(சமீபத்தில் வெளியான பாடலாசிரியர் அருண் பாரதியின் நூலுக்கு எழுதிய அணிந்துரை)

“ அண்ணே....’’ என்று என்னை அன்போடு அழைக்கும் பாசக்காரத் தம்பி பாடலாசிரியர் அருண்பாரதி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் அண்ணன்.

அறிவுமதி அவர்கள் அருணை அழைத்து வந்து, இயக்குநர். லிங்குசாமிக்கும், எனக் கும் அறிமுகப்படுத்தினார்.

அப்போது எங்கள் உரையாடலுக்கு நடுவே, தான் எழுதிய பாடல் வரிகளை பாடிக் காட்டினார் அருண்பாரதி. தாய்ப்பாசம், கிராமத்து வாழ்வு, விடலைப் பருவத்துக்கே உரித்தான துள்ளல் இவை சார்ந்த ஈர வரிகள் அவை.

Advertisment

bb

பூமியிலிருந்து பறித்தெடுத்த புதிய கிழங்கு போல, பச்சை வாசத்தோடும், சேற்றுப் பிசுபிசுப்போடும் இருந்தன அந்த பாட்டு வரிகள். தேனியிலிருந்து வரும் மலைக்காற்று என் மீதும் வீசியது. மனதுக்குள் குறித்து வைத்துக்கொண்டேன் வாய்ப்பு வரும்பொழுது அருணை பாடலாசிரியராகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. இயக்குநர் லிங்குசாமியும் அதே கருத்தை சொன்னார்.

சண்டக்கோழி 2 திரைப்படத்தில் இடம்பெற்ற “டைட்டில் சாங்’’ கான, 'மீச வச்ச வேட்டக்காரன் எங்க கருப்பந்தான்: பாடல் அருண்பாரதி எழுதியதுதான். கிராமத்துத் திருவிழாவை கண்முன் கொண்டுவந்து காட்டினார். அந்தப் பாடலின் வரிகளில்......

Advertisment

“நல்லி எலும்போடு அடுப்புலதான் வெள்ளாடு மிதக்குதய்யா - அத அள்ளிக் கடிக்கத்தான் அடி வயிறு தண்டோரா அடிக்குதய்யா’’

“வெயிலுக்குத்தான் வாக்கப்பட்ட

சனங்களெல்லாம் கூத்துக்கட்ட

கொலசாமி கோவிலில் கூடிடுவோம் - அட

பாசத்த திருநீறா பூசிடுவோம்’’

போன்ற வரிகளை, இயக்குநர், நான், உதவிஇயக்குநர்கள் உட்பட அனைவரும் ரசித்தோம். அவர் எழுதிய வரிகளை வைத்து ஒரு கவிதைப் புத்தகமே போடலாம். அவ்வளவு எழுதினார்.

பாடல் வெளியானபோது பெரிதும் பாராட்டப்பட்டது.

அதேபோல அவருடைய கவிதை நூலான “புதிய பானையில் பழைய சோறு’’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு லிங்குசாமியையும், என்னையும் அழைத்து வாழ்த்துரை வழங்கச் சொன்னார்.

கவிக்கோ. அப்துல்ரகுமான், இயக்குநர் கே.பாக்யராஜ் ஆகியோரோடு பல ஆளுமைகள் கலந்து கொண்டனர். திரைப்பட இலக்கிய உலகங்கள் சங்கமமான சிறப்பான விழா.

பேச்சு மொழியில் அமைந்திருந்த அருண்பாரதி கவிதைகளை வெகுவாக பாராட்டிப் பேசினார் கவிக்கோ. ""இந்தப் பேச்சு வழக்கையும், கிராமத்து வாழ்வையும் இழக்காமல் தொடர்ந்து எழுது. தனித்துவத்தோடு வருவாய் "" என்று வாழ்த்தினார்.

அருண்பாரதி உண்மையிலேயே தன் முதல் நூலில் முத்திரை பதித்திருந்தார். சொல்லப்போனால் அது ஒரு ஆவணம்.

அந்த விழாவிலும் நான் அதைத்தான் குறிப்பிட்டேன். கிராமத்து விவசாயம், விளையாட்டுக்களின் வகைகள், மனிதர்களின் இயல்புகள், மருத்துவம், உணவுமுறை, பொழுதுபோக்கு, திருவிழா என ஒவ்வொன்றையும் விரிவாக எழுதியிருந்தார்.

