3-குரு
3, 12, 21, 30, 39, 48, 57, 66, 75, 84, 93, 102 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்: 3, 12, 21, 30-ஆம் தேதிகளில் பிறந்தவர்களும் குருவின் ஆதிக்கம் பெற்றவர்கள்.
மூன்றாம் எண் குருவின் ஆதிக்கம் கொண்டது. ஒன்பது எண்களில் 3-ஆம் எண்ணிற்குத் தனி மகத்துவம் உண்டு. அடக்கம், பொறுமை, பெரியோருக்குக் கீழ்ப்படிதல், தன்னம்பிக்கை, நீதி, நேர்மை, கௌரவம் ஆகிய குணங்கள் மிகுதியாகவே இருக்கும். முன்னோர்களைப் பின்பற்றி நடப்பவர்கள். முன்னோர்களின் நல்லாசி பெற்றவர்கள். முறையாக பித்ருக்கள் வழிபாடு செய்பவர்கள். ஆழ்ந்த மதப்பற்றுடையவர்கள். தேசபக்தி நிறைந்தவர்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவிசெய்வார்கள்.
மற்றவர்கள் போற்றத்தக்க குணங் களைக் கொண்டவர்கள். எதையும் நேர்வழி யில் செய்யக்கூடியவர்கள். குறுக்குவழி யில் செல்பவரையும் திருத்தி நல்வழிப்படுத்து வார்கள். உற்றார்- உறவினர்களுக்கு உதவி புரியும் குணம் கொண்டவர்கள். தன்னை நம்பி வருவோர்க்கு நிச்சயம் உதவி செய்வார் கள். பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். தங்களை மற்றவர்கள் மதிக்கவேண்டும்; தங்களது ஆலோசனைகளையும் கேட்கவேண்டுமென்று எதிர் பார்ப்பார்கள். அழகான- ஆடம்பரமான ஆடை அணிவதிலும், தங்களை அழகுபடுத்திக் கொள்வதிலும் ஆர்வமுண்டு.
புகழ், அந்தஸ்து, சுயகௌரவம் இவர்களது தாரக மந்திரம். அறநெறியில் விருப்பமுடையவர்கள். உண்மை விளம்பிகள். கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள். பழைய சாஸ்த்திரங்கள், பழைய பழக்கங்கள் ஆகியவற்றின்மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். எனவே, கட்டுப்பாடுகளை மீறமாட்டார்கள். இவர்கள் பேசும்போது இறைவன், விதி, நியாயம், மனசாட்சி, நேர்மை போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துவார்கள். சுதந்திரமாக வாழ விரும்பு வார்கள்.
சொத்துகள் விஷயத்தில் உடன்பிறந்தவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு எதார்த்தமாக இருப்பார்கள். பொருளாதார உயர்வுண்டு. பார்ப்பதற்குக் கடுமையானவர்களாகத் தோன்றினாலும், வெள்ளை மனதுடன் அன்பாக மற்றவர் களிடம் பழகுவார்கள்.
அன்பிற்கு அடிபணிவார்கள். அதிகாரத்திற்கும், ஆணவத்திற் கும் அடிபணிய மறுப்பார்கள். பிறரிடம் யாசகம் பெற விரும்பாதவர்கள். பிறருக்கு உபதேசம் செய்யக்கூடிய ஆற்றலை மிகைப்படுத்தும் எண். புதிய நாகரிக முன்னேற்றங் களைக் குறைகூறுவார்கள். குறுக்குவழியில் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளத் தயங்கு வார்கள்.
ஜனனகால ஜாதகத்தில் குரு நன்மையைத் தரும் நிலையில் இருந்து, மூன்றாம் எண் ஆதிக்கத்தில் பெயர் அமைந் தால், அவர்கள் அறிவைத் தூண்டும் தொழில்களான ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தத்துவப் பேராசிரியர்கள், மேலாளர்கள், மத போதகர் கள், அர்ச்சகர்கள், தத்துவ மேதைகள், மந்திரி, கௌரவமான தொழில், நீதிபதிகள், அரசுத் துறை, நீதித்துறை, வங்கி அதிகாரிகள், ஆலோசகர் பதவி, எழுத்துத் துறை ஜோதிடம், பேச்சுத் தொழில், நுண்ணிய சாஸ்திர ஆராய்ச்சியாளர்கள், புத்தக விற்பனை, பள்ளிகள் நடத்துதல், பேப்பர் கடை, அச்சுத் தொழில், எழுத்து போன்ற துறைகளிலும் பிரகாசிப்பார்கள். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்றவற்றில் கௌரவப் பதவி வகிப்பார்கள். அரசியல் ஈடுபாடும் உண்டு. அதில் நன்கு பிரகாசிப்பார்கள். நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள்.
