறால் ஒரு செம்பை கட்டித் தொங்கவிட்டு, சப்ளாக்கட்டையுடன் இறைநாமத்தை சங்கீர்த்தனம் செய்துகொண்டே தெருவில் மெதுவாக நடந்துவருவார். அவருடன் மேலும் நான்கைந்து பேரும் பின்பாட்டு பாடிக்கொண்டும், ஜால்ரா, ஆர்மோணியம், மிருதங்கம் வாசித்துக் கொண்டு செல்வர்.

perumal

அவ்வாறு வரும்போது, தெருவிலுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், அவரவரவர் வீட்டின்முன்பு தண்ணீர் தெளித்துக் கோலமிட்டு, அந்த கோலத்தின்மேல் பலகை ஒன்றைப் போட்டுவைத்திருப்பார்கள். உஞ்சவிருத்தி எடுக்கும் பாகவதர் வந்ததும், அவரை அப்பலகையில் நிற்கவைத்து, ஒரு குடம் தண்ணீரால் அவரது பாதங்களைக் கழுவி, பாதங்களில் சந்தனம், குங்குமப் பொட்டிட்டு, பிறகு அவரை ஒருமுறை சுற்றிவந்து வணங்குவார்கள். பிறகு அவர்கள் வைத்திருக்கும் ஒரு கால்படி அல்லது ஒரு ஆழாக்கு நிறையவுள்ள அரிசியை பாகவதர் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டிருக்கும் செம்பில் போடுவார்கள். பிறகு மீண்டும் பாகவதரை வணங்குவர். அப்போது அந்தப் படி அல்லது ஆழாக்கில் பாகவதர் ஓரிரு மணி அரிசியை எடுத்துப்போட்டு ஆசீர்வதித்து அனுப்புவார். சிலர் அந்த செம்பில் அரிசி மட்டுமின்றி பணம், பொற்காசு என்றும் போடுவார்கள்.

Advertisment

அந்த பாகவதர் அந்த அரிசியை வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டுத் திருப்தி அடைவார்.

இந்த உஞ்சவிருத்தி என்பது புராண காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இராமாயண காவியத்தில் ஸ்ரீராமன் வனவாசம் செல்லும்போது, ஸ்ரீராமனின் தாயார் கோசலை, ""தானும் வருகிறேன். நீ அங்கே எனக்கு உஞ்சவிருத்தி எடுத்துவந்து போடு. அதுவே போதும்'' என்றாள். அதேபோல ஸ்ரீகிருஷ்ணனின் நண்பனான பரம ஏழை குசேலன், தினமும் உஞ்சவிருத்தி எடுத்து வந்துபிறகுதான் வீட்டில் சமையல் நடைபெறும்.

சந்நியாசிகள் இந்த உஞ்சவிருத்தியை ஏழு வீடுகளில் மட்டுமே எடுப்பார்கள். அந்த வீடுகளில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்துதான் சமையல் செய்து, அதில்மூன்று கவளம் மட்டுமே சாப்பிட்டுவிட்டு வாயைக் கொப்பளித்து விடுவார்கள். உஞ்சவிருத்தியில் அவருக்கு ஏழு வீடுகளிலும் எதுவும் கிடைக்காவிட்டால் அன்று பட்டினியாக இருந்துவிடுவார்கள்.

Advertisment

perumal

ஸ்ரீசத்குரு ஸ்வாமிகள், ஸ்ரீதர ஐயாவாள், ஸ்ரீபோதேந்திராள் மற்றும் தியாகராஜ ஸ்வாமிகள், முத்துசாமி தீட்சிதர், ஸ்யமளா சாஸ்திரிகள் போன்ற எத்தனையோ மகான்களெல்லாம் உஞ்சவிருத்தி எடுப்பதையே வழக்கமாக வைத்திருந்தார்கள். ஸ்ரீசத்குரு ஸ்வாமிகள் உஞ்சவிருத்தி எடுக்கும்போது அவர் ஒரு மகாராஜபோல வரவேண்டுமென்று, அவருக்கு ஒருவர் பெரிய அலங்காரக் குடை பிடிக்க, இருபுறமும் இருவர் சாமரம் வீச, இரண்டுபேர் சிப்பாய்கள்போல செங்கோல் ஏந்திவர உஞ்சிவிருத்தி எடுக்கும் பாக்கியத்தை, தஞ்சாவூர் மகாராஜா ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளுக்கு அளித்து நற்பேறு பெற்றார்.

மேலும் இந்த உஞ்சவிருத்தியின் மேன்மைபற்றி சில புராணச் சம்பவங்களும் உள்ளன. திருப்பதி வேங்கடாசலபதியின் பக்தர் ஒருவர் நீண்டநாட்களாக வயிற்றுவலியால் பெரும் அவதிப்பட்டார். ஒருசமயம் அவர் திருப்பதி சென்று ஏழுமலையானிடம் மனமுருகவேண்டித் தன் வயிற்றுவலி போக வழிகேட்டார். வேங்கடாசலபதி அவரிடம், ""ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்தால் உன் வயிற்றுவலி குணமாகிவிடும்'' என்று கூறினார். அதற்கு அவரும் வலி குணமானால் போதுமென்று உடனே ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவரோ பரம ஏழை. "விவரம் தெரியாமல் ஒப்புக்கொண்டு விட்டேனே... ஒரு லட்சம் பேருக்கு என்னால் அன்னதானம் செய்யமுடியாதே... பகவானே... நான் என்ன செய்ய?' என்று மீண்டும் திருப்தி வேங்கடாசலபதியிடம் சென்று முறையிட்டார்.