எதிர்காலத்தில் அவை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து நாகரீக வாழ்க்கை என்னும் நச்சுப் பற்களால் மென்று விழுங்கப்படக்கூடும். அவற்றுக்கு ஒரு இலக்கிய ஆவணம்போல, அக்கவிதைகள் இருக்கின்றன. அதுவும் அம்மக்களின் மொழியிலேயே.

நோவு தீக்க சனங்களெல்லாம் ஒன்னாக

நின்னிருப்பாக மருதாயி வீட்டு முன்பாக

கோழியூப்ட எந்திருச்சு பாத்தா

மருந்து அரச்சுக்கிட்டுருப்பா

மருதாயி ஆத்தா’’

ஒடம்புல பச்ச குத்திக்கிற பழக்கம்

கிராமத்து பொம்பளைகளுக்கு

ரொம்பவே பிடிக்கும்

அகத்திக் கீரய அரச்செடுத்து

வெள்ளத்துணியில போட்டு

திரியாக்கி... தீயில வாட்டி....

புகையில சாறு சாயஞ் சேத்து

மையாக்குவா கட்டுவிச்சி

போன்ற வரிகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஏகாலிகள், பாளையத்து சந்தை, கலப்பை, விவசாய வாழ்க்கை போன்ற கவிதைகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளாகும். பேராசிரியர். பழமலய் அவர்களின் 'சனங்களின் கதை', கவிஞர். சிற்பி அவர்களின் 'ஒரு கிராமத்து நதி' ஆகிய கவிதை நூல்கள் பேச்சு மொழியில் அமைந்த கவிதை நூல்கள். கிராமத்து வாழ்வை கண்முன் கொண்டுவந்த ஆவணங்கள். அந்த வரிசையில் அருண்பாரதியின் “புதிய பானையில் பழைய சோறும்’’ அமைந்திருந்தது.

அதேபோல இந்தப் புதிய நூலான 'அம்மாச்சி' யிலும் உறவுகளை விரிவாக விவரிக்கின்றார். முதல்பக்கம் படிக்கும்போதே என் இதயம் கனமானது. அஞ்சலிக் கவிதை ஒன்றை தன் அப்பாவுக்காக அருண்பாரதி எழுதியிருக்கிறார். மண் ஏற்றப் போன அப்பா மண்ணோடு புதைந்த சோகத்தை நாட்டுப்புற பாடல் வடிவில் பதிவு செய்திருக்கிறார்.

மாங்கா ஏத்தப் போனயின்னா

ரெண்டு மாங்காயோட வருவ

தேங்காஏத்தப் போனயின்னா

ரெண்டு தேங்காயோட வருவ

மண்ணு ஏத்தப் போனதாலா

நீ மண்ணாகி வந்த ...

கடைசி மூச்சு போகையில

நீ என்ன சொல்லி நொந்த ?""

படித்தவர் எவராயினும் கண் கலங்காமல் இருக்க முடியாது.

இப்படித்தான் இருக்கிறது நம் கிராமத்து மனிதர்களின் விதி. வயலுக்கு நீர் பாய்ச்சப் போய், இடி விழுந்து செத்த விவசாயி எங்கள் கிராமத்திலும் உண்டு. மண்ணையும் விவசாயத்தையும் நம்பி வாழும் மனிதர்களுக்கு இங்கே வாழ்க்கைக்கான உத்திரவாதமில்லை. அவர்கள் உயிருக்கு ஒரு மதிப்புமில்லை. அந்தக் கண்ணீர் துளிகளுக்கான விலையை இங்கே யார் தர முடியும்? இந்நூலில் உள்ள பிற கவிதைகளும், இரத்தமும் கண்ணீரும் கலந்த உண்மையான உணர்வுகளையே அடிநாதமாகக் கொண்டுள்ளன.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, அம்மாச்சி, தாத்தா, நண்பர்கள் என்று உறவுகளே இக்கவிதைகளின் கருப்பொருளாகி உள்ளன. மனிதர்கள் மட்டுமல்ல. வீட்டோடு இருக்கும் கொடுக்காப்புளி மரம், ஊரோடு இருக்கும் தெப்பக்குளம், உடலோடு இருக்கும் சட்டை, செருப்பு, தாலி, அருணாக்கொடி முதலியவையும், உணர்வோடு இருக்கும் காதல், கருணை, அன்பு ஆகியவையுமே இத்தொகுதியில் இருக்கும் கவிதைகளுக்குக் கச்சாப் பொருட்களாகி இருப்பதை தலைப்புகளின் மூலமே அறியலாம்.

