ஜோதிட சாஸ்திரம் என்பது கடல் போன்றது. அதற்குள் ஆரூடம், பிரசன்னம், எண்கணிதம், பெயரியல், பஞ்சபட்சி சாஸ்திரம், ஜாமக்கோள் என்று பல்வேறு பிரிவுகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஒன்று தான் பஞ்சபூதங்கள் பற்றிய சாஸ்திரம்.
பஞ்சபூத சாஸ்திரம் பற்றித் தெரிந்து கொள்வதற்கு திருமூலர் கூறிவைத்துள்ள வார்த்தைகளே போதுமானதாகும்.
"அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத் திலுள்ளதே அண்டம்; அண்டமும் பிண்டமு மொன்றே அறிந்துதான் பார்க்கும்போதே...' என்று தெளிவுபடுத்துகிறது சித்தர் பெருமானின் வார்த்தைகள்.
உலகில் சிருஷ்டிக்கு அடிப்படையானவை என்றால் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள்தான். "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்' என்கிறார் தொல்காப்பியர்.
இந்த பஞ்ச பூதங்களுக்கும் ஒவ்வொரு தத்துவம் உண்டு. குரு பகவானை ஆகாயத் திற்கும், சுக்கிர பகவானை நீருக்கும், செவ்வாய் பகவானை நெருப்பிற்கும், சனி பகவானை காற்றுக்கும், புதன் பகவானை நிலத்திற்கு மாக பிரித்துக் காட்டும் சாஸ்திரம், பஞ்ச லோகத்துடன் இவர்களுக்குள்ள தொடர்பு களையும் கூறுகிறது.
தங்கத்தின் தத்துவமாக குருவையும், வெள்ளியின் தத்துவமாக சுக்கிரனையும், செம்பின் தத்துவமாக செவ்வாயையும், இரும்பின் தத்துவமாக சனியையும், ஈயத்தின் தத்துவமாக புதனையும் வரையறுத்துள்ளது ஜோதிட சாஸ்திரம்.
நம் முன்னோர்கள் நவ கிரகங்களை மூன்றா கப் பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் பூமியில் நேரிடையாக ஒளியினைக் கொடுத்திடக்கூடிய சூரியனையும் சந்திரனையும் முதலாவதாகவும், சூரியனுடைய ஒளியின் பிரதிபலிப்பாய்த் திகழ்கின்ற செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களை இரண்டாவ தாகவும், ஒளியை இழந்த நிழல் கிரகங்களான ராகு- கேதுக்களை மூன்றாவதாகவும் பிரித்துள்ளனர்.
நிழல்கிரகங்களான ராகு சனியின் காரகத்தையும், கேது செவ்வாயின் காரகத் தையும் கொண்டவர்களாக ஜோதிட சாஸ்திரம் வரையறுத்துள்ளது. இரண்டாவ தாக உள்ள ஐந்து கிரகங்களே பஞ்சபூதத் தத்துவமாக விளங்குகின்றன. இந்த ஐந்து கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திரங்களில் அமர்ந்து வலுப்பெறும்போது தனது காரகங்களினாலும், ஆதிபத்தியங்களினா லும் ஜாதகர்களுக்கு உயர்வுகளை உண்டாக்கு கின்றன.
பஞ்சபூத கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், செவ்வாய், சனி ஆகிய ஐந்தையும் யோக கிரகங்கள் என்றே சொல்லலாம். குரு, சுக்கிரன், புதன் ஆகிய சுப கிரகங்கள் அம்ச, மாளவ்ய, பத்ர யோகங்களை ஜாதகர்களுக்கு உண்டாக்கி அதிர்ஷ்டத்தையும் பாக்கியத் தையும் ஏற்படுத்துகின்றன.
ரோமம், தோல், தசை, எலும்பு, நரம்பு ஆகியவற்றை நிலமும்; உதிரம், உமிழ்நீர், நிணம், விந்து, மஞ்சை ஆகியவற்றை நீரும்; பயம், சோம்பல், தூக்கம், கோபம், அகங்காரம் ஆகியவற்றை நெருப்பும்; அசைவு, சுருக்கம், விரிவு, நோய்ப்படுதல், ஒடுங்குதல் ஆகியவற்றைக் காற்றும்; ஆசை, மோகம், வஞ்சனை, உட்பகை, திமிர் ஆகியவற்றை ஆகாயமும் தங்களுடைய ஆளுகைக்குள் வைத்திருப்பதாகவும் சாஸ்திரம் சொல்கிறது. நம்முடைய உடல் என்பது பஞ்சபூத சக்திகளின் உள்ளடக்கம் என்பதை இதன் வழியாக நாம் தெரிந்துகொள்ள முடியும்.