அதற்கு ஏழுமலையான், ""பக்தா! நீ உஞ்சவிருத்தி எடுத்துவரும் பாகவதரின் செம்பில் ஒரு கைப்பிடி அரிசையைப்போடு. அதுவே ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்ததற்குச் சமமாகிவிடும்'' என்று சொல்லி அனுப்பினார். அதன்படியே அந்த பரம ஏழை, உஞ்சவிருத்தி எடுத்துவந்த பாகவதரின் செம்பில் ஒருபிடி அரிசியைப்போட, அவர் வயிற்றுவலி தீர்ந்துபோயிற்று. இதிலிருந்து ஒரு கைப்பிடி அரிசியை உஞ்சவிருத்தியில் இட்டால் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த பலன் கிடைக்குமென்று தெரியவருகிறது.

இதேபோல, உத்தமமான பாகவதர் ஒருவர் இருந்தார். உஞ்சவிருத்தி எடுப்பதை வழக்கமாகக்கொண்டிருந்தார். இதனால் என்ன பலன் கிடைக்குமென்பதை அறிந்து கொள்ள அவருக்கு நீண்டநாள் ஆசை. ஒருசமயம் அவர் ஒரு பரம ஞானியைச் சந்தித்து, ""உஞ்சவிருத்தி எடுப்பதால் என்ன பலன் கிடைக்கும்?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த ஞானி, ""நீ நாகலோகம் சென்று நாகராஜனை சந்தித்து அவரிடம் கேட்டால் விளக்கமாகக் கூறுவார். நீ நாகலோகம் செல்ல அனுக்கிரகம் செய்கிறேன்'' என்று சொல்லி அவரை நாகலோகத்திற்கு அனுப்பிவைத்தார்.

அந்த உத்தம பாகவதர் அங்கே சென்றபோது நாகராஜன் இல்லாததால், நாகராணியிடம் அவர் வந்திருக்கும் நோக்கத்தைத் தெரிவித்தார். அதற்கு நாகராணி, ""ஐயா, உங்கள் கேள்விக்குரிய பதில் எனக்குத் தெரியாது. எனது கணவர் உத்ராயண காலத்தில் சூரிய பகவானின் ஏழு குதிரைகளுக்குக் கடிவாளமாக இருப்பார். உத்ராயணகாலம் முடிந்ததும் வந்துவிடுவார். இன்றோடு உத்ராயணம் முடிவதால், நாளை காலை வந்துவிடுவார். அதுவரை காத்திருங்கள்'' என்று கூறி, அவரை சகல வசதிகளுடன் தங்கவைத்தாள்.

மறுநாள் நாகராஜன் திரும்பி வந்ததும், அவரிடம் பாகவதர் தன் சந்தேகத்தைத் தெரிவித்தார். அதற்கு நாகராஜன், ""உத்மம பாகவதரே! ஒருசமயம் நான் சூரியனின் குதிரைகளுக்குக் கடிவாளமாகப் பயன்பட்டுக்கொண்டிருந்தேன். அப்போது பிரகாசமான ஜோதி ஒன்று சூரிய மண்டலத் தைக் கடந்து சென்றது. அதைப்பார்த்ததும் என் கண்கள் கூசின. மிகப்பிரகாசமான ஒளி பொருந்தியவன் சூரியன். அந்த ஒளிக்கும் மீறிய இந்த பிரகாசமான ஜோதி என்னவாக இருக்கும் என்று நான் சூரியனிடம் கேட்டேன். அதற்கு அவர், "நாகராஜனே, அதிக வெப்பமும், ஒளியும்கூடிய உயர்ந்த பிரகாசமான என்னுடைய சூரிய மண்டலத்தை யும் கடந்து செல்லும் இந்த ஜோதி, ஒரு மகா புண்ணியாவனின் ஆன்மாவாகும். இந்த புண்ணியவான் பூமியில் ஒருநாள்கூட தவறாமல் இறைவனின் திருநாமத்தைப் பாடி உஞ்சவிருத்தி எடுத்தவர். அத்தகைய புண்ணிய காரியத்தை இவர் செய்ததால் இவர் மரணமடைந்ததும் இவருடைய ஆன்மா மோட்சத்தை நோக்கிச் செல்கிறது. உஞ்சவிருத்தி எடுத்தால் மறுபிறவி இல்லாத மோட்சத்தை அடையமுடியும்' எனக் கூறினார்'' என்று நாகராஜன் கூறிமுடித்தார். இந்த விவரத்தைத் தெரிந்துகொண்ட அந்த பாகவதர் பூவுலகம் திரும்பினார்.

ஆக, உஞ்சவிருத்தி எடுத்தால் மோட்சத்தை அடையலாம் என்பதும், உஞ்சவிருத்தி எடுத்துவரும் பாகவதரின் செம்பில் ஒரு கைப்பிடி அரிசி இட்டால் ஒரு லட்சம்பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உஞ்சவிருத்தி எடுக்கும் வழக்கமே இல்லாமல் போய்விட்டது. என்றோ ஒரு நாள் எங்கோ எப்போதாவது இது நடைபெறுகிறது. அப்போது சிலர் இதைக் கண்டும் காணாததுபோல சென்று விடுகின்றனர். நமது முன்னோர்கள் நமக்குக் காண்பித்துச் சென்ற இதுபோன்ற நல்ல பண்பாடு, கலாச்சாரங்களை நாம் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும்.