இவர்கள் 3, 12, 21, 30; 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களையும்; கூட்டு எண் 3, 9-ல் பிறந்த வர்களையும் தொழில் கூட்டாளிகளாகவும், நண்பர்களாகவும் வைத்துக்கொள்ளலாம். 1, 2-ஆம் எண்களாலும் நன்மை ஏற்படும். 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களிடமும், கூட்டு எண் 6, 8 வரும் நபர்களிடமும் கவனமாக இருக்கவேண்டும்.
இவர்கள் 1, 3, 9 ஆகிய எண்களில் பிறந்த வர்களைத் திருமணம் செய்துகொண்டால் (பிறவி எண் அல்லது விதி எண்) வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும். 2-ஆம் எண்காரர்களையும் மணந்துகொள்ளலாம். தங்களது கலாசாரத்தைவிட்டு வெளியேவரத் தயங்குவார்கள் என்பதால் காதல் இவர்களுக்கு வெற்றியைத் தராது. நல்ல வாழ்க்கைத் துணை இயற்கை யாகவே அமைந்துவிடும்.
அன்பான பெற்றோர்கள், உடன்பிறப்புகள், பண்பான குழந்தைகள் என நல்ல குடும்ப வாழ்க்கை அமையும்.
3-ஆம் எண்காரர்களால் அனைவருக்கும் நன்மைகளே ஏற்படும். இவர்கள் மற்ற அனைவரையும்விட தாங்கள்தான் அறிவிலும், அதிகாரத்திலும் உயர்ந்து விளங்கவேண்டும் என்ற எண்ணமும், அதற்கேற்ற உழைப்பும் உண்டு. பிறரைக் கட்டுப்படுத்தி, தனது ஆதிக்கத்தைச் செலுத்தவேண்டும் என்னும் தீவிர எண்ணங்களும் உண்டு. அடுத்தவரைப் புகழ்ந்துபேசத் தயங்குவார்கள்.
கடுமையான உழைப்பாளிகளான இவர்களுக்கு 3-ஆம் எண்ணின் பலம் குறைந் தால் இவர்களின் உழைப்பை மற்றவர்கள் எளிதாகப் பயன்படுத்திக்கொண்டு, அவர்கள் நல்லபெயர் பெறுவார்கள். இந்த எண்ணின் வலிமை குறைந்தால் தன்னம்பிக்கை குறையும். தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, முன்னேறத் தெரியாமல் முடங்கிக் கிடப்பார்கள். அல்லது திறமையை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் அமையாது. இந்த எண்களில் பிறந்த பல திறமைசாலிகள் வாழ்க்கையில் முன்னேறாத தற்கு இதுதான் காரணம். கடன்கள், எதிரிகளால் பாதிப்பு நிச்சயம் ஏற்படும்.
குருவின் பலம் குறைந்த வர்களுக்கு மஞ்சள் காமாலை, மூளை, ஈரல், கல்லீரல், பித்தப்பை, உடலில் கட்டிகள், எலும்பில்லாத உறுப்பு களில் அடிக்கடி தொந்தரவுகள் உண்டு.
3-ஆம் எண்ணின் பலத்தை அதிகரிக்க தங்கம் சிறந்த உலோகமாகும். மஞ்சள் மற்றும் பொன்நிற உடைகளை அணியலாம். கருநீலம், கருப்பு, பச்சை நிறங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். புஷ்பராகம், கனகபுஷ்பராகம் கற்கள் நல்ல பலன்களைத் தரும். தினமும் குரு காயத்ரி படிக்க, கேட்கவேண்டும். வியாழக் கிழமை கொண்டைக்கடலை தானம் தரலாம்.
பெயரெண்- 3: தனித்த குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். சிறந்த சிந்தனையாளர்கள். பொறியியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற ஏதாவதொரு துறையில் வல்லுநர்களாக வருவார்கள். உழைப்பையும் புத்திசாலித்தனத் தையும் வெற்றியையும் மகிழ்ச்சியான வாழ்க் கைக் கல்வியையும்- அந்தக் கல்வியால் பெரிய பட்டங்களையும் அடைவார்கள். வாழ்க்கையின் பிற்பாதி மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும்.
பெயரெண்- 12: சூரியன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் இணைந்த எண். பேச்சுத்திறமை உண்டு. இவர்களின் திறமையான பேச்சாற்றலே வாழ்க்கை உயர்வுக்குக் காரணமாக அமையும்.