இவற்றின் அடிப்படையில்தான் பஞ்ச பூதங்களின் உருவமான நமது உயிர் அனைத்து சக்திகளையும் ஆட்டிவைக்கிறது. பஞ்ச உலோகங்கள் நம்முடைய உடலை அண்டத் துடன் இணைப்பதாக சித்தர்கள் கூறி வைத்துள்ளனர். இதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் தங்கள் உடலில் பஞ்ச பூதங்களின் உலோகத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக ஐம்பொன்னை அணிந்ததாகவும் கூறப்படுகிறது.
இக்காலத்தில் அதிர்ஷ்டக்கல் பற்றி பேசுகிறோம். ஒவ்வொருவரும் அவரவர் ராசி, நட்சத்திரங்களுக்கேற்ப அதிர்ஷ்டக்கல் மோதிரம் அணிகிறோம். ஐம்பொன்னில் ஆனவற்றை அணியும்போது, அதிலுள்ள தாது சத்துகளின் ஈர்ப்புசக்தி நம் உடலை இயக்க ஆரம்பிக்கும் என்பது அறிவியல்ரீதியாகவே கண்டறியப்பட்டுள்ளது.
ஐம்பொன் ஆபரணம் என்பது அதிக காந்த ஈர்ப்பு, ஞானசக்தி, அறிவாற்றல், ஆன்மிக சக்தி, புத்துணர்ச்சி ஆகியவற்றுடன் கூடி உடலை ஊக்குவிக்கும் சக்தி கொண்டதாகக் கூறப் படுகிறது.
பஞ்சபூதங்கள் நம்மை ஆட்சிசெய்வதாகக் கூறப்படும் நிலையில், ஜோதிட சாஸ்திரத்தி லுள்ள பன்னிரண்டு ராசிகளையும் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களே பிரித்தாளுகின்றன.
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்றும் நெருப்பு ராசிகளாகவும்; ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்றும் நில ராசிகளாகவும்; மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசி களாகவும்; கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்றும் நீர் ராசிகளாகவும் உள்ளன.
பன்னிரண்டு ராசியினரின் குணநலன், உடற்கூறு, தொழில், குலதெய்வம், குடும்பம், சகோதரம், சுகம், பூர்வபுண்ணியம், நோய், வாழ்க்கை, செயல்பாடு, துணை, ஆயுள், யோகம், பணி, லாபம், மோட்சம் ஆகிய அனைத்தையும் அவர்களுடைய ராசிக்குரிய பூதங்களை வைத்தே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
திருமண வாழ்க்கைக்கு பத்துப் பொருத்தம் பார்பதுபோல், பஞ்சபூத சாஸ்திரத்தில் அடங்கி யுள்ள ராசிகளின் தத்துவத்தையும் பார்க்க வேண்டும்.
நீர் தத்துவ ராசிகளுடன் நெருப்பு தத்துவ ராசி களை இணைத்திடக்கூடாது என்கிறது பஞ்சபூத சாஸ்திரம். நெருப்பு என்பது சுடர் விட்டுப் பிரகாசிக்கக்கூடியதும், பரவிடக் கூடியதுமாகும். இத்தகைய நெருப்பு ராசியினரை நீர் தத்துவ ராசியினருடன் இணைக்கும்போது, நீரில் நெருப்பு அணைவதுபோல், நீர் ராசியினரைத் துணையாகக் கொள்ளும் நெருப்பு ராசி யினரின் சுயம் மறைந்து, நீர் ராசியினருக்குக் கட்டுப்பட்டு, அவர்களின் நலனுக்காக மட்டுமே வாழக்கூடிய அடிமைநிலை உண்டாகும்.
நிலத்தில்தான் நீர் பாய்ந்து செல்லும். நிலமும் நீரும் ஒன்றுடன் ஒன்று இணைந் திருப்பவை என்பதால், நீர் தத்துவ ராசினருடன் நிலத் தத்துவ ராசியினரை இணைக்கலாம் என்கிறது பஞ்சபூத சாஸ்திரம். நெருப்பு பரவுவதற்கு காற்று அடிகோலும் என்பதால், காற்று தத்துவ ராசியினருடன் நெருப்பு தத்துவ ராசியினரை இணைக்கலாம் என்றும் கூறுகிறது.