அனைத்துமே மிக எளிமையான வெளிப்பாடுகள்.

ஆய்வில் கண்டெடுத்த மண்டையோட்டின் முகவரியை தேடுவதைப் போலவும், மூளையை கசக்கிப் போராடிப் புரிந்துகொள்ளும் மூலக்கூறுகளின் வரைபடப் பாடம் போலவும் கவிதை ஆகிவிட்ட இன்றைய சூழலில் எளிமையாக இருப்பது என்பது தகுதிக் குறைவானதாக எண்ணப்படுகிறது.

அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சாலையோரத்திலும், வயல் வரப்புகளிலும் முளைத்து மலர்கிற எளிய பூக்களைப் போல, கொல்லைப்புறத் தில் விதைக்காமல் முளைக்கிற மூலிகை செடிகள் போல, குளத்தங் கரையெல்லாம் நெகுநெகுவென நிமிர்ந்து வளர்கிற பச்சைத் தாவரங்கள் போலவும் அருண்பாரதி கவிதை படைக்கிறார்.

அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகிற குரோட்டன் கள் அல்ல இவை. காயும் கனியும் கொடுக்கும் நிழல் மரங்கள். வாழ்க்கையின் நேரடிப் பதிவுகளாக இவை இருப்பதால், அலங்காரம் இன்றியே அழகாக இருக்கின்றன.

கருப்பசாமி இறங்குனதா சொல்லி

bb

கஞ்சா இழுக்கிற

அத்தைய பாக்கும் போதெல்லாம்

அடிவயித்தில் புளி கரைக்கும்’’

""அஞ்சறைப் பெட்டியின்

மிளகு வாசத்தில்

இன்னமும் நுகர்கிறேன்

திருமணம் ஆகிச் சென்ற

அக்காவின் வாசத்தை ""

""கடைசியா

மக கழுத்துல

மாங்கல்யம் ஏற

வட்டிக்கடைக்கு

வாக்கப்பட்டு போனது

தாயின் தாலி""

ஆகிய வரிகளைப் பாருங்கள். அசலான வாழ்க்கை அனுபவங்கள். எந்தப் படிம பயமுறுத்தலோ, குறியீட்டுக் குழப்பமோ, இருண்மை அந்தகாரமோ இவற்றில் இல்லை.

வெட்ட வெளிச்சமாக, பட்டவர்த்தனமாக, உடைத்த தேங்காயின் உள்ளேயிருக்கும் பருப்பின் வெண்மையைப் போல பயன்பாட்டுக்குரிய அழகியலோடு விளங்குகின்றன. இன்னும் ஏராளமாகக் குறிப்பிடலாம். என் நெஞ்சை மிகவும் கனக்கவைத்த ஒரு கவிதை 'செருப்பு'.

செருப்புப் போடாமல் போனதற்காக பள்ளியில் மகன் அடி வாங்கியதையும், முதலாளி முன் செருப்பு போட்டு நின்றதற்காக அப்பா அடி வாங்கியதையும் அதில் எழுதியிருக்கிறார் .

திரைப்படப் பாடல்களோடு கவிதை நூல்களையும் வெளியிட்டு, இலக்கியத்திலும் இடம்பிடித்துக்கொண்டிருக்கிற அருண்பாரதிக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

விதையில் வீரியம் இருக்கிறது. விழுந்த நிலமும் ஈரநிலம். நாள்தோறும் உதிக்கிற சூரியனைப் போல நல்ல வாய்ப்புகள் அருண்பாரதியின் வாசல் தேடி வருகின்றன. பொறுமையும் உறுதியும் கொண்டு பற்றி இருக்கிற பூமியை விடாமல் பிடித்து, புயல், மழை, இடி இவற்றையெல்லாம் கடந்து வீழ்ந்துவிடாத விருட்சமாக வளருவார் என் தம்பி அருண்பாரதி என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்துகிறேன்.

""ஏறு... மேலே ஏறு... ""என்ற பாவேந்தரின் பாடல் இந்த வாழ்த்துரையை நிறைவு செய்கிறபோது நினைவில் மிதக்கிறது.

அன்புமிக்க அண்ணன்

பிருந்தா சாரதி