பிறருக்காக பல கஷ்டங்களையும் சந்தோஷத் துடன் ஏற்பார்கள். பல சமயங்களில் பிறருக்கா கவே உழைப்பார்கள். சிறந்த எழுத்தாளராகவும் இருப்பார்கள். கதை, கவிதை போன்றவற்றில் அதிக ஈடுபாடிருக்கும். 21 வயதிற்கு மேல்தான் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
பெயரெண்- 21: சந்திரன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் சேர்ந்த எண். அதிகாரமாகப் பேசி தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வார்கள். படிப்பு, தொழில் ஆகியவற்றில் இவர்கள் சுயமாகவே போராடி முன்னேறிவிடுவார்கள். இளமையில் வறுமையுடன் வாழ்பவர்கள். அலைபாயும் (எண்- 2) வாழ்க்கையானது, இவர்களது திட்டமிட்ட உழைப்பால் இன்பவாழ்வாக (எண்- 1) மாறிவிடும். காரணம், சந்திரன் சூரியனுடன் சேர்ந்து மூன்றாக மாறுவதால், நல்ல பிற்கால இன்பவாழ்க்கையுண்டு. தன் சந்தோஷத்திலும் லாபத்திலும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பணத்தால் சாமர்த்தியமாக எதையும் சமாளிப்பார்கள். வாழ்க்கையின் முதல்பாதி சோதனையாக இருந்தாலும், பிற்பாதி வெற்றியும் சந்தோஷமும் நிறைந்ததாக இருக்கும்.
பெயரெண்- 30: வாழ்க்கையில் தனியாகப் போராடப் பிறந்தவர்கள். தாய்- தந்தை, உறவினர்களின் ஆதரவு குறைவாகவே கிடைக்கும். நுண்ணிய அறிவு மற்றும் தீர்க்கமான யோசனையால் இஷ்டம்போல் செயல்படுவார்கள். அடுத்தவர் மனதை சுலபமாக அறிந்து வெற்றிபெறுபவர்கள். தங்கள் தகுதியால் நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள் ஆகிய பெரும்பதவிகளை வகிப்பவர்கள். சாகசங்கள் பல புரிபவர்கள். உயிர்பயம் ஏற்படும். பொருளாதாரநிலை சீராக இருக்காது.
பெயரெண்- 39: குரு மற்றும் செவ்வாய் சேர்க்கை கலந்த பிரதிபலன் தரும் எண். தீவிர உழைப்பாளி. புகழுக்காக உழைத்தாலும் புகழ்பெற மாட்டார்கள். பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் சளைக்காமல் உழைப்பார்கள். நடுவயதில் இவர்கள் பல வாழ்க்கைப் பிரச்சினைகளை சந்திப்பார்கள். ஆரோக்கியக் குறைவுண்டு. இவரின் உழைப்பு இவரைவிட பிறருக்கே பயன்படும். வாழ்வின் பிற்பகுதியில் தாங்கள் பெற்ற அனுபவங்களைக்கொண்டு ஆனந்த மான வாழ்க்கை வாழ்வார்கள்.
பெயரெண்- 48: ராகு மற்றும் சனியின் ஆதிக்கம் ஒருங்கிணைந்த எண். நித்தியகண்டம், பூரண ஆயுளான வாழ்க்கை அமையும். திடீர் ஏற்றம் அல்லது எதிர்பாராத இறக்கம் மிகைப்படுத்தலாக இருக்கும். தங்களுக்கு பரிச்சயமில்லாத தொழிலில் ஆர்வத்துடன் இறங்குவார்கள். எல்லாம் தெரிந்தவர்கள்போல் பாசாங்கு செய்வார்கள். அல்லது கடின உழைப்பில் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். மத விஷயங்களில் தீவிரவாத எண்ணமுண்டு. பொதுக் காரியங்களில் எதிர்ப்பு ஏற்படும். சோதனை அதிகம் ஏற்படும். சக்திக்கு மிஞ்சிய காரியத்தைச் செய்வார்கள். "நல்லதுக்குகே காலமில்லை' என்பார்களே- அது இவர்களுக்கு மிகப் பொருந்தும். நல்லதைச் செய்தாலும் சிரமப்படுவார்கள்.
பெயரெண்- 57: புதன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண். சுயநலம் மிகுந்தவர்கள். எப்போதும் தங்களின் நலன் பற்றியே சிந்திப்பார்கள். வாழ்க்கையின் முற்பகுதியில் பல ஏற்றத்தாழ்வுகள்மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவார்கள். உலகத்தில் புதிதாக ஏதாவது சாதிக்கவேண்டுமென்று நினைத்துச் செயல்படுவார்கள். அதன்மூலம் பெரும் புகழும் செல்வமும் அடைவார்கள். ஆரம்பத்தில் வெற்றியும் முடிவில் தோல்வி யும் ஏற்படும். வேகமாக முன்னேறிய வாழ்க்கை திடீரென அப்படியே நின்று, சாதாரணமானவராக இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் யாரையாவது காதலித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்களிடம் அன்பாக- பரிதாபமாகப் பேசுபவர்களிடம் உடனே காதல்வயப்படுவார்கள். காதல் தோல்வி இவர்கள் வாழ்க்கையை நரகமாக்கும். வாழ்க்கை யில் அடிக்கடி ஏமாறுபவர்கள்.