மனித உடலின் ஐம்புலன்கள் மட்டுமல்ல; ஐவகை குணங்களும் பஞ்சபூதங்களால் ஆனது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். நெருப்பின் அம்சத்தைப் பெற்ற ராசியினர் வலிமையானவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும், அனைவரையும் எளிதில் ஈர்த்திடக்கூடியவர்களாகவும், அனைவராலும் அன்பு செலுத்திடக்கூடியவர்களாகவும், எந்த ஒன்றையும் விரைவாக கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாகவும், புரிந்துகொள்ளக் கூடியவர் களாகவும் இருப்பதுடன், தனது குறிக்கோளை யும் இலக்கையும் நோக்கிப் பயணம் செய்யக் கூடியவர்களாகவும், ஒவ்வொரு சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். உயர்ந் தோங்கும் நெருப்பின் அம்சமுடையவர்கள் என்பதால் கர்வமிக்கவர்களாகவும் இருப்பார் கள். இவர்களின் மரணமானது இதயம் செயலிழப்பதால் திடீரென்று நிகழக்கூடும். காரவகை உணவுகள் நெருப்பின் அம்சத்தை உடலில் நிறைக்கும்.
நீரின் அம்சத்தைப் பெற்ற ராசியினர் அழகானவர்களாகவும், வசீகரமான உடலமைப்பு உள்ளவர்களாகவும், உடலாலும் மனதாலும் இளகிய தன்மை கொண்டவர்களாக வும், அனைத்துவிதமான சூழ்நிலைகளையும் அனுசரித்துச் செல்பவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் இருப்பார்கள்.
நீரின் அம்சத்தில் குறைபாடு உண்டாகும் போது அதிகபட்ச பய உணர்வும், தாழ்வு மனப் பான்மையும் உண்டாகும் என்பதால், உணவில் இனிப்புச் சுவையை சேர்த்துக்கொள்வதால் நீரின் அம்சம் அதிகப்படும். இந்த ராசியினரின் மரணம் சிறுநீரகம் செயலிழந்து, அதனால் சருமம் சுருங்கி அதன்பின் நிகழுமென்று கூறப் படுகிறது.
நிலத்தின் அம்சத்தைப் பெற்ற ராசியினர் திடகாத்திரமானவர்களாக இருப்பார்கள். பொறுமையாளர்களாகவும் சாதுர்யம் மிக்கவர்களாகவும் இருப்பதுடன், அனைவரையும் ஈர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடமுள்ள ரகசியத்தை அவ்வளவு சீக்கிரத்தில் எவராலும் அறியமுடியாது.
இவர்களுக்குள் மண்ணின் அம்சம் குறையத் தொடங்கும்போது கவலைகள் தோன்றக் கூடும் என்பதால், அதன் அம்சத்தை சரிசெய்ய உணவில் புளிப்பினை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவர்களின் மரணமானது மண்ணீரல் பாதிக்கப் பட்டு, அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு அதன் பின் உண்டாகும் என்று குறிப்பிடப்படுகிறது.
காற்றின் அம்சத்தைப் பெற்ற ராசியினர் பலம் பொருந்தியவர்களாகவும், வேகமாக செயல்படக் கூடியவர்களாகவும், யாராலும் கட்டுப்படுத்திட முடியாதவர்களாகவும் இருப்பதுடன், தோள்வலிமை மிக்கவர்களாகவும், இயல்பாகவே அதிகமாக உணவுண்பவர்களாகவும் இருப்பார்கள்.
காற்றின் அம்சத்தில் குறைபாடு உண்டாகும் போது ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சினைகளும் செயல்பாடுகளில் சுணக்கமும் உண்டாகும் என்பதால், உணவில் துவர்ப்புச் சுவையை சேர்த்துக் கொள்வதால் காற்றின் அம்சம் அதிகரிக்கும். இவர்களின் மரணமென்பது நுரையீரல் செயலிழந்து, உடல் வலிமையிழந்து, கைகளைக்கூட தூக்க முடியாத நிலை ஏற்பட்டு நிகழும்.