பெயரெண்- 66: சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த எண். அழகு, ஆடம்பரம் பற்றிய சிந்தனை மிகையாக இருக்கும். கலையுணர்வு உண்டு. இசை, நாட்டியம், நடிப்பு, சின்னத் திரை, சினிமா போன்றவற்றில் இவர்களின் பங்களிப்பு பாராட்டத்தகுந்த வகையில் இருக்கும். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றி அனுசரித்துச் செல்பவர்கள். ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழித்து, பின்பு வருந்துவார்கள். பேச்சாற்றல் மிக்கவர்கள். அரசாங்க ஆதரவு, சுகபோக வாழ்க்கையுண்டு. இனிமையாகப் பேசி எதிரிகளை வசப்படுத்து வார்கள். தனிமையில் சிந்திப்பதில் நாட்டமுள்ள வர்கள். அரசியல் தொடர்பும் ஏற்படும்.
பெயரெண்- 75: கேது மற்றும் புதனின் பண்புகள் இணைந்த எண். மிகுந்த திறமைசாலிகள். பணத்தைவிட சுயதிருப்தியை பிரதானமாக நினைப்பார்கள். எதையும் துருவித்துருவி ஆராயும் குணமுண்டு. உயிராபத்து வந்தால் கூட பயப்படாமல் சாதனைசெய்ய விரும்பு பவர்கள். பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை இருக்காது. ஒற்றர்கள், தூதர்கள், துப்பறிவாளர்கள் போன்றவர்கள் இந்த எண்காரர்களே. திடீரென புகழ் ஏற்படும். வெகுவிரைவில் அதிக நண்பர்களை அடை வார்கள். கதை, கவிதை, கட்டுரை எழுது வார்கள். இசைக் கலையில் தனித்துவம் படைப்பவர்கள். வாழ்வில் மிகக்குறுகிய காலத்தில் முன்னேற்றம் அடைவார்கள். காதலுக்காக உயிரையும் தியாகம் செய்பவர்கள்.
பெயரெண்- 84: சனி மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். பால்ய வயதில் கஷ்டமான வாழ்க்கை, வீண் விரோதமுண்டு. கவலையே அதிகம். முயற்சிக்குத் தகுந்த முன்னேற்றம் இருக்காது. தீவிரவாதியாக மாறுவார்கள். காரணமே இல்லாமல் பலருடைய விரோதமும் எதிர்ப்பும் ஏற்படும்.
பெயரெண்- 93: செவ்வாய் மற்றும் குருவின் ஆதிக்கம் நிறைந்த எண். கௌரவம் எப்போதும் கிடைக்கும். தனிமை யிலே சிந்திப்பதில் நாட்டமுள்ளவர்கள்.
அரசியல் தொடர்பும் ஏற்படும். காரியங்களை சாதிக்கும் வல்லமை மிக்கவர்கள். உலக அறிவு மிகுதியாக உண்டு. ஆசைகளை நிறைவேற்றும் எண். பல தொழில்களால் லாபமுண்டு. வெளிநாட்டு வாணிபம் தொடர்புடைய தொழில்கள் சிறப்படையும். பல அரிய காரியங்களை சாதிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
பெயரெண்- 102: சூரியன் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண். பொதுவாக பூஜ்ஜியத்துடன் இணைந்த எண்கள் சுபப் பலனைத் தருவதில்லை. ஆரம்பத்தில் வெற்றியும் நடுவில் சோர்வும் முடிவில் குழப்பமும் ஏற்படும். விசேஷ மான பலன்களைத் தராது. வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும்.
எண் 3-ல் பெயர் வைக்கும்போது 39, 48, 57, 84, 102 ஆகிய எண்களில் பெயர் வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
அதிர்ஷ்ட தேதிகள்: 3, 9, 12, 18, 21, 27,30.
அதிர்ஷ்டக் கிழமை: வியாழன், திங்கள்.
அதிர்ஷ்ட ரத்தினங்கள்: கனகபுஷ்பராகம், புஷ்பராகம், தங்கநகைகள்.
அதிஷ்ட திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பொன்னிறம், ஆரஞ்சு போன்ற செம்மையான நிறங்கள்.
அதிர்ஷ்ட தெய்வங்கள்: தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், பிரம்மா.
அதிர்ஷ்ட மலர்கள்: முல்லை, சம்பங்கி.
அதிர்ஷ்ட சின்னங்கள்: யானை, புலி, தங்க ஆபரணம், தந்தம், கஜலட்சுமி.
அதிர்ஷ்ட மூலிகை: குப்பைமேனி.
அதிர்ஷ்ட உலோகம்: தங்கம்.
(தொடரும்)
செல்: 98652 20406