பன்னிரண்டு ராசிகளும் நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கிற்குள் அடங்கிவிடுவதைப் பார்க் கும் நாம், ஆகாயத்தின் நிலை என்ன? அதற்கென்று எந்தவொரு ராசியும் இல்லையா என்று யோசிக்க லாம். நிலம், நீர், காற்று, பூமி ஆகியவற்றுக்குப் போர்வையாக- அவற்றை ஆகாயம் தன்னுள் அடக் கிக்கொண்டுள்ளது என்பதே உண்மை.
நம்முடைய வாழ்க்கையாகவும், உலகத்தின் இயக்கமாகவுள்ள பஞ்சபூதங்களுக்கும் மூலமாக விளங்குபவர் சிவபெருமானே என்பதை பஞ்ச பூதங்களின் தலங்களை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆகாயத்திற்குரிய தலமாக சிதம்பரத்திலுள்ள நடராஜர் ஆலயமும், நிலத்திற்குரிய தலமாக காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும், நீருக்குரிய தலமாக திருவானைக்காவலிலுள்ள ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயமும், நெருப்பிற்குரிய தலமாக திருவண்ணாமலையிலுள்ள அருணாச்ச லேஸ்வரர் ஆலயமும், காற்றுக்குரிய ஆலயமாக காளஹஸ்தியிலுள்ள காளத்தீஸ்வரர் ஆலயமும் திகழ்கின்றன.
இந்த பிரபஞ்சத்தின் ஐந்துவகை தொழிலான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குபவர் பஞ்சபூதங்களின் வடிவமாகத் திகழும் சிவ பெருமான் ஒருவரே என்கிறது புராணம்.
பஞ்சபூதங்களின் ஆலயங்கள் ஒவ்வொன்றிலும் "ஓம் நமசிவாய' என்னும் மந்திரம் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பதைக் கேட்டி ருப்பீர்கள். "ஓம்' என்ற பிரணவ மந்திரம் பஞ்சபூதங்களில் அடங்கியும் அனைத் திற்கும் மூலமாகவும் உள்ளது. "நமசிவாய' என்னும் திருவைந்தெழுத்து பஞ்சாட்சர மந்திரமென்று கூறப்படுகிறது.
"நமசிவாய' என்பதற்குள் மறைந்துள்ள சூட்சுமம், நலிகாரம் நிலத் தத்துவத்தையும், மலிகாரம் நீர் தத்துவத்தையும், சிலிகாரம் நெருப்பு தத்துவத்தையும், வலிகாரம் வாயு தத்துவத்தையும், யலிகாரம் ஆகாயத் தத்துவத் தையும் குறிக்கின்றன. இதன் பொருட்டே "நமசிவாய' என்று பஞ்சபூதங்களையும் "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை முன் வைத்து "ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய' என்று ஒலித்து ஒலித்து, பஞ்சபூதங்களையும் அதன் ஒட்டுமொத்த வடிவமான சிவ பெருமானையும் நினைந்து நினைந்து உருகி உருகி, அவன் அருளில் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பஞ்சாங்கத்தின் அங்கங்களான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்திலும் பஞ்சபூதங்களே அடங்கியுள்ளன. திதிக்கு நீருக்குரிய சுக்கிரனும், வாரத்திற்கு நெருப்பிற்குரிய செவ்வாயும், யோகத்திற்கு ஆகாயத்திற்குரிய குருவும், கரணத்திற்கு நிலத்திற்குரிய புதனும், நட்சத்திரத்திற்கு காற்றுக்குரிய சனியும் அதிபதிகளாக விளங்குகின்றனர். பஞ்சபூதங்களையும் நம் உடலில் வலிமைபடுத்திக் கொண்டால் நம் உடலில் நோய்நொடிகள் தோன்றுவதற்கு வழியில்லை என்றும், பஞ்சபூதங்களின் தத்துவத்தில் ஒன்று குறைவுபட்டாலும் உடலில் நோய்களும் மனதில் துயரங்களும் உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
பஞ்சபூதங்களின் அம்சத்தை வழங்கி டக்கூடிய காரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப் பினை உணவில் சரிசமமாக இணைத்துக் கொள்வதுடன், தங்கள் பூத தத்துவத்திற் குரிய உணவுவகையை சற்று கூடுதலாக எடுத்துக்கொள்வதும், பஞ்சபூத ஆலயங் களுக்குச் சென்று வழிபடுவதும் உடல் வலிமையையும் மன வலிமையையும் அதிகரித்திடும் வழியென்று பஞ்சபூத சாஸ்திரம் கூறுகிறது.
செல்: 94443